கவுன்சிலிங் மூலம் பல மனிதர்களின் மனதை மாற்றிய ஜெய் ஜென், தன்னுடைய கவுன்சிலிங் அனுபவங்களை “மனங்களும் மனிதர்களும்” என்னும் தொடர் வழியாக நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
18 தொழில்கள் செய்து தோல்வியடைந்த ஒருவர், தன்னுடைய 19-வது தொழிலில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். இப்பொழுது அவருடைய வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கிறது. அனைத்தும் கிடைத்தாலும், இவ்வளவுதானா வாழ்க்கை என்கிற விரக்தி ஒருகட்டத்தில் அவருக்கு ஏற்படுகிறது. அவர் என்னிடம் வந்தபோது தன்னுடைய வெறுமையை வெளிப்படுத்தினார். தன்னைச் சாராத, தான் சம்பந்தப்படாத மனிதர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர் அந்த வெறுமையைப் போக்க முடியும் என்று அவரிடம் நான் கூறினேன்.
அதை ஏற்று அவர் சாலை வசதிகளே இல்லாத கிராமங்களுக்கு தார்ச்சாலைகள் போட்டுக் கொடுத்தார். கிராமத்துக்கு அவர் தார் சாலை போட்டுக் கொடுத்தது மக்களால் மறக்க முடியாத விஷயமாகிப் போனது. சாலை வசதி இல்லாததால் அந்த மக்கள் காட்டு வழியில் பயணம் செய்யும் நிலை இருந்தது. அவர் போட்ட தார் சாலையை இப்போது அடுத்த தலைமுறையும் பயன்படுத்துகிறது. தன்னுடைய செயல்களுக்கு அவர் பெரிதாக எந்த விளம்பரமும் செய்துகொள்ளவில்லை. உதவி செய்யும்போது அதில் எந்த சாதி மத பேதமும் கிடையாது. சாதிய மனநிலை ஒழிய வேண்டும் என்றால், உதவும் மனநிலை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி பல்வேறு கிராமங்களுக்கு பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். வாழ்க்கையில் தனக்காகச் செய்யும் அனைத்து செயல்களும் செய்து முடிக்கப்பட்ட பிறகு வரும் வெறுமையைத் தகர்க்க தன்னைச் சாராத, தகுதியான நபர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு நிறைவு ஏற்படும். அந்த நிறைவு வாழ்க்கையின் இறுதி வரை தொடரும். ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கும், எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர்களுக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது.
இந்த வெறுமையின் காரணமாகவே சிலர் துறவறம் செல்கின்றனர். பெரிய இடத்தில் இருந்துவிட்டு ஓய்வுக்குப் பிறகு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புபவர்களுக்கு அதில் கிடைக்கும் மரியாதை குறைவாகவே தெரியும். என்னிடம் வந்தவர் சுயமாக ஒரு மருத்துவமனை கட்டினார். எத்தனையோ பேருடைய வாழ்க்கையை அந்த மருத்துவமனை மாற்றியிருக்கிறது. இதுபோன்று உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிலருக்கு குடும்பத்தினரே அதற்கான தடையாக இருப்பார்கள். தன்னுடைய சம்பாத்தியத்தில் தனக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பவர்கள் இதிலிருந்து தப்பிக்கின்றனர்.