மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய உடைமைகளை வரப்போகிற மனைவிக்கு எப்படித் தருவது என்ற பொருளாசை சிந்தனையுள்ள ஒருவருக்குக் கொடுத்த கவுன்சிலிங்கை விவரிக்கிறார்.
வசதியான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனக்குத் திருமணம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஆனால் அதில் தனக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அதை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை அதனால்தான் உங்களிடம் வந்துள்ளேன் என்றார். அதோடு அவர் பண ரீதியாக எந்த பிரச்சனையில் இல்லையென்பதையும் நல்ல விதமாக வாழ்ந்து வந்ததையும் கூறினார். மேலும் கல்யாணம் செய்துகொண்டால் இதுவரை செய்து வந்த எல்லா காரியங்களிலும் மனைவிக்கும் சம உரிமை தர வேண்டும். அதற்கு என் மனம் ஏற்கவில்லை என்றார். எடுத்துக்காட்டாக அவர் சிறு வயதிலிருந்து தனக்குச் சொந்தமான பொருளை யாரிடமும் பகிராமல் தனக்குண்டான ரூம், கார், வாஷிங் மெஷின், கண்ணாடி, போன்ற அனைத்து விதமான பொருட்களிடமும் தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் அதை மற்றவரிடம் பகிர மனம் ஏற்க மறுப்பதை தயக்கத்துடன் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் பேசியதில், ஒரு நபர் காரில் பயணிக்கும்போது வேறொருவர் லிப்ஃட் கேட்டு காரில் ஏறினால், அந்த நபர் காரை விட்டு இறங்கிச் செல்லும் வரை எப்போது அவர் இறங்குவார் என்று காரின் உரிமையாளருக்கு ஒரு எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் அவரிடம் இருப்பதைப் புரிந்துகொண்டேன். அதன் பிறகு அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க தொடங்கினேன். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு இதெல்லாம் ஒரு பிரச்சனையா? திருமணம் செய்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாக மாறிவிடும் என்று சொல்ல கூடாது என்று முடிவெடுத்தேன். அந்த முடிவோடு முதல் செசனில் அவரிடம், இப்போது நீங்கள் இருக்கும் வீட்டில் 100 வருடங்கள் கழித்து யார் இருப்பார் என்று கேட்டேன் அதற்கு அவர் வேறொருவர் இருப்பார் என்றார். இதே போல் கார், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அவரின் பல பொருட்களை எதிர்காலத்தில் யார் வைத்திருப்பார் என்று கேட்டேன். அப்போது எதிர்காலத்தில் தனக்கு பிடித்த பொருட்களை விட போகிறோமோ என்ற பயத்தில் இருந்தார். பொருட்கள் மீதுள்ள ஆசையும் தனியாக இருப்பதின் சுகத்தையும் அளவுக்கு அதிகமாக தன் வாழ்க்கையில் கடந்து வந்திருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
அடுத்த செசனில் அவரிடம், ஏன் மனிதர்கள் காட்டுக்குள் வாழாமல் நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஏன் ஒருவர் கூட காட்டில் வாழாமல் இருக்கின்றனர் என்று கேட்டேன். அவர் சில காரியங்களைச் சொன்னார். அது எல்லாம் வெளித்தோற்றத்திற்காக மனிதன் செய்யக்கூடியதாக இருந்தது. பின்பு நான் அவரிடம், மனிதர்களுக்கு எப்போதுமே மனிதம் தேவை அதனால்தான் மனிதர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு இருட்டில் தனியாக இருந்தால் முதல் ஹலோ யாராவது இருக்கிறீர்களா? என்றுதான் கேட்கத் தோன்றும். இதுதான் மனித இயல்பு. ஜெயில் என்பது மற்ற மனிதர்களிடமிருந்து தவறு செய்தவர்களைப் பிரித்து தண்டனை கொடுக்கும் இடம். ஆனால் சிட்டிக்குள் நிறைய செலவு செய்து ஏன் ஜெயிலுக்குள் வாழ்ந்து உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்து கொள்கிறீர்கள் என்றேன். அதோடு மனிதனுக்கு மிக முக்கியமானது மனிதம் என்பதை அவருக்குப் புரிய வைத்தேன். அதன் பிறகு மற்றொரு செசனில், இயற்கை ஏன் ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து வைத்துள்ளது என்ற கேள்வியோடு தொடங்கி, இரண்டு பாலினத்துக்கும் தனித்தனியாக இயற்கை தன் முழுமையைக் கொடுக்கவில்லை என்பதை எடுத்துச் சொன்னேன். அதோடு முழுமை என்பது இரண்டு பாலினம் சேர்ந்து இருப்பதைப் புரிய வைத்தேன். இப்படிப் பல செசன்கள் பேசிய பிறகு அவரே என்னிடம் வந்து திருமணத்திற்கு இப்போது தயாராக இருக்கிறேன் என்றார். அதன் பின்பு சில நாட்கள் கழித்து அவரைப் பார்த்தபோது, என்னிடம் பேசியதை நினைவு கூர்ந்து தனது குழந்தைகளுடன் சந்தோஷமாகச் சென்றார்.