
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (10-02-25) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. 2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்ட வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்! உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன!” என்று பதிவிட்டுள்ளார்.