தென்கொரியாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றினாலும், இரண்டு கொரியாக்களையும் இணைக்கும் முயற்சியில் வடகொரியா அதிபர் கிம் இல்-சுங் தொடர்ந்து தீவிரமாக இருந்தார்.
1961 ஆம் ஆண்டு ராணுவ தளபதி பார்க் சுங்-ஹீயின் முன்னாள் நண்பரும், வடகொரியா வர்த்தகத்துறை உதவி அமைச்சருமான ஹ்வாங் டாயே-சாங்கை தென்கொரியாவுக்கு அனுப்பினார். இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த இது உதவும் என்று கிம் இல்-சுங் நம்பினார். ஆனால், பார்க் ஏமாற்றிவிட்டார். கம்யூனிஸ்ட் கொள்கைகளில் தனக்கு ஆர்வம் இருந்தாலும், அமெரிக்காவை நம்ப வைக்கவும், அவர்களுடைய ஆதரவை உறுதிப்படுத்தவும் விரும்பிய பார்க், ஹ்வாங்கை உளவாளி என்று அறிவித்து மரணதண்டனை விதித்தார்.
இது வடகொரியாவை ஆத்திரமூட்டியது. 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் தனது உளவுப்பிரிவினரையும், பிரச்சாரகர்களையும் அதிக அளவில் தென்கொரியாவுக்குள் ஊடுருவச் செய்தது. இந்த முயற்சியில் பல தென்கொரியா வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கொரியாவுக்கான அமெரிக்க ராணுவத்தின் தளபதி சார்லஸின் அனுமதி இல்லாமலேயே எல்லைப் பகுதியில் வடகொரியா ராணுவத்துடன் சண்டையில் ஈடுபடும்படி 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பார்க் உத்தரவிட்டார்.
எல்லையோர சண்டை தீவிரமடைந்தது. இது 1969 வரை நீடித்தது. இது இரண்டாவது கொரியா யுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லையோரத்தில் தென்கொரியா ராணுவம் சண்டையைத் தொடங்கியபோது, 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வடகொரியா அதிபர் கிம் இல்-சுங் எல்லையோரப் பதற்றம் தொடர்பாக பேசினார். அப்போது தென்கொரியா ராணுவத்தினர் வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தென்கொரியாமீது யுத்தம் தொடங்கினால் அது நேரடியாக அமெரிக்க வீரர்களுடன்தான் நடக்கும். அப்படி நடந்தால், உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பொறுப்பேற்றிருக்கும் நாடுகளில் எல்லாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று கிம் இல்-சுங் கூறினார். அப்படி நடந்தால் வடகொரியா ராணுவம் தென்கொரியாவுக்குள் ஊடுருவும் வாய்ப்பு உருவாகிவிடும் என்று அமெரிக்கா கருதியது. எல்லையோரச் சண்டையில் தென்கொரியாவுக்கு ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவை கடுப்பேற்றியது. எல்லைப் பகுதியில் அமைதியை உறுதிப்படுத்தவே அமெரிக்கா விரும்புவதாக பார்க் அரசை அமெரிக்கா எச்சரித்தது.
இந்த சண்டைக்கு இடையே, 1967 ஆம் ஆண்டு தென்கொரியா ஜனாதிபதி தேர்தலில் அவர் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருடைய ஆட்சிக்கு அதுவரை இருந்த எதிர்ப்பு குறைந்தது. வியட்னாம் யுத்தத்தமும் தீவிரமடைந்தது. அந்த யுத்தத்திற்கு அமெரிக்கா சார்பில் போரிடுவதற்காக லட்சக்கணக்கான தென்கொரியா வீரர்களை ஜனாதிபதி பார்க் பணத்துக்காக விற்பனை செய்து கொண்டிருந்தார். அமெரிக்காவின் கவனம் முழுவதும் வியட்னாம் மீது மட்டுமே இருக்கும் நிலையில், தென்கொரியாவில் என்ன நடந்தாலும் அமெரிக்கா அதை கண்டுகொள்ள முடியாது. வடவியட்னாம் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தோடு, வடகொரியாவின் உறவு மிகவும் உறுதியாக இருந்தது. வியட்னாமுக்கு வடகொரியா கணிசமான பொருளாதார உதவியும், ராணுவ உதவியும் செய்துகொண்டிருந்தது. தென்கொரியா வீரர்களின் உயிரிழப்பை தடுக்கவும், வியட்னாமில் அமெரிக்காவின் பலத்தைக் குறைக்கவும், ஜனாதிபதி பார்க்கை கொலைசெய்ய 1968 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வடகொரியா ராணுவத்தின் கமாண்டோக்கள் திட்டமிட்டனர்.
