கணவனைக் கொன்ற மனைவி பற்றிய வழக்கு குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் விவரிக்கிறார்.
நான் ஏசியாக இருந்தபோது நடந்த ஒரு வக்கீலின் கொலை வழக்கு இது. வக்கீல் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடக்கிறார் என்று என்னை அழைத்தனர். பங்களா போன்ற வீடு அது. வெளிக்காயங்கள் எதுவுமின்றி வக்கீல் இறந்து கிடந்தார். கொள்ளையர்கள் வீட்டுக்கு வந்து தன்னுடைய கணவரை அடித்துக் கொன்றுவிட்டு வீட்டிலுள்ள நகைகளைத் திருடிச் சென்றதாக மனைவி தெரிவித்தார். நாங்கள் விசாரித்தபோது நாய் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு கொள்ளையர்கள் வந்தனர் என்று அவர் தெரிவித்தார். ஆனால் கதவு உடைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் அங்கு இல்லை.
அந்த நேரத்தில் பையன் எங்கே படுத்திருந்தான் என்பதில் தாயும் மகனும் இருவேறு கருத்துக்களைக் கூறினர். எங்களுக்கு சந்தேகம் வந்தது. வக்கீலின் மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்ததாகக் கூறினார். அவரை ஒருநாள் மாந்தோப்பில் இன்னொரு பையனோடு பார்த்ததாகக் காவலர் ஒருவர் கூறினார். சொந்தக்காரர்கள் யாராவது அருகில் இருக்கிறார்களா என்று கேட்டபோது வக்கீலின் சொந்தக்காரப் பையன் ஒருவர் இருப்பதாகக் கூறினார் அந்தப் பெண். அந்தப் பையன் தான் மாந்தோப்பில் இந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த பையன்.
அந்தப் பெண்ணிடம் விசாரித்தேன். என்னையே சந்தேகப்படுகிறீர்களா என்று கேட்டார். சொந்தக்காரப் பையனிடம் விசாரித்தேன். வக்கீலிடம் வேலை செய்வதற்காக அந்தப் பையன் அழைத்து வரப்பட்டிருக்கிறான். வேலைக்கு வரும்போது வக்கீலின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதை ஒருநாள் வக்கீலின் தாயார் பார்த்துவிட்டார். மருமகளைக் கண்டித்தார். இதன் காரணமாக வக்கீலின் தாய் கொல்லப்பட்டார். வக்கீலையும் கொல்ல வேண்டும் என்கிற திட்டம் அவர்களுக்கு இருந்தது. இந்தப் பையனின் வருகை குறித்த சந்தேகங்கள் அக்கம் பக்கத்தினருக்கு வந்து, அந்தத் தகவல் வக்கீலுக்கு தெரிவிக்கப்பட்டது. மனைவியை அவர் கண்டித்தார். பின்பு வக்கீலும் அதேபோல் கொல்லப்பட்டார்.
இந்த உண்மைகள் அனைத்தையும் அந்தப் பையன் என்னிடம் தெரிவித்தான். நகைகள் அனைத்தையும் ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்ததாக இருவரும் தெரிவித்தனர். ஆறுமாத காலமாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை அடகு வைத்து வந்துள்ளனர். கொலை செய்ததற்காகவும், கொலையை மறைத்ததற்காகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அந்தப் பெண் வேலை செய்த பள்ளியைச் சேர்ந்தவர்கள் அவருடைய குழந்தைகளைப் படிக்க வைத்து வளர்க்கின்றனர்.