Skip to main content

'சாம்பவி சங்கர்' எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர்... மரண முகூர்த்தம் #3

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

marana muhurtham series part 3

 

தியாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்று, அவளது அம்மா சொன்னதும், நடுரோட்டில் பாம்பைக் கண்டால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிப்போமே, அதைப் போலத் தவித்தாள் கவி. 

"ஷாலு.. தியாவை ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம்" என்று கம்மியக் குரலில் சொன்னாள் கவி.

"என்னடி சொல்றே... என்ன.. ஆச்சு"... என்று ஏழரைக்  கட்டைச் சுதியில் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள் ஷாலு.

"நானும், உன் கூடத் தானே இருக்கேன். எனக்கென்ன தெரியும்? வா ஆஸ்பிட்டல் போவோம். அங்க போய்ப் பார்த்தால் தான் தெரியும்” என்றபடி டியோவின் காதுகளைத் திருகினாள். அது கோபத்தில் சீறியது.

 

வேக வேகமாக ஆஸ்பிட்டல் வளாகத்துக்குள் நுழைந்து, அதைவிட வேகமாக வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, உள்ளே  ஒருவரும் ஓடினார்கள்.

 

ரிசப்ஷன் அருகிலேயே  தியாவின் அம்மா சுந்தரியும், அப்பா கதிரும் கண்ணீருடன் இருந்தனர். கவியைப்  பார்த்ததும். வெட்டிய வாழைமரம் போல அவள் தோளில் சாய்ந்து கதறினாள் சுந்தரி.

 

"அம்மா... என்னாச்சும்மா. தியா தூங்கிட்டான்னுதானே நாங்க வீட்டிற்குப் போனோம். அதுக்குள்ள என்னம்மா நடந்தது?" என்று படபடப்பாகக் கேட்டாள் கவி. ஷாலுவோ, அதிர்ச்சி விலகாமல் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.

 

"என்னத்த சொல்வேன்? தூங்கி எழுந்து மறுபடியும் வெறித்துப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தா. அவ அப்பா, என்னம்மா, இப்படியே இருந்தா எப்படிம்மா நாளைக்கு பள்ளிக்கூடம்  கிளம்புவ? எழுந்திரிச்சி உட்காரு. உங்க பிரின்ஸ்பால்ட்ட சொல்லி, நானே உன்னை ஸ்கூல்ல விடுறேன். உன்னை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. எதுக்கும் பயப்படாதன்னு  அன்பாத்தான் சொன்னார். ஆனா, தியா என்னை விட்டுடுங்க, நான் ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்சா, அவங்க அப்பா தான், பள்ளிக்குப் போகாம எப்படி பரீட்சை எழுத முடியும்ன்னு, கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசினார்...” என்று விம்மலுடனும் அழுகையுடனும் சொன்னாள் சுந்தரி.

”அம்மா, இதெல்லாம் இருக்கட்டும்.  இப்ப தியா எந்த வார்டுல இருக்கா? எப்படி இருக்கா? அவ உடம்புக்கு என்னாச்சு?” என்று படபடப்பு மாறாமல் கேட்டாள் கவி.

”அப்பா ஸ்கூலுக்குப் போகச் சொல்லித் திட்டறார்ன்னு, அவ  எலி மருந்தை சாப்பிட்டுட்டாம்மா."...என்று சொல்லும் போதே, அவளிடமிருந்து அழுகை வெடித்தது.

" பாய்சனா? ஐயோ... எப்படிம்மா இப்படி? அவளை பத்திரமா பார்த்துக்க வேண்டாமா? ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு தெரியலை. அதைப்பத்தி தெரிஞ்சிக்காம, ஸ்கூலுக்குப் போன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஏற்கனவே மிரண்டு போய் இருக்கிறவளை, மேலும் மிரளவச்சிருக்கீங்களே?” என்று சற்று உரத்த குரலில் பேசினாள் கவி. 

