Skip to main content

தோல்வி எப்படி வந்தது? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 33

Published on 20/02/2019 | Edited on 13/03/2019

தமிழ்மொழிக்கு அழகிய இயற்கை ஒன்று இருக்கிறது. ஆயிரம் பெயர்ச் சொற்களைப் புதிது புதிதாக உருவாக்கலாம். ஆனால், ஒரேயொரு வினைச்சொல்லைக்கூட நம் மொழியில் புதிதாய் உருவாக்கிவிட இயலாது. தொன்மைச் சிறப்பு மிக்க செம்மொழிகள் பலவற்றுக்கும் இவ்வியல்பு இருக்கக்கூடும். 

 

soller uzhavu

 

ஒரு மொழியின் தனித்தியங்கும் ஆற்றல் அதன் உயிர்போன்ற வினைச்சொற்களில்தான் பொதிந்திருக்கிறது. தமிழ் மொழியானது வினைச்சொற்களால் ஆகிய மொழி என்று நான் முன்பே கூறியது நினைவிருக்கலாம். நம்முடைய பெயர்ச்சொற்கள் பலவும் வினைச்சொல் வேர்களிலிருந்து தோன்றியவையே.

 

நில், நட, எழு, பார், உண், உறங்கு போன்றவை வினைச்சொற்கள். அச்சொற்கள் ஏற்கெனவே நம்மொழியில் பயில்பவை. நில் என்னும் பொருள்தரும் புதிய வினைச்சொல் ஒன்றை உருவாக்கிவிட முடியுமா ? நட என்னும் பொருள்தரும் புதிய வினைச்சொல் ஒன்றை உருவாக்கிவிட முடியுமா ? ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் நேரான புதிய வினைச்சொல்லை ஆக்க முடியுமா ? முடியவே முடியாது. வினைச்சொல் ஏற்பு நம்மொழிக்கு இல்லை. 
 

நீக்கு என்னும் பொருளில் ஓர் ஆங்கிலச் சொல் வந்தால் அதனை நாம் ஆங்கிலத்தில் அப்படியே சொல்வதில்லை. Delete என்று சொல்வதில்லை. Delete என்பதைப் பெயராகக்கொண்டு முன்னொட்டாக்கி “டெலிட்பண்ணு, டெலிட்செய்” என்றுதான் சொல்கிறோம். இங்கே பண்ணு என்பதும் செய் என்பதும் நம் மொழி வினைச்சொற்கள். வெறுமனே ‘டெலிட்” என்று கட்டளையிட்டால் அங்கே நாம் ஆங்கிலம் பேசுகிறோம். தமிழைப் பேசவில்லை. ஆங்கிலச் சொல்லைத் தமிழுக்குள் கலக்கப் பார்த்தால் டெலிட்பண்ணு, டெலிட்செய் என்று உரிய வினைச்சொற்களை உடன் சேர்க்கிறோம். வாக்பண்ணு, குக்பண்ணு, டர்ன்பண்ணு, திங்க்பண்ணு, ஸ்டார்ட்பண்ணு, பாஸ்பண்ணு,  பெயிலாகாதே... என்று பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களும் வினைவேராக ஒரு தமிழ்ச்சொல்லைக் கொண்டே முடிவது இதனால்தான்.  தமிழ் மொழியானது பிறமொழிச் சொல்லைப் பெயராகத்தான் ஏற்குமேயன்றி வினையாக ஏற்பதில்லை என்று அடித்துச் சொல்லலாம். இந்தத் தன்மைதான் நம் மொழியைப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வைத்தது, வாழ வைக்கிறது. இனியும் வாழும். 

 

soller uzhavu


 

வினைச்சொற்களில் இருந்துதான் பெயர்ச்சொற்களும் உருவாகின்றன. நில் என்ற வினைச்சொல்லிலிருந்து நிற்றல் என்ற பெயர்ச்சொல் உருவாகிறது. நிற்கை, நிற்பு, நில்லல் என்று மேலும் மேலும் பெயர்ச்சொற்களை உருவாக்கிச் செல்லலாம். இவ்வாறு ஒரு வினைவேரோடு ஒரு பெயர்ச்சொல் விகுதியைச் சேர்த்து உருவாக்கும் பெயர்களுக்குத் தொழிற்பெயர்கள் என்று பெயர். முயற்சி, பயிற்சி என்பன பெயர்ச்சொற்கள். இவை முயல், பயில் ஆகிய வினைவேர்களோடு சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்வதால் உருவாகின்றன. 
 

