தென்கொரியா உருவாக்கப்பட்ட தொடக்கத்தில் அந்த நாட்டின் உள்நாட்டு வருமானத்தில் 20 சதவீதத்திற்கு மேல் பாலியல் தொழில் மூலம் கிடைத்தது. வியட்னாமில் அமெரிக்க ராணுவத்துக்காக சண்டையிட தென்கொரிய வீரர்களை அரசாங்கமே விலைக்கு விற்றது. வீடற்ற ஏழைகளையும், தெருவோர பிச்சைக்கார சிறுவர்களையும் லாரிகளில் அள்ளிச்சென்று கொன்று குவித்தது.