 

பேசிக்கொண்டே அவர்கள் எமர்ஜென்சி வார்டை நோக்கி  நடந்தனர். மருத்துவமனை முழுக்க, நோயாளிகளின் உறவினர்கள்தான், குளிக்காமல், சரிவரத் தூங்காமல், பிளாஸ்க்கும் கையுமாகப் பரிதாபமாகத் தெரிந்தனர்.  

 

"என்னன்னுமா ஸ்கூல்ல போய் விசாரிக்கிறது. தியாவும் வாயத் திறந்து எதையும் சொல்ல மாட்டேங்கறா. பள்ளிக்கூத்துல போய் மத்த பசங்கக்கிட்ட விசாரிக்கலாம்ன்னா, அங்க கேட்டுக்கு வெளியிலேயே நிக்க வைக்கறாங்க. டீச்சர்ஸும் சரியா பேசமாட்டாங்க. சி.எம்.மை கூட ஈசியா பார்த்துடலாம். பிரின்சிபலைப் பார்க்குறதுக்கு அங்க தவம் கிடக்கனும். தியா  அப்பாவுக்கு இதுக்கெல்லாம் நேரமில்லமா” என்று ஏதேதோ கதை சொல்லிக்கொண்டிருந்தாள் சுந்தரி. 

 

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் டாக்டர் ஒருவர் வேகமாக உள்ளே போனார். அவர் கூடவே நர்ஸ்கள் இரண்டு பேர் பரபரப்பாகச் சென்றனர். சிறிது நேரத்தில் நரஸ் ஒருவர், வேகவேகமாக வெளியே வந்து, எதையோ எடுத்துக் கொண்டு உள்ளே போகும் போது, சுந்தரி "என் மகளுக்கு இப்ப எப்படிங்க இருக்கு"  என்று விசும்பலுடன் கேட்டாள். 

"இப்போதைக்கு நிலைமை ரொம்ப மோசமாகத் தான் இருக்கு”ன்னு சொல்லிட்டு வேகமாக உள்ளே சென்று கதவைச் சாத்தினாள் நர்ஸ். 

 

அதே நேரம் இடியொன்று பயங்கர சத்தத்துடன் இடித்தது. மழை பெய்வது போல் வானம் திடீரென்று இருளத்தொடங்கியது.  காற்றும் வலுத்துப் புழுதி கிளம்புவது, பக்கவாட்டு ஜன்னல் வழியே தெரிந்தது. 

 

மறுபடியும் நர்ஸ், வெளியே வந்து விட்டு பரபரப்பாக உள்ளே போக, கிட்டதட்ட   ’ரமணா’ படத்தில் வரும் ஒரு ஆஸ்பிட்டல் காட்சி. அதைவிடவும்  பல மடங்கு அதிகமாக அங்கே பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.  

 

எல்லோரும் ’திக் திக்’ என அவசர சிகிச்சைப் பிரிவின்  மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் வேகமாக ஓடிவந்து தியாவின் அப்பாவிடம்  ”உங்களை டாக்டர் கூப்பிடறார்... அட்டெண்டர் ரெண்டு பேர் மட்டும் வாங்க” என்று சொல்ல, அதைக்கேட்டுப் பதறிப்போய், தியாவின் அப்பா கதிர், அம்மா சுந்தரி, கவி, ஷாலு என நால்வரும் உள்ளே ஓடினார்கள். அவர்களின் இதயம்,  அவர்களுக்கு முன்பாகவே எகிறிக் குதித்து... கீழே விழுந்து உருண்டோடியது. அவசர சிகிச்சைப் பிரிவின் சில்லிப்பு.... குருத்தெலும்புவரை தொட்டு, அவர்களின் பீதியை அதிகரித்தது....

 

திக் திக் தொடரும்..
 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர்.. மரணமுகூர்த்தம் #2

 

 

சார்ந்த செய்திகள்