"ஏழையாகப் பிறப்பது உன்னுடைய தவறு அல்ல. ஏழையாகவே நீ இறந்தால் அதுதான் உன்னுடைய தவறு" இவ்வார்த்தைகளை உதிர்த்தவர் கணினி உலகின் முடிசூடா மன்னன் என அறியப்படும் பில்கேட்ஸ். தன்னுடைய 20 வயதில் தொடங்கிய மைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை ஏறக்குறைய 40 ஆண்டுகள் கணினிப் பயன்பாட்டில் முதலிடத்தில் தக்கவைத்துள்ள சாதனைக்குச் சொந்தக்காரர். "நான் எந்த ஒரு கடினமான வேலையையும் சோம்பேறியிடம்தான் கொடுப்பேன். அவருக்குத்தான் அதை எளிமையாகச் செய்து முடிப்பதற்கான வழி தெரியும்"- இதுவே அவருடைய தொழில்மந்திரம். அம்மந்திரத்தை மூலதனமாக்கி அவர் செய்துள்ள சாதனைகளையும் அதன் விளைவாக இன்று அவருக்கு இருக்கும் சொத்து மதிப்பையும் கணக்கிட்டு மாளாது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வில்லியம் ஹெச்.கேட்ஸ், மேரி மேக்ஸ்வெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் பில்கேட்ஸ். தந்தை பிரபல வழக்கறிஞர், தாயார் பள்ளி ஆசிரியை. பில்கேட்ஸின் குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல வளமிக்க குடும்பம். இளம் வயதிலேயே கணினிகள் மீது அவருக்குத் தீராத ஆர்வம் ஏற்பட, 13 வயதில் தன்னுடைய முதல் ப்ரோகிராமிங் மொழியை வெற்றிகரமாக எழுதுகிறார். ஆனால், பில்கேட்ஸின் பெற்றோரோ அவரை ஒரு வழக்கறிஞர் ஆக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். பெற்றோரின் வற்புறுத்தலால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்கிறார். பில்கேட்ஸின் கணினி ஆர்வத்தை மேலும் அதிகரிக்க அப்பல்கலைக்கழகம் அவருக்குச் சரியானத் தளமாக அமைந்தது. அவருக்குள் இருந்த முழுநேரத் தொழில்முனைவராக வேண்டும் என்ற வேட்கை, கல்லூரிப்படிப்பை உதறி தள்ளத் தூண்டியது. கல்லூரிப்படிப்பை பாதியில் கைவிட்ட பில்கேட்ஸ், தன்னுடைய இளமைக்கால நண்பன் பால்ஆலன் உடன் இணைந்து தன்னுடைய 20 வயதில் மைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார்.
தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் சார்பில் கணினி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 'ப்ரோகிராம்கள்' வடிவமைத்துக் கொடுக்கப்பட்டன. மைக்ரோசாப்டின் தயாரிப்புகளுக்கென்று சந்தையில் தனி வரவேற்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து பெரு நிறுவனமான IBM நிறுவனத்தின் கணினிக்கு மென்பொருள் மற்றும் இயங்குதளம் தயாரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. வெற்றிகரமாக மைக்ரோசாப்டின் முதல் இயங்குதளம் PC DOS, MS DOS வெளியாகிறது. அதன் வெற்றி தந்த உற்சாகம் 'விண்டோஸ்' எனும் பெயரில் அடுத்தடுத்து புதிய இயங்குதளங்களை உருவாக்கத் தூண்டியது. அதன் விளைவாக இன்று விண்டோஸ் 10 வரை பல புதிய தளங்கள் வெளியாகி கணினி உலகைப் போட்டியில்லாமல் ஆண்டு கொண்டிருக்கின்றன. 'அலுவலகங்களின் ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி இருக்க வேண்டும்' என்பதே பில்கேட்ஸின் கனவு. ஆரம்பக் காலகட்டங்களில் அதனைக் குறிவைத்தே உழைக்க ஆரம்பித்தார். அதன் இரட்டிப்புப் பலனாக இன்று அவர் நிறுவனத்தின் MS OFFICE எனும் மென்பொருள் இல்லாத அலுவலக மேசைகள் இல்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது. அவருக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும் அதனை நோக்கிய கடின உழைப்பும் தான் பில்கேட்ஸினை பற்றி நாம் பேசுவதற்கும் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகை செய்துள்ளது.
தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்துப் பகிரும் பில்கேட்ஸ், "உங்களைச் சுற்றி ஒரு கூட்டத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள். அக்கூட்டம் உங்களுக்குள் உள்ள திறமையான ஒன்றை அடையாளப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்கள் கனவு சாம்ராஜ்யத்தைக் கட்டுவதற்கு உழையுங்கள். இல்லையென்றால் வேறு ஒருவருடைய கனவு சாம்ராஜ்யத்தைக் கட்ட, நீங்கள் உழைக்க வேண்டிவரும். கனவுகள் குறித்து தீர்க்கமான முடிவு எடுங்கள். வெற்றியைக் கொண்டாடுவதை விட முக்கியமானது தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது. அதைச் செய்யத் தவறாதீர்கள். வெற்றிக்கான முதல் சூத்திரமே பொறுமை காப்பதுதான். கனவுகள் வசப்படத் திட்டமிட்டுத் தொடர்ந்து உழைப்பைச் செலுத்துங்கள்" என்கிறார்.
கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...