Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #8

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

marana muhurtham 8

 

அத்தியாயம்- 8

 

கணக்கைப் போட்டுவிட்டு விடை கண்டுபிடிக்கறவங்களா இருந்தாலும் சரி, விடையைப் போட்டுவிட்டு, கணக்கைக் கண்டுபிடிக்கிற சூரப்புலியாக இருந்தாலும் சரி, காலம் போடும் பாவக் கணக்கை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துக் கொண்டாள் கவி.

"டாடி.. வாட்ச் மேன் எப்படி இறந்தாராம்?” என்று கவலையின் உச்சத்தில் கேட்டாள் கவி. 

"சரியாத் தெரியலை. ஸ்கூல் போனால் தான் தெரியும்" 

"டாடி எனக்கு ஈவ்னிங் தானே ஃபிளைட். அதுவரை சும்மாதானே இருக்கனும். அதனால, நானும் உங்க கூட ஸ்கூலுக்கு வரட்டுமா?" 

 

இதுவரை அவள் இப்படிக் கேட்டதில்லை. சிறுவயதில் சிலமுறை ஸ்கூலை எட்டிப்பார்த்ததோடு சரி. ஆண்டு விழாக்களுக்கு பலமுறை அழைத்தும், ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடுவாள். அப்படிப்பட்டவள் கேட்டதும், சற்று யோசித்துவிட்டு "சரி.. வாம்மா" என்றார்.

 

எஸ்.கே.எஸ். சற்று பதற்றமாகவே கார் ஓட்டினார்.

"டாடி நம்ம ஸ்கூல்ல ஒரு உயிர் போயிருக்குங்கறதை நினைச்சா வருத்தமாதான் இருக்கு. அதே நேரம், இதால நம்ம பள்ளிக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. அதனால, அதை எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிப்போம் டாடி. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க" என்று ரொம்பவும் அனுபவசாலி போல் பேசினாள். அது அவருக்கு ஆறுதலாக இருந்தது. 

"ஓகே.ம்மா. நீ சொல்றதைத் தான் நானும் யோசிக்கிறேன்"

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, கார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. 

’தியாவின் மரணத்தைத் தீர்மானித்த இடம் இது. இங்குதான் தியாவை மரணத்துக்கு அனுப்பிய சாத்தான் ஒளிந்திருக்கிறது.’ நினைக்கும்போதே, கவியின் மனதைத் துயரமும் கோபமும் சரிவிகிதமாய் ஆக்கிரமித்துக்கொண்டது. போதாக்குறைக்கு இப்போது இன்னொரு மர்ம மரணம் வேறு.

 

கிரவுண்டில் சில ஆசிரியர்கள் பரபரப்போடு நின்று கொண்டிருந்தனர். எஸ்.கே.எஸ்.ஸை பார்த்ததும், ஓடிவந்து பவ்வியமாக விஷ் பண்ணினார்கள்.

"என்ன... நம்ம ஸ்கூல்ல என்னென்னவோ நடக்குதே ? வாட்ச் மேன் எப்படி... நல்ல மனுஷன்.?"...  குரலில் பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், நிர்வாகி என்ற கெத்துடன் கேட்டார்.

"பாடியை காரில் ஏற்றி,  அவர்  வீட்டுக்கு அனுப்பியாச்சுங்க சார்" என்று பவ்வியமாக சொன்னார் ஒரு ஆசிரியர்.

’மரணம் நடந்த உடனேயே, இறந்தவர் உடலை மின்னல் வேகத்தில் வீட்டுக்குப் பேக் பண்ணிட்டாங்களே?”கவி வாயடைத்துப் போனாள்.

"வாட்ச்மேன் வீட்டிற்கு யார் போனா. அங்க ஏதும் பிரச்சனை இல்லையே?"

"பிரின்சிபல் மேடமும், நம்ம ஸ்கூல் டாக்டரும்  போனாங்க சார். அட்டாக்னதும் அழுது கதறுனாங்க. வேற ஒன்னும் பிரச்சனை இல்லை." என்று ஒரு மூத்த ஆசிரியர் விசுவாசித்தார்.

 

மாணவர்களின் நலனுக்காக ஒரு டாக்டரை நிரந்தரமாகப் பள்ளியில் பணியமர்த்தியிருக்கும் அப்பாவை நினைத்துப் பெருமிதம் கொண்டாள் கவி.

”இந்த இடத்தில்தான் வாட்ச்மேன் மயங்கிவிழுந்தார். தண்ணி தெளிச்சிப் பார்த்தும் மயக்கம் தெளியலை” என்று கிரவுண்டின் ஓரம் ஒரு இடத்தை அவரிடம் காட்டினார்கள்.

 

தண்ணீர் தெளித்த ஈரம் தெரிந்தது. அங்கே திட்டுத் திட்டாய் ரத்தம் உறைந்திருந்ததை கவியின் விழிகள் கவனிக்கத் தவறவில்லை.   

