Skip to main content

பரிசு வாங்கச் சென்ற மாணவி; பெண்ணுடன் சேர்ந்து ஆசிரியர் செய்த வெறிச்செயல் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :82

Published on 01/10/2024 | Edited on 01/10/2024
thilagavathi ips rtd thadayam 82

கியாத்தி ஸ்ரேஸ்தா என்ற இளம்பெண்ணுடைய வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

கியாத்தி ஸ்ரேஸ்தா என்ற இளம்பெண் கடத்தப்பட வழக்கில் பலமுறை கடத்தல்காரர்கள் தொலைபேசியில் அழைத்து பல இடங்களுக்கு பணத்தை கொண்டு வரச்சொல்லி பெற்றோரை அழைக்கழித்தனர். கடைசியாக கடத்தல்காரர்கள் பெற்றோருக்கு கால் செய்து காட்மண்டில் உள்ள காகர்குட்டா பகுதிக்கு பணத்தை எடுத்துக் கொண்டு வருமாறு கியாத்தியினுடைய அம்மாவுக்கு மிரட்டல் விடுத்து பணத்தை கொண்டு வர வீட்டில் வேலை செய்து வரும் ராம் என்ற பையனையும் அழைத்துவர கொல்லியுள்ளனர். இதையடுத்து கியாத்தி ஸ்ரேஸ்தா அம்மா மற்றும் ராம் இருவரும் கடத்தல்காரர்கள் சொன்ன பகுதிக்கு சென்றுள்ளனர். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு... 

இம்முறை பணத்தை வாங்க ஒரு நபர் வருகிறார். அவர் தன் அடையாளங்களை மறைத்துக்கொண்டு வந்து பணப்பெட்டியை ராமிடம் இருந்து வாங்கினார். அப்போது ராம், அந்த நபரின் அடையாளங்களை பார்த்து நீங்கதான அந்த ஆசிரியர் என்று கூறியுள்ளார். இது தெரியாமல் இருக்க அந்த ஆசிரியர் ராமையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். பல போராட்டங்களுக்கு பிறகு ஆசிரியரிடமிருந்து தப்பித்த ராம், கியாத்தி ஸ்ரேஸ்தா அம்மாவிடம் வந்து பணம் வாங்க வந்த நபர் விரேந்தர் ஆசிரியர்தான் என்று சந்தேகத்தின் பேரில் கூறினான். அதன் பிறகு ராமை அமைதிப்படுத்தி வெளியே சொல்லாத நம்ம பொண்ணு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் கியாத்தி அம்மா இருந்தார். இதையடுத்து மூன்று நாள் ஆகியும் கியாத்தி வீட்டிற்கு வரவில்லை. 

அதன் பின்பு சுதாரித்துக்கொண்ட கியாத்தி அம்மா, தன் கணவரிடம் பணம் கொடுத்தும் நம்ம பொண்ணு வராததால் காவல்துறைக்கு போகலாம் என்று முடிவு செய்து அந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் நடந்ததை கூறியுள்ளனர். இதை கேட்ட காவலர்கள் முன்பே எங்களிடம் சொல்லி இருந்தால் இந்தளவிற்கு பிரச்சனை வந்திருக்காது என கியாத்தியின் பெற்றோரை விளாசியுள்ளனர். மேலும் உங்களுக்கு யாரு மேலாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்க அந்த ஆசிரியரைப் பற்றி கூறுகின்றனர். இதையடுத்து போலீஸார் அவரை தேடி விசாரணை மேற்கொண்டதில், 42 வயதான அந்த ஆசிரியருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், குழந்தைகளை தனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு மேற்படிப்புக்கு அவரது மனைவி வெளிநாடு சென்றதும் தெரியவந்தது. மேலும் அவரைப் பற்றி விசாரித்ததில், தன்னிடம் படிக்கும் ஒரு மாணவியை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தவறான செயலில் நடந்துகொண்டதாக சில வதந்திகள் இருந்தது. 

வாத்தியாரிடம் இருந்த மெரினா சக்கியா என்ற மாணவி தான் தொலைபேசியில் கியாத்திக்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறாள். இப்போது இரண்டு மாணவிகளும் காணாமல் இருக்கும் சூழலில் போலீஸார் வலைவீசி தேட ஆரம்பித்தனர். இதற்கிடையில் கியாத்தில் காணமல் போன பத்து நாட்கள் கழித்து புலிகள் சரணாலயம் அமைந்துள்ள சித்வன் பகுதியின் காவல் நிலையத்திற்கு ஒரு அட்டைப்பெட்டி ஒன்றில் கால் மட்டும் நீட்டிக்கொண்டு இருக்கிறது என்று தகவல் வருகிறது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்த இன்ஸ்பெக்டர் லக்‌ஷ்மன் கிரி, துண்டுத்துண்டாக அட்டைப்பெட்டியில் ஒரு பெண்ணின் கை கால்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியாகி பின்பு அடையாளம் தெரியாமல் இருப்பதால் விசாரிக்க முடியாமல் பிணவறையில் உடலை பாதுகாத்து வைக்கிறார். இதையடுத்து, சில நாட்கள் கழித்து லலித்பூர் என்ற அருவியில், இடுப்பிற்கு மேல் கழுத்து வரைக்கும் உள்ள ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அதன் பிறகு கியாத்தி காணமல் போய் 24 நாட்கள் கழித்து ராணிவர்னன் என்ற பகுதியில் கியாத்தியின் தலைப்பகுதி அழுகிய நிலையில் கிடைக்கிறது. இதற்கிடையில், காட்மண்ட் பகுதியில் தலைமறைவாகி இருக்கும் ஆசிரியரை கண்டுபிடித்து கைது செய்து விசாரிக்கையில் அவரும் செய்த தவறை ஒப்புக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து மெரினா சக்கியாவையும் கண்டுபிடித்து போலீஸார் விசாரிக்கையில், தன்னை வாத்தியார் மிரட்டி சில விஷயங்களை செய்ய சொன்னதாக கூறினாள். 

தொடர்ந்து மெரினா சக்கியாவை விசாரிக்கையில், கியாத்திக்கு மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸை கொடுத்ததாகவும், அது மட்டும்மில்லாமல் கியாத்திக்கு ட்ரக்ஸ் கொடுத்து மயக்கமடைய செய்து பணம் கேட்டதாகவும் கூறினார். இதையெல்லாம் விரேந்தர் பிரதான் ஆசிரியர் மிரட்டியதின் காரணமாக செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் கியாத்தி மயக்கமடைந்த நிலையிலும் ஆசிரியரை அடையாளம் கண்டுவிட்டதால், அவர் இரும்பு ராடை எடுத்து அடித்து கொன்றதாகவும் அதை மறைக்க கியாத்தியின் தலை மற்றும் உடல் பாகங்களை தனித்தனியாக அறுத்தாகவும் மெரினா சக்கியா உண்மையை கூறியுள்ளார். இந்த சம்பவம் நேபாளம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி பல போராட்டங்கள் வெடித்தது. அதன் பிறகு, அந்த நாட்டின் ஹோம் மினிஸ்டர், உயிரிழந்த அந்த குழந்தையின் பெற்றோருக்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார். கியாத்தி கொலை வழக்கில் விரேந்தர் பிரதான் ஆசிரியருக்கு 39 ஆண்டுகளும் கொலைக்கு துணைபோன மெரினா சக்கியாவுக்கு 34 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது இப்படித்தான் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.