அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜவான்'. முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு முன்னோட்ட நிகழ்வு நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லீ, ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர்.
இயக்குநர் அட்லீ பேசுகையில், ''இப்படத்தின் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்தபோது, ஷாருக் உங்கள் விருப்பம் என்றார். நான் அப்போது டார்லிங் நயன்தாராவை முன்மொழிந்தேன். அவரும் சம்மதித்தார். அதன் பிறகு நயனிடம் பேசி கதையை சொன்ன பிறகு அவரும் சரி என்றார். இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்தபோது, நான் விஜய் சேதுபதியை சொன்னேன். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். அவரும் என்னை சௌகரியமான சூழலில் வைத்துக் கொண்டார். கதையைப் பற்றி நிறைய பேசினோம். இந்த படத்தில் அவரும் ஒரு ஹீரோதான். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அவர் தனக்கான பாதையை அவரே தேர்வு செய்து கொண்டு பயணிக்கிறார். எல்லோரும் அவருடன் பயணிப்போம். இந்த படத்தில் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
அடுத்ததாக படத்தின் இசையமைப்பாளராக யாரை பணியாற்ற வைப்பது என்று விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, என்னுடைய சகோதரரும், நண்பனுமான அனிருத்தை தொடர்பு கொண்டேன். படத்தின் பணிகள் குறித்து விவரித்து, ஒரே ஒரு மெட்டை எனக்காக போட்டு தாருங்கள். அதை ஷாருக்கிற்கு அனுப்பி அவரின் முடிவை அறிந்து கொள்கிறேன் என்றேன். உடனடியாக 'சிங்க பெண்ணே சித்திரப் பூ..' எனத் தொடங்கும் மெட்டை உருவாக்கி கொடுத்தார். அந்தப் பாட்டு வேற லெவலில் இருந்தது. அவர் இசையமைக்க தொடங்கினார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருக்கிறது. அனிருத்துடன் பணியாற்றுவது என்பது வகுப்புத் தோழருடன் இணைந்து பணியாற்றுவது போல் எளிதானது. யோகி பாபு மீது தமிழ் திரையுலகில் தவறான விசயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் கால்ஷீட் தரவில்லை. சம்பளம் அதிகமாக கேட்கிறார் என்று. ஆனால் எனக்குத் தெரிந்து பல உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் வாங்காமல் கால்ஷீட் கொடுத்து அவர்களுக்கு உதவி இருக்கிறார். முத்தழகு, நான் படிக்கும் காலகட்டத்தில் அவர் மீது ஈர்ப்பு இருந்தது.
குட்டியை பிரசவிக்கும் தருணத்தில் மான் ஒன்று அந்த காட்டில் பிரசவம் செய்வதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து கொண்டு இருந்தது. ஒரு பக்கம் நீரோடை, மறுபக்கம் முட்புதர். இதுதான் சரியான இடம் என்று தேர்வு செய்து கொண்டிருந்த கணத்திலேயே அந்த மானுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குட்டி பிறந்துவிடும் என்ற மகிழ்ச்சியிலிருந்த அந்த மானுக்கு திடீரென்று மேகம் கருத்து மழை வரும் என்ற அறிகுறி தென்பட்டது. அந்த மானின் வலப்பக்கத்தில் ஒரு புலி, வேட்டையாடுவதற்காக மானை பார்த்துக் கொண்டிருந்தது. புலி நம்மை மட்டுமல்ல நம் குட்டியையும் கடித்து தின்று விடுமே என்ற தவிப்பில் அந்த தாய் மான் இடப்பக்கம் பார்த்தபோது அங்கு ஒரு வேடன் வில்லில் அம்பைப் பொருத்தி வேட்டையாடுவதற்காக குறி பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து கண்ணை மூடியதாம்.
கண்ணை மூடுவதற்கு முன் ஒரு விசயம் நடந்தது. மேகம் கருத்து இடி இடித்து அந்த மரம் எரிந்தது. ஒரு பக்கம் புலி மற்றொரு பக்கம் வேடன். திரும்பவும் ஒரு இடி இடித்தது. அந்த அதிர்ச்சியில் வேடன் எய்த அம்பு புலி மீது பாய்ந்தது. மழை பெய்து அந்த காட்டுத் தீ அணைந்து விட்டது. உங்களை சுற்றி ஆயிரம் எதிர்நிலை ஆற்றல்கள் இருந்தாலும் உங்களுடைய கவனம் உங்கள் பணியின் மீது இருந்தால் போதும். வெற்றி நிச்சயம். என் வெற்றியின் ரகசியம் என் மனைவி தான். அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு எதனோடும் ஒப்பிட இயலாது.'' என்றார்.