Skip to main content

ஆஸ்பத்திரியில் ஆட்டோ சங்கர்! - ஆட்டோ சங்கர் #20 

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
auto sankar 20 title



சூரியனை ஜூஸ் பிழிந்த மாதிரி தோற்றம் தந்தது அந்த விஸ்கி; சிப் சிப்பாகப் பருக நெருப்பு சரடாக உள்ளே வழுக்கிக் கொண்டு போனது.   ஆனாலும் போதையை மீறிக்கொண்டு அந்த பயம் உயிரைப் பிசைந்தது. பாட்டிலைச் சரித்து மீண்டும் குடித்தேன். ம்ஹும்...! எவ்வளவு குடித்தாலும் அந்த ஞாபகம் மட்டும் அழியவே இல்லை; கனவுகளில் இடப்படும் முத்தம் மாதிரி ஒரு ரகசிய உறுத்தல் சிந்தனையைக் கசக்கிப் பிழிந்தது.

"உபத்திரா தப்பித்துப் போய்விட்டாள்..! அடடா, அவளை ஒன்றும் நாங்கள் கொலை செய்வதாக இல்லையே! அவளை என்ன, யாரையுமே இனி   கொல்லுவதாக இல்லை... ஏற்கனவே செய்ததே இந்தப்பாடு படுத்தும்போது, இன்னும் வேறா... உபத்திராவை கூப்பிட்டு சமாதானப்படுத்தலாம்.   நிவாரணமாக ஏதாவது பணம் தரலாம் என்பதுதான் உத்தேசம்! இது புரியாமல் அவள் பயத்தில் தப்பிப் போய்விட்டாள். போனவள் யாரிடமாவது   விஷயத்தைச் சொல்லுவாளோ?

கழுத்து முட்டும் அளவுக்குக் குடித்தேன். தட்டுத் தடுமாறி எழுந்து பாரை விட்டு வெளியே வந்து வண்டியை உதைக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளையாய் திமிறிக் கொண்டு புறப்பட்டது. தாறுமாறான போதையும் உபத்திரா பயமும் புணரும் பாம்புகளாய் கூட்டணிசேர, திருப்பத்தில்   ஆவேசமாக எதிர்ப்பட்ட காரைக் கவனிக்கவேயில்லை நான்! நெருங்கினதும் பதறி சுதாரித்து ஒதுங்குவதற்குள் அந்த விபத்து நடந்தேவிட்டது.

வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டே......ன்.

கண் விழித்தபோது நான் ஒரு ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடந்தேன். கால், கையை அசைக்க முடியவில்லை. தோள்பட்டை எலும்பு   நொறுங்கியிருந்ததால் அங்கே பேண்டேஜ் இம்சை...! வலது கால் முழுக்க கட்டு போடப்பட்டு ஏதோ ஒரு வெண்ணிற யானையின் கால் போல   தோற்றம் தந்தது. காலை அசைக்க முடியவில்லை. தலையில் வெள்ளை கிரீடம் அணிந்த நர்ஸ் ஓடோடி வந்தாள்!

"காலை அசைக்கக்கூடாது! ஆபரேஷன் பண்ணியிருக்கோம்... இன்னும் ஒரு மாசத்துக்கு படுக்கையைவிட்டு இறங்கக்கூடாது''

என்னது... ஆபரேஷன் செய்திருக்கிறார்களாமே... எப்போது? இந்த ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? எத்தனை நாட்களாயிற்று? இது  என்ன ஆஸ்பத்திரி? நண்பர்களெல்லாம் எங்கே?

ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் என்னைப் பார்த்து நட்பாய்ச் சிரித்தார். குரலில் தேன் தடவிக்கொண்டு பேசினார். தன்னுடைய பெயர் டி.சி.சந்திரன் என சுய அறிமுகப்படுத்திக்கொண்டு வலிக்காமல் கை குலுக்கினார்.

"பயப்படாதீங்க சங்கர்... சீக்கிரம் குணமாயிடும். சரிதானே! ம்... தண்ணி சாப்பிடறது தப்பே இல்லை! ஆனா, அது நம்மை சாப்பிட்டுறக் கூடாது;   அதான் முக்கியம்'' என்று சிரித்தார். அருகாமை ஸ்டாண்டில் க்ளுக்கோஸ் தயக்கமாக சொட்டிக் கொண்டிருந்தது.

"டாக்டர்... எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க...?''

"ஒரு மாசமாவது ஆகும். வீட்டுக்குப்போன பிறகும் ரெண்டு, மூணு மாசமாவது பெட் ரெஸ்ட்ல இருக்கணும். வண்டி ஓட்டறதுக்கு எல்லாம் மூணு   மாசமாவது ஆகணும். தைரியமா இருங்க... தன்னம்பிக்கையும் தைரியமும்தான் முதல் மருந்து... புரியுதா? பழம், பால் சத்துள்ளதா சாப்பிட்டு   உடம்பை முதல்ல பில்ட்-அப் பண்ணுங்க! அதான் பெரிய பட்டாளத்தையே பக்கத்திலேயே வச்சிருக்கீங்களே! நல்லா கவனிச்சுப்பாங்க.''

 

auto sankar 20



சிறிது சிறிதாக குணமாகிக் கொண்டு வந்தேன். டாக்டர் பரிபூர்ணமாய் திருப்திப்பட்டார். சத்து மாத்திரைகளும் "பயப்படாதீங்க!'ன்னு அட்வைஸும்  கொடுத்துவிட்டுப் போனார்.

விடுதிப் பெண்கள் அனைவரும் என்னை வந்து பார்க்க விரும்புவதாக மோகன் சொல்லிக் கொண்டிருந்த சமயம் சிவாஜி வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான். முகத்தில் இறுக்கம்! ரூம் மொத்தத்தையும் போதையால் மெழுகினான்.

"அண்ணே... அந்த ரவிப்பய நாம பண்ணின ரெண்டு கொலை பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான்'' 

"அய்யோ... அப்புறம்...?'' என்றேன் பதட்டமாக.

"அவன் பாட்டுக்கு ரெண்டு லட்ச ரூபா கொடு. இல்லைன்னா... போலீசுக்கு போவேன்றான்...!''

ப்பூ இவ்வளவுதானா! அந்த மட்டிலும் அவனாகவே வியாபாரம் பேசினானே... தொகையை சற்றுக் குறைத்து பேரத்தை முடித்துவிடலாம். நல்லவேளை!

"இப்ப ரவி எங்கே?''

அவன் சொன்ன பதில் என் பாவக்கணக்கை ஏற்றியது.

முந்தைய பகுதி:

"ரெண்டு லட்ச ரூபாய் கொடுங்க, எதையும் வெளிய சொல்லமாட்டேன்!" - மிரட்டிய துரோகி! ஆட்டோ சங்கர் #19

 

 

 

 

சார்ந்த செய்திகள்