Skip to main content

குழப்பத்தில் இருந்த எம்.ஜி.ஆர்... தனிக்கட்சி ஆரம்பிக்கச் சொன்ன கம்யூனிஸ்ட்! சின்னங்களின் கதை #4

Published on 13/05/2019 | Edited on 28/05/2019

எம்.ஜி.ஆருக்கு வயதாகிக் கொண்டிருந்தது. அவருடைய பேச்சு தெளிவில்லாமல் இருந்தது. கட்சியின் பொருளாளர் என்ற பொறுப்பிலும் இருந்தார். அமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தையும் 1971 தேர்தல் முடிந்தவுடன் கலைஞரிடம் வெளிப்படுத்தினார். ஆனால், அமைச்சரானால் அவர் திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கலைஞர் கூறியதால் அந்தக் கோரிக்கையிலிருந்து பின்வாங்கியிருந்தார். எனவேதான் எம்.ஜி.ஆரை கட்சியிலும் ஆட்சியிலும் பங்கேற்கச் செய்யும் நோக்கில் கலைஞர் சில நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்பட்டது.

 

navalar kalaignar mgr



அன்றைய நிலையில் எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்பட ஷூட்டிங்குகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்றன. அந்தப் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதித்த அன்னிய செலாவணியைக் காட்டிலும் கூடுதலாக செலவான விவரம் மத்திய அமலாக்கத்துறை, வருமானவரித்துறையிடம் இருந்தது. அது தேசவிரோத குற்றத்திற்கு சமமாகும். போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அதையே எம்.ஜி.ஆரை மிரட்ட பயன்படுத்தினார்கள். தனக்கென்று நல்லவர் என்ற இமேஜை வைத்திருந்த எம்.ஜி.ஆர் துணிச்சலாக எதிர்த்து நின்றிருந்தால் மத்திய அரசை டேமேஜ் செய்து மேலும் தனது செல்வாக்கை அதிகரித்திருக்கலாம். ஆனால், வழக்கு, தண்டனை ஆகியவற்றுக்குத் தயங்கிய  எம்.ஜி.ஆர் திமுகவை உடைக்க உடன்பட்டார்.


திமுக நடத்திய மதுரை மாநில மாநாட்டு செலவுக் கணக்கை தம்மிடம் ஒப்படைக்க கலைஞர் மறுத்தார் என்று குற்றம் சாட்டினார்  எம்.ஜி.ஆர். அண்ணா மறைந்த பிறகு நடந்த முதல்வர் பதவிக்கான போட்டியில் கலைஞருக்கு எதிராக இருந்த நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆரின் எதிர்ப்பை பயன்படுத்த விரும்பினார். பொதுச்செயலாளர் என்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு அவர் கடுமையாக பதில் அளித்தார். உள்கட்சி விவகாரங்களை பொதுமேடையில் பேசியது மிகப்பெரிய குற்றம் என்றார்.

 

 

ulagam sutrum valiban



எம்.ஜி.ஆரை சமாதானம் செய்ய கலைஞர் விரும்பியபோதும் பிரச்சனையை பூதாகரமாக்குவதில் வெற்றிபெற்றார் நெடுஞ்செழியன். கலைஞரின் நண்பர்களாக இருந்த மதுரை முத்து உள்ளிட்ட சிலரும் எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து எம்.ஜி.ஆர் தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக நெடுஞ்செழியன் அறிக்கை வெளியிட்டார்.


அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்த எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் தனியாகப் பிரிந்தன. தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க விரும்பவில்லை. ஆனால், அவருடைய ரசிகர்கள் தனிக்கட்சி தொடங்க விரும்பினார்கள். அவர்கள் கருப்பு சிவப்பு கொடியில் தாமரைப் படத்தை ஒட்டிப் பறக்கவிட்டனர். அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சிப் பெயரையே பதிவு செய்துவிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கவில்லை. தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றும் கூறிக்கொண்டிருந்தார். அவர் காங்கிரஸுக்கு போவார் என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருந்தன. அவருடன் எம்எல்ஏக்கள் வருவார்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் வருவார்கள், மாவட்டச் செயலாளர்கள் வருவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

 

 

mgr iratai ilai



எம்.ஜி.ஆர் செல்வாக்கானவர். அவரால்தான் திமுக ஆட்சியையே பிடித்தது என்றெல்லாம் இப்போது பேசப்படுகிறது. ஆனால் அப்போது எம்.ஜி.ஆருடன் கட்சியிலிருந்து வெளியேறியது அவருடைய ரசிகர்கள் மட்டும்தான். அதிலும் விவரமான அரசியல் தலைவர்கள் யாரும் வரவே இல்லை. ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை, கட்சியையும் கைப்பற்ற முடியவில்லை. அதேசமயம்  எல்லா ஊர்களிலும் தொடங்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மன்றங்கள் அனைத்தும் கட்சிக்கிளைகளாக மாற்றப்பட்டன. இதைப்பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆரை தனிக்கட்சி தொடங்கும்படி ஆலோசனை சொன்னார். அதைத்தொடர்ந்தே அதிமுகவை தொடங்க எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவுசெய்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்குவதாகவும், கருப்பு சிவப்பு கொடியின் நடுவில் அண்ணா படம் இருக்கும் கொடியை பயன்படுத்துவதாகவும் எம்.ஜி.ஆர் அறிவித்தார். கட்சியைத் தொடங்கிவிட்டபோதும் தனது 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை வெளியிடும் வேலையில் அவர் கவனமாக இருந்தார்.


இந்த சமயத்தில், திண்டுக்கல் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த எம்.ராஜாங்கம் மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக முதல்முறையாக போட்டியிட்டது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்விலும் கலைஞரை திசைதிருப்பியவர்களில் மதுரை முத்து முக்கியமானவர். பிரமலைக்கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள தொகுதியி்ல் ராஜாங்கத்தின் மனைவியை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கலைஞர் கூறியதை மதுரை முத்து ஏற்கவில்லை. வாடிப்பட்ட ஒன்றிய சேர்மனாக இருந்த பொன்.முத்துராமலிங்கத்தை அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர். அதிமுக சார்பில் கே.மாயத்தேவர் என்பவரை எம்.ஜி.ஆர் நிறுத்தினார். தேர்தல் முடிவில் கே.மாயத்தேவர் வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து அந்தத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தையே தனது கட்சியின் நிரந்தரச் சின்னமாக ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டார்.


அடுத்த பகுதி:

நெருக்கடி நிலைக் காலத்தில் எம்.ஜி.ஆரின் அரசியல்! சின்னங்களின் கதை #5


முந்தைய பகுதி:

அதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்! சின்னங்களின் கதை #3