முயல் + சி = முயற்சி, 

பயில் + சி = பயிற்சி.


முயல் என்ற வினைவேரிலிருந்து முயற்சி என்ற பெயர்ச்சொல் தோன்றிய பிறகு அதனை வினைச்சொல்லாக்க முடியுமா ? சிலர் முயற்சித்தான் என்று எழுதுகிறார்கள். அது பெரும்பிழை. வேண்டுமானால் ‘முயற்சி செய்தான்’ என்று எழுதலாம். பயில் என்ற வினைவேரிலிருந்து பயிற்சி என்ற தொழிற்பெயர் தோன்றிய பிறகு பயிற்சித்தான் என்று எழுத இயலுமா ? இயலாது. நமக்கு முயல், பயில் என்னும் வினைவேர்கள் இருக்கின்றன. அவை முயன்றான், பயின்றான் என்று தெள்ளத் தெளிவான வினைமுற்றுகளாகும். மொழியின் இவ்வியற்கை தெரியாதவர்கள்தாம் முயற்சித்தான் என்று எழுதுவார்கள்.


நம் மொழியில் மறைந்து போனவை ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கக்கூடும். அவற்றில் ஒரேயொரு வினைச்சொல்லைக் கண்டுபிடித்துவிட்டோம் என்றால் அவ்வினைவேர் வழியே அதனோடு தொடர்புடைய எண்ணற்ற பிற சொற்களைக் கண்டுபிடித்துவிடலாம். 


வெல் என்று சொல்வது மிகப்பெரிய வாழ்த்து. வெல்க வெல்க என்கிறோம். இங்கே வெல் என்பது வினைவேர். அதுதான் ‘வென்றான், வென்றது, வென்றோம்’ என வினைமுற்றாகிறது. வெல்+தி = வெற்றி என்ற தொழிற்பெயராவதற்கும் வெல் என்ற சொல்லே வேர். வெற்றி என்பதன் எதிர்ச்சொல்லான ‘தோல்வி’ என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் பெயர்ச்சொல்தான். தொழிற்பெயர்தான். அப்படியானால் தோல்வி என்ற தொழிற்பெயரின் வேராக விளங்கும் வினைச்சொல் எது ? கல் + வி = கல்வி, கேள் + வி = கேள்வி என்றாகின்றன. அவ்வாறே தோல் + வி = தோல்வி என்று ஆகியிருக்கிறது. இங்கே தோல் என்பது வினைவேர். தோற்பாயாக என்று ஏவுகிறது. கட்டளையிடுகிறது. 


வெல் என்பதை அடிக்கடி பயன்படுத்தியதைப்போல தோல் என்பதனை எங்கேனும் ஏவற்பொருளில் பயன்படுத்தியிருக்கிறோமா ? இல்லை. தோல் என்னும் வினைவேரின் வழியாகத்தான் தோற்றான், தோற்கிறான், தோற்பான் போன்ற வினைமுற்றுகள் தோன்றுகின்றன. தோல் என்று சொல்லுவது கெடுசொல் என்று நம் பண்பாடு விலக்கியிருக்கலாம். அதனாற்றான் தோல் என்று நாம் சொன்னதேயில்லை. கேள் என்று அடிக்கடி சொல்லப் பழகிய நாம் தோல் என்று யாரையும் சொன்னதில்லை. பேச்சிலேயே அருகிப்போன அந்த வினைவேர் வினைமுற்றுகளில் இடம்பெறுவதோடு அடங்கிவிட்டது. வெல், கேள் என்று யாரிடம் கூறினாலும் உடனே விளங்கிக்கொள்வார். தோல் என்று கூறினால் ‘உடலை மூடியிருக்கும் தோல்’ என்றே பொருள்கொள்வார். இப்படி அருகிப்போன ஒரு சொல் அருஞ்சொல்லாகி நம்மருகிலேயே கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதனைப்போல் ஆயிரமாயிரம் வினைவேர்கள் கண்டெடுக்கப்படாமல் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துவிட்டாலே போதும். நம்மொழிச் சொற்களின் கணக்கு இன்னொரு மடங்கு கூடிவிடும்.

 

முந்தைய பகுதி:

கடலைக் குறிக்கும் சொற்கள் இத்தனையா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 32

 

 

அடுத்த பகுதி:


ஆகாவும் ஓகோவும் உடம்படுமெய்யால் தோன்றுகிறதா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 33

 

 

 

 

சார்ந்த செய்திகள்