 

கொஞ்சம் நடந்த எஸ்.கே.எஸ்., சட்டெனத் திரும்பி, 

”அதென்ன ரத்தக் கறை” என்றார். அப்பாவும் தன்னைப் போல் கூர்மையாக இருப்பதை எண்ணி மகிழ்ந்தாள் கவி.

”மயங்கி விழுந்தப்ப,  வாட்ச்மேன் வாயில் இருந்தும் மூக்கில் இருந்தும் வழிந்த ரத்தம் அது” என்ற ஒரு ஆசிரியர், காலால் மண்ணைத் தள்ளி, அதை மறைத்தார்.

 

இவர்களிடம் பேசிக்கொண்டே எஸ்.கே.எஸ் பள்ளியில் இருக்கும் அவரின் தனியறைக்குச் சென்றார்.

 

அவரைப் பின் தொடர்ந்து மெளன ஊர்வலம் நடத்துவது போல், ஆசிரியர்கள்  நடந்தனர். கவியும் அவர்கள் பின்னால் போனாள்.

 

கவியை யாரும் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. இப்படி ஒரு ஜீவன் அங்கே புதிதாக இருப்பதைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

 

ஆனால் ஒரு சோடிக் கண்கள் மட்டும் கவியையே பார்த்துக்கொண்டு இருந்தது. கண் இமைக்காமல்.

"என்ன நடந்தது? வாட்ச்மேன் மயங்கி விழுந்ததை முதலில்  யார் பார்த்தது?”ன்னு சுழல் நாற்காலியில் அமர்ந்துகொண்டே கேட்டார் எஸ்.கே.எஸ்.

"பி.டி. டீச்சர் சாதனா தான், அவர் மயங்கி விழறதைப் பார்த்துப் பதறி கூச்சல் போட்டாங்க” என்று ஒரு ஆசிரியர் சொன்னார்.

”அவங்களை வரச்சொல்லுங்க” என்று எஸ்.கே.எஸ் சொன்னதும்... இவரின் அனுமதிக்காகக் காத்திருந்தது போல வாசலில் இருந்த சாதனாவை ஒரு ஆசிரியர் உள்ளே அழைத்தார். 

 

வணக்கம் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்த சாதனாவுக்கு, உடலெல்லாம் ஏ.சியை மீறி வியர்த்தது..

"என்ன நடந்தது மிஸ். நீங்கதான் வாட்ச்மேன்  மயங்கி விழுந்ததைப் பாத்தீங்களா?"என்று அதிகாரக் குரலில் அவர் கேட்டதும், 

"சார்..” என்று ஆரம்பித்தார் சாதனா. தொண்டைக் குழியில் இருந்து வார்த்தை வெளியில் வர மறுத்து ஸ்ட்ரைக் செய்தது. மீண்டும் ”சார்” என்றார். இப்போது லேசாகத் தொண்டையை விட்டு மெல்ல ஓசை நகர்ந்து வரும் போது, அது அபெளடர்ன் ஆகிவிட்டது. அவரது தவிப்பைப் பார்த்த எஸ்.கே.எஸ்

“எதுக்கு இந்தத் தயக்கம்?” என்றார்..

 

சாதனாவோ... "சார் வாட்ச்மேனுக்கு ஹார்ட் அட்டாக் எல்லாம் இல்லை. நெஞ்சில பலமா பந்து பட்டதாலதான் நிலைகுலைஞ்சி விழுந்தார்” சொல்லி முடிப்பதற்குள் இமயமலையே ஏறி இறங்கியது போல் மூச்சிரைத்தார் சாதனா.

 

இதைக்கேட்டதும் திகைப்பும் எரிச்சலும் அவரைத் தாக்க...

"ஏன் மேடம்... என்ன சொல்றீங்க? புதுசா குட்டையப் போட்டு குழப்பறீங்க?  என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லமாட்டீங்களா? எல்.கே.ஜி. புள்ளைங்க மாதிரி பேசற நீங்க, மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பீங்க?” என்று எஸ்.கே.எஸ். சொல்ல, நடுங்கிப்போன சாதனா... கட கட..என்று நடந்ததை ஒப்பிக்க ஆரம்பித்தார்...

"சார் ப்ளஸ் ஒன் மாணவிகள் பிளே கிரவுண்ட்ல ஃபுட் பால் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. வாட்ச் மேன் தாத்தா, அந்தப் பக்கமா ரெஸ்ட் ரூம் போக வந்தவரு, மாணவிகள் விளையாடுவதைக் கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தார். நான் ஃபுட் பாலுக்கு காத்து அடிப்பதற்காக பி.டி.ரூம் வந்து, காற்று அடிச்சிட்டு, கிரவுண்டுக்கு மறுபடியும் போய்க்கிட்டு இருந்தேன். அப்ப திடீர்ன்னு பறந்துவந்த ஒரு பால், வாட்ச்மேன் நெஞ்சில் தொம்முன்னு தாக்குச்சு. ஐயோன்னு நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு, அப்படியே சுருண்டு விழுந்துட்டார்... ஓடிப் போய் பார்த்தால், மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் ரத்தம் வழிஞ்சிது. உடனே மத்த டீச்சர்ஸைக் கத்திக் கூப்பிட்டேன்.  யார் அடிச்ச பந்துன்னு தெரியலை. மாணவிகளும் நாங்க இல்லைன்னு சொன்னாங்க. அந்த நேரத்தில் அது பத்தி விசாரிக்க முடியாம, அங்க இருந்த ஸ்டூட்ன்ஸை வகுப்புக்கு அனுப்பிட்டேன்."என்று  நடந்ததை ரீ பிளே பண்ணினார் சாதனா.

