தான் சந்தித்த வித்தியாசமான வழக்கு ஒன்று குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு பெண் தன்னுடைய மகனைக் காணவில்லை என்று வழக்கு கொடுக்க என்னிடம் வந்தார். தன் மகன் சிறுவயதில் இருக்கும்போதே தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்றும், 18 வயதான தன் மகன் இப்போது எங்கிருக்கிறான் என்பதே தெரியவில்லை என்றும் கூறினார். அந்தப் பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு நிறைய இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களான அவர்களுடைய வீட்டில் நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்தனர்.
விவாகரத்து பெற்றபோது மகன் சிறுவனாக இருந்ததால் தாயோடு இருக்க வேண்டும் என்றும், 18 வயதுக்குப் பிறகு அவன் முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. பூனை வளர்ப்பில் அவனுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் ஆஸ்துமா நோயாளியான தாய்க்கும் அவனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தது. வீடு முழுக்க நிறைய பூனைகளை வளர்ப்பது அவனுக்கு ஒரு மனநோய் போல் ஏற்பட்டது. இந்த சண்டையில் தாயோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு அவன் வெளியேறினான்.
இடையில் அவன் தன்னுடைய தந்தையை அடிக்கடி சந்தித்து வந்திருக்கிறான். பூனை வளர்ப்பில் அவனுக்கு ஈடுபாடு இருப்பது தெரிந்து அவனுக்கு நிறைய பூனைகளை அவனுடைய தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார். தவறான விஷயங்களை அவனுடைய மனதில் விதைத்தார். மகனைத் தன் பக்கம் இழுக்க முயன்றார். வீட்டை விட்டு வெளியேறிய அவனை நாங்கள் பின்தொடர்ந்தோம். அவனுடைய தந்தை அவனுக்குத் தனியாக வீடு எடுத்துக் கொடுத்திருந்தார். அவனுடைய தாயிடம் இதுகுறித்து நாங்கள் தெரிவித்தோம்.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெற்றோர் அதிகம் வற்புறுத்தும்போது குழந்தைகள் அதை மீறி செயல்படுவார்கள். எனவே அவனுடைய தாய்க்கும் நாங்கள் கவுன்சிலிங் கொடுத்தோம். அந்தப் பையனுக்கு நீண்ட முயற்சிக்குப் பிறகு நாங்கள் கவுன்சிலிங் கொடுத்தபோது அவன் மனதில் இருக்கும் விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டான்.