31 பேர் கொண்ட யூனிட் 124 என்ற பெயரிலான இந்த கமாண்டோக்கள் குழுவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. நவீனத் தொழில்நுட்பங்கள், ஆயுதங்களை கையாள்வது, கடல்வழி தாக்குதல், விமானத் தாக்குதல் என்று எல்லா பயிற்சிகளையும் பெற்ற இந்தக் குழுவின் உறுப்பினர்கள் 30 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் ஒடும் ஆற்றல்பெற்றவர்கள்.
1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி வடகொரியாவில் இருந்து தங்களுடைய பயிற்சி இடத்திலிருந்து புறப்பட்டு, ஜனவரி 17 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த பகுதிக்குள் ஊடுருவியது. 18 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஒரு இடத்தில் முகாமை அமைத்தது. 19 ஆம் தேதி காலை 5 மணிக்கு இம்ஜின் ஆற்றைக் கடந்து, சிம்போங் மலையில் ஒரு முகாமை அமைத்தது.
அந்த முகாமுக்கு அருகே, நான்கு சகோதரர்கள் சமையலுக்கா விறகு வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வடகொரியா குழுவினரை கவனித்துவிட்டனர். உடனே அவர்களை 4 பேரையும் வடகொரியா குழுவினர் கைது செய்தனர். அவர்களை கொல்வதா வேண்டாமா என்று குழுவினர் விவாதித்தனர். இறுதியில் சொந்த சகோதரர்களான தென்கொரியர்களை கொல்ல குழுவினரின் கம்யூனிஸ சித்தாந்தம் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த 4 பேரையும் போலீஸிடம் சொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்.
அதுதான் குழுவினர் செய்த மிகப்பெரிய தவறு. அந்த 4 பேரும் மலையிலிருந்து இறங்கி போலீஸில் போட்டுக்கொடுத்துவிட்டனர். போலீஸும் ராணுவமும் உஷாராகியது. வடகொரியா குழுவினர் நோகோ மலைக்கு மாறினார்கள். அப்படியே சியோல் நகருக்குள் இருவராகவும் மூவராகவும் பிரிந்து ஜனவரி 20 ஆம் தேதி இரவு செயுங்கா-ஸா கோவிலில் இணைந்தனர். அங்கு தங்களுடைய இறுதித் தாக்குதலுக்கு திட்டமிட்டனர்.
ஆனால், அவர்கள் வந்திருப்பதை அறிந்த தென்கொரியா ராணுவம் நகரம் முழுவதும் ரோந்துப் பணியில் இருந்தது. இந்தச் சமயத்தில் தென்கொரியா ராணுவத்தினரின் உடையை அணிய வடகொரியா வீரர்கள் முடிவுசெய்தனர். அவர்கள் தாகுதல் நடத்தப்போகும் ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு மைல் தூரம் மட்டுமே இருந்தது. எந்தச் சந்தேகமும் எழாமல் புளூ ஹவுஸ் என்று அழைக்கப்படும் 13 ஆம் நூற்றாண்டு ஜோஸியோன் பேரரசுக்கு சொந்தமான அரண்மனைக் கட்டிடத்தை நெருங்கினார்கள். தென்கொரிய ராணுவத்தினர் மற்றும் போலீஸாரைக் கடந்து ஜனவரி 21 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புளூ ஹவுஸுக்கு 100 மீட்டர் நெருக்கத்தில் சென்றுவிட்டனர். அங்கிருந்த சோதனைச் சாவடியில் இருந்த போலீஸ் அதிகாரி குழுவினரை தடுத்து விசாரிக்கத் தொடங்கினார். குழுவினரின் பதில்களில் சந்தேகமடைந்த அவர் தனது துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டினார். உடனே குழுவினருக்கும் போலீஸுக்கும் சண்டை தொடங்கியது. படுமோசமான துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரியும், உதவி இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டனர். கையெறி குண்டுகளை வீசி கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் 92 தென்கொரியர்கள் இறந்தனர். கமாண்டோ ஒருவர் போலீஸில் சிக்கினார். அவர் உடனே தற்கொலை செய்துகொண்டார். மற்றவர்கள் மலைகளை நோக்கி தப்பினர்.
அடுத்தநாள் தென்கொரியா ராணுவம் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தியது. மலைகளுக்கு நடந்த இந்த வேட்டையில் வடகொரியா குழுவினர் 31 பேரில் 29 பேர் கொல்லப்பட்டனர். கிம் ஷின்-ஜோ என்ற கமாண்டோ தென்கொரியா வீரர்களிடம் பிடிபட்டார். இன்னொரு கமாண்டோவான பார்க் ஜயே-கியுங் வடகொரியாவுக்கு தப்பினார்.
