உங்களுடைய ஒவ்வொரு உறுப்பும் வரிசையாக செயல் இழந்து வருகிறது என கலங்கிய கண்களுடன் மருத்துவர்கள் சொன்னபோது "அதனால் என்ன... மூளை இன்னும் செயல் இழக்கவில்லையே" என சிரித்த முகத்தோடு சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய நரம்பியல் நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது ஸ்டீபன் ஹாக்கிங் பேசிய வார்த்தைகள் இவை. ஐன்ஸ்டீனுக்கு பிறகு இவ்வுலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஒரே இயற்பியல் விஞ்ஞானி இவர் மட்டும்தான். 'இந்த உலகம் எப்படி தோன்றியிருக்கும்?' என்ற கேள்வி சிறு வயதில் நம் எல்லோருக்கும் இயல்பாக எழுந்திருக்கும். அதற்கான விடையை நாம் தேட முயற்சித்திருக்கமாட்டோம். பலர் அதை தேடி, கடவுள் என்ற பதிலுடன் அந்தக் கேள்விக்கும் அது குறித்தான கற்பனைக்கும் முழுக்கு போட்டிருப்போம். ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இந்தக் கேள்வியை அணுகிய விதம் வேறு. அதன் விளைவாக மனதிற்குள் தட்டிய அந்த சிறு பொறி அனைத்தையும் கரைத்துக் குடித்த அறிவு பொங்கி வழியும் மூளைக்கு சொந்தக்காரராக அவரை மாற்றியது. பொங்கி வழிந்த அந்த அறிவைப் பயன்படுத்தி அவர் எழுதிய 'A Brief History Of Time' எனும் நூல் இதுவரை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இவரை விட தலைசிறந்த ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் இனி தோன்றலாம். ஆனால் இனியொரு ஸ்டீபன் ஹாக்கிங் தோன்றுவதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
வலுவில்லாத மெல்லிய உடல், அதில் பாதி செயல் இழந்த உறுப்புகள், வாழ்வின் முக்கால்வாசி நாட்கள் சக்கர நாற்காலியில் முடக்கம், வாய்பேச முடியாத நிலை என ஒரு மனிதனால் தாங்கக்கூடிய சோதனைகளை விட அதிகம் அனுபவித்தவர். இத்தனைக்கும் மத்தியிலும் அவர் செய்த கருந்துளைகள், பிக்பேங் கோட்பாடு, காலப்பயணம் குறித்தான ஆராய்ச்சிகள் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு யாரும் தொட முடியாத எல்லை. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் சாதாரணமாக டைப் செய்வதற்கு நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம்? கன்னத்தில் செயல் இழந்த தசைகளுக்கு மத்தியில் இருந்த ஒரு சில செயலிழக்காத தசைகளின் அசைவுகள் மூலம் ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்து கணினி உதவியுடன் தன் கடைசிகாலம் வரை பேசி வந்திருக்கிறார் என்பது மிகவும் வியக்கத்தக்கது..
சூத்திரங்கள், சமன்பாடுகள், விதிமுறைகள் என சிக்கலான இயற்பியலுக்கு தன்னுடைய ஆராய்ச்சியால் எளிய இலக்கணம் எழுதிய ஸ்டீபன் ஹாக்கிங் வெற்றி குறித்து கூறியது... "ஆம்... வாழ்க்கை சிக்கலானது தான், அதற்கான தீர்வும் அதில்தான் உள்ளது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழுங்கள். நான் சக்கர நாற்காலியில் முடங்கும் போது அனைவரும் வருத்தப்பட்டனர். உண்மையிலேயே அது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான். நான் அவ்வாறு முடங்கியிருக்காவிட்டால் பல விஷயங்களில் கவனம் செலுத்தியிருப்பேன். நிச்சயமாக இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக ஆகியிருக்க முடியாது. ஊனம் என்பது என் உடலுக்குத்தானேயொழிய மனதிற்கு அல்ல. முடிவுகளை எதிர்பார்த்து உழைக்காதீர்கள். நம்முடைய வேலை, உழைப்பது மட்டுமே. என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக தீவிரமாக உழைத்தேன். அதன் முடிவு வரும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன் என என்னுடைய மருத்துவர்கள் எனக்கு நாள் குறித்து வைத்திருந்தனர். ஆனாலும் உழைத்தேன். ஒருமுறை அப்படி உழைக்கப் பழகிவிட்டால் உங்களால் அதில் இருந்து விடுபட முடியாது. வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவைத் தன்மையோடு அணுகுங்கள். இன்னும் இரண்டு வருடங்களில் நீ இறந்து விடுவாய் என எந்த மனிதருக்கு மருத்துவர்கள் நாள் குறித்தார்களோ அதே மனிதன்தான் "நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள்தான் நேரமிருக்கிறது... வேறு கிரகத்தை தேடிக் கண்டுபிடிக்க" என நமக்கு நாள் குறித்து விட்டுச் சென்றிருக்கிறார். தான் நடக்க இயலாத நிலைக்கு ஆளான போதும் அதை நேர்மறையாகப் பார்த்து உலகுக்கே பயன்படும்படி வாழ்ந்தவர். அந்த நம்பிக்கையும் உழைப்பும்தான் அவரைப் பற்றி பேச வைக்கிறது, பேச வைக்கும்...