 

இடையில் குறுக்கிட்ட இன்னொரு ஆசிரியர்...

"சார்,  உடனே  நம்ம டாக்டரை வரவச்சோம். அவர் பார்த்துட்டு வாட்ச்மேனுக்கு உயிரில்லைன்னு சொல்லிட்டார். உடனே உங்களுக்குத் தகவல் சொல்லிட்டு, அவர் உடம்பை பேக்கப் பண்ணிட்டோம்” என்று விளக்கினார்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே  பிரின்சிபலும் , டாக்டரும் அனுமதி பெற்று அறையினுள் வந்தனர். என்னாச்சு என்பது போல பார்த்தார் எஸ்.கே.எஸ்.

"சார்,  பந்து வேகமா வந்து தாக்கியதால், நெஞ்சில் பலமா அடிபட்டிருக்கு. அது இதயத்தைத் தாக்கியதால்தான் ரத்தப்பெருக்கு. உடனே பிளட்டைக் கிளீன் பண்ணித்தான் பாடியைக் கொண்டு போனோம். வாட்ச் மேன் மனைவி கிட்ட  அட்டாக்ன்னு சொல்லியாச்சு. இன்னும் பிராப்ளம் இல்லை”என்று டாக்டர் சொன்னார்.

"அவருக்கு ஏற்கனவே இதயப் பிரச்சனை இருந்ததாலே ஹார்ட் அட்டாக்ன்னு சொன்னதை ஏத்துக்கிட்டாங்க. அவரின் ஈமச் சடங்குக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துட்டு வந்துருக்கோம். பாவம் சார் அந்த வாட்ச்மேன்” என்றார் பிரின்சிபல்.

"டாக்டர், உண்மையிலேயே அவருடைய இறப்பு?” என்று மறுபடியும் எஸ்.கே.எஸ் சந்தேகம் எழுப்ப, 

"ஆமாம் சார். அவருக்கு எமன் ஃபுட்பால் வடிவில் வந்துருக்கான். நடு நெஞ்சில் சரியான அட்டாக். நொடியில் உயிர் போற மாதிரி.” என்று மீண்டும் ரிப்போர்ட் வாசித்தார் டாக்டர்.

"இந்த விஷயம் மாணவர்களுக்குத் தெரியுமா?" எஸ்.கே.எஸ்.கேட்டார்.

"சார், மாணவர்கள் மத்தியில்தான் இது நடந்திருக்கு. ஆனா,  மாணவிகள், நாம அடிச்ச பந்தாலதான் இப்படி ஆச்சுன்னு பயந்து போய் இருக்காங்க. அதனால வெளில சொல்ல மாட்டாங்க. ஆனா மாணவிகள் சைடில் இருந்து அந்த பந்து வரலை. சாதனா டீச்சரை தரோவா விசாரிச்சிட்டேன்." என்று பிரின்சிபல் உறுதியளித்தார்.

 

எஸ்.கே.எஸ்., சாதனா டீச்சரை எரித்துவிடுவது போல் பார்த்தார். “ ஸ்டூடன்ர்ஸ் வீசிய பந்து இல்லைன்னு, நீங்க இன்னொரு அணுகுண்டை வேற வீசறீங்களா?” என்றார் காட்டமாய்.  சாதனா, பதட்டத்தில் கைபிசைந்தார்.

”எல்லோரும் ஜாக்கிரதையாக நடந்துக்கோங்க. ஸ்கூலுக்குள்ள என்ன எழவு நடந்தாலும், போலீஸ் நம்ம தாலியதான் அறுக்கும்"  என்று அங்கிருந்த ஆசிரியர்களை எச்சரித்துவிட்டு  மகளுடன்  கிளம்பினார் எஸ்.கே.எஸ். 

 

இங்கு நடந்தது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கவியின் மனதினில் ஆயிரம் எண்ண அலைகள். எதுவும் சொல்லத் தோன்றாமல் அப்பாவின் பின்னால் சென்றாள்.

 

மாலையில் கவி, காரில் ஏர்போர்ட் சென்று கொண்டிருக்கும் போது, தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. "ஹலோ..." 

" என்ன கவி மேடம், ஒருத்தருக்கு "மரணமுகூர்த்தம்" குறிச்சிட்டு ரொம்ப கூலா டெல்லிக்குப் போறீங்களா ?” என்று ஒரு பெண் குரல், கவியின் அடிவயிற்றில் அமிலத்தை ஊற்றியது.

 

(திக் திக் தொடரும்..)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #7