Skip to main content

"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! தாராவி கதைகள் #7

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியின் தற்போதைய நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

ஒரு காலத்தில் 45 பள்ளிகளாக இருந்த தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது 20 பள்ளிகளாக குறைந்துவிட்டன. தாராவியில் இருந்த 2 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. பம்பாயில் வசிக்கும் நம் குழந்தைகள் எதற்குத் தமிழ் படிக்க வேண்டுமென்று நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்ததன் விளைவுதான் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு காரணம். தாராவி என்பது தமிழர்களின் கோட்டை, தாராவி என்பது இன்னொரு தமிழ்நாடு என்ற பிம்பம் ஏறக்குறைய 90 விழுக்காடு நொறுங்கிவிட்டது. 

 

80களில் ஒலிம்பிக் நேரத்தில் கலர் டிவியை இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதி இருந்தது. அதற்கு முன்பு தாராவி பகுதியில் கலர் டிவி கிடையாது. சில குடிசைகளில் 60 எம்.எம் வெள்ளைத் திரையில் சினிமா ஓட்டுவார்கள். அதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் எனக் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்குதான் பார்க்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இதற்கான வசதி இருந்தது. இதை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ரௌடியாகத்தான் இருப்பார்கள். 3 மணிக்கு ஒரு சினிமா, 6 மணிக்கு ஒரு சினிமா, இரவு 9 மணிக்கு ஒரு சினிமா போடுவார்கள். இதில், 9 மணி சினிமா என்பது ப்ளூ ஃபிலிம்மாக இருக்கும். இதில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது மாதிரியான கலாச்சார சீர்கேடு நிகழ்வுகள் நடப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் போலீசாருக்கும் ஒரு பங்கு செல்லும். சில நேரங்களில் மேலதிகாரி அழுத்தம் காரணமாக ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்படும். அந்த நேரங்களில் ரெய்டு வரும் விஷயத்தை முன்கூட்டியே இவர்களிடம் தெரிவித்துவிடுவார்கள். 

 

50 பேர் கூடி ப்ளூ ஃபிலிம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதனால் தாராவி பகுதிக்குள் நிறைய வன்முறைகள் நடந்தன. ஒருகட்டத்தில் இதை இழுத்து மூட வேண்டுமென பெண்களே போராட ஆரம்பித்துவிட்டனர். அதுபோக தாராவி தமிழர்களுக்குப் பெரிய சிக்கல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் இருந்தது. தமிழ்நாட்டில் ஏதாவது கொலை செய்துவிட்டு தாராவி பகுதிக்குள் வந்து பதுங்கிக்கொள்வார்கள். அப்படி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் இருந்தது. இதனால், அடிக்கடி தாராவி பகுதிக்குள் போலீசார் வந்துசென்றனர். படம் பார்ப்பது, ரம்மி விளையாடுவது மாதிரியான பொழுதுபோக்குகள் மட்டுமே அங்கிருந்த மக்களுக்கு இருந்தன.

 

அதைத் தவிர்த்து, இலக்கியக் கூட்ட விழா நடந்தாலும் பெரும்பாலான மக்கள் அதில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கக் கூடிய ஆட்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் வெறும் 20, 30 ஆட்கள் மட்டுமே இலக்கியக் கூட்டங்களில் வந்து நேரடியாகக் கலந்துகொள்வார்கள். அதுபோக அரசியல் ரீதியான பட்டிமன்றங்கள் நடைபெறும். திமுகவினர் வந்தால் ஜெயலலிதா அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா என தலைப்பு வைத்து நடத்துவார்கள். அதுவே அதிமுகவினர் வந்தால் கருணாநிதி அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா எனத் தலைப்பு வைத்து நடத்துவார்கள். எங்களுக்கு இது சரியாகப்படவில்லை. ஒருமுறை இதுமாதிரியான பட்டிமன்ற நிகழ்வுக்கு வந்தவர்களிடம் அரசியல் பேச வேண்டாம்; அதற்குப் பதிலாக திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுங்கள் எனக் கூறினோம். முதலில் அவர்கள் தயங்கினாலும் பிறகு சம்மதித்துவிட்டனர்.

 

அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, 'உண்மையோ பொய்யோ இதுவரை ஒரு தலைவனை தூற்றியோ புகழ்ந்தோதான் பேசியிருக்கிறோம். முதல்முறையாக திருக்குறள் பற்றி பேசுகிறோம் என விழாவிற்கு வந்த மூவருமே கண்கலங்கிவிட்டனர். அரசியல் பட்டிமன்றங்கள்தான் இப்படி ஆபாசமாக நடக்குமேயொழிய, இலக்கிய பட்டிமன்றங்கள் மிகக் கண்ணியமான முறையில் நடக்கும். சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்கள் என்றால் கண்ணகிக்கும் மாதவிக்கும் புகழ் பரப்பக்கூடிய அளவிலேயே விவாதங்கள் நடைபெறும். அந்த மாதிரியான தலைப்புகள்தான் தேர்ந்தெடுக்கப்படும். தற்போது இலக்கியக் கூட்டங்கள் எதுவும் அங்கு நடப்பதில்லை. 

 

அன்று பெரிய தலைவர்களாக இருந்த ஆட்களின் பெயர்களைக்கூட இன்றைய ஆட்கள் மறந்துவிட்டனர். தாராவி பற்றி தமிழ் சினிமாவில் கூறியதில் எதுவும் உண்மையில்லை. 'நாயகன்', 'காலா' படங்களில் காட்டியதுபோல எந்தச் சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை. தற்போது வசிக்கும் இடத்தை விற்றுவிட்டு 30 லட்சம், 40 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு புறநகர் பகுதியில் சென்று வசதியாக வாழலாம் என்று நினைத்துதான் தாராவியில் இருந்து தமிழர்கள் வெளியேறத்தொடங்கினார்கள். மராட்டிய அரசோ, மாநகராட்சியோ நம் மக்களைத் துரத்தவில்லை. சினிமாவிற்காகத் தமிழர்கள் அவர்களுக்கு கீழே அடிமையாக இருந்ததுபோல காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்! தாராவி கதைகள் #6