இந்தக் கொலைமுயற்சியைத் தொடர்ந்து வடகொரியா அதிபர் கிம் இல்-சுங் தனக்கும் இந்த முயற்சிக்கும் தொடர்பில்லை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், அவரைக் கொலை செய்ய யூனிட் 684 என்ற பெயரில் ஒரு கமாண்டோ படையை பார்க் அமைத்தார். ஆனால், அது 1971 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
இருநாடுகளுக்கும் இடையே பகைமை பற்றியெரிந்தாலும், இருநாட்டு இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்துகொண்டு இருந்தன. 1972 ஆம் ஆண்டு இருநாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. வெளிநாட்டுத் தலையீடு இல்லாமல் தங்களுக்குள் மட்டும் இணைப்பை எட்டவேண்டும் என்று அதில் குறிப்பாக சொல்லப்பட்டது. இணைப்பு முயற்சி ராணுவபலத்தை பிரயோகிக்காமல், அமைதியான முறையில் நிறைவேற வேண்டும். தேச ஒற்றுமையை இருதரப்பினரும் மதித்து போற்ற வேண்டும். அரசியல் ரீதியான, கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளை கடந்து மக்களை இணைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி காலனி ஆதிக்கம் முடிவுற்ற 29 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பார்க் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, முன்வரிசையில் அமர்ந்திருந்த முன் செ-க்வாங் என்பவர் பார்க்கை நோக்கி சுட்டார். அவர் ஜப்பானில் பிறந்த, வடகொரியா ஆதரவாளர் என்றார்கள். அவருடைய குறி தவறியது. பார்க் தப்பினார். ஆனால், அவருடைய மனைவி யுக் யங்-சூ காயமடைந்து மறுநாள் இறந்தார். மனைவி காயமடைந்து தூக்கிச் செல்லும்போதும் பார்க் தனது உரையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு நான்கு மாதங்கள் கழித்து முன் செ-க்வாங் தூக்கிலிடப்பட்டார்.
பார்க் தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க விரும்பி தென்கொரியா அரசியல் சட்டத்தை திருத்தி அமைத்தார். புதிய சட்டத்தின்படி 1972 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பார்க் போட்டியே இல்லாமல் ஜனாதிபதி ஆனார். இந்த புதிய அரசியல் சட்டம் யூஷின் அரசியல்சட்டம் என்று அழைக்கப்பட்டது. யூஷின் என்றால் இளமையான என்று அர்த்தம். இந்த அரசியல் சட்டத்தை கொரியாவின் அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இருந்தாலும் 1978 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலை நடத்தி பார்க்கே போட்டியில்லாமல் ஜனாதிபதியானார். மக்கள் வெறுப்பு அதிகரித்த நிலையில், 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இரவு, தென்கொரியா மத்திய உளவுத்துறை நிறுவனக் கட்டிடத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பார்க் பங்கேற்றார். அவருடைய நெருங்கிய நண்பரும், உளவுத்துறை இயக்குனருமான கிம் ஜாயே-க்யுவும் கலந்துகொண்டார். அப்போது, திடீரென கிம் ஜாயே துப்பாக்கியால் பார்க்கை தலையிலும் மார்பிலும் சுட்டார். உடனடியாக அவர் இறந்தார். விருந்தில் பங்கேற்ற பார்க்கின் பாதுகாவலர்கள் 4 பேரும், சமையல்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இது ராணுவக் கலகம் அல்ல. என்றாலும், தலைமைச் செயலாளர் கிம்மை சந்திக்க ஓடினார். அங்கு ராணுவத் தலைமை தளபதி ஜியோங் சியங்-ஹ்வா காத்திருந்தார். இருவரும் தனக்கு உதவுவார்கள் என்று நினைத்தார்.
தலைமைச்செயலாளர் கிம் வழியாக நடந்ததை அறிந்த தளபதி ஜியோங், கிம் ஜாயே-க்யுவை கைது செய்து காவலில் வைத்தார். ராணுவ மேஜர் ஜெனரலான சுன் டூ-ஹ்வான் என்பவரை ராணுவ ஆட்சித் தலைவராக நியமித்தார். பார்க்கை கொலைசெய்த கிம் ஜயே-க்யு தூக்கிலிடப்பட்டார்.
பார்க் மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும், தென்கொரியாவின் பொருளாதார அடித்தளத்தை அமைத்தவர் என்று இப்போதும் புகழப்படுகிறார். தென்கொரியாவில் முதன்முதலில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி இவர்தான்.
(இன்னும் வரும்)
அடுத்த பகுதி:
மக்களை கொன்று குவித்த தென்கொரியா சர்வாதிகாரியின் இறுதிக் காலம்! கொரியாவின் கதை #18
முந்தைய பகுதி:
அமெரிக்காவின் பணத்துக்காக தென்கொரியா வீரர்கள் விற்பனை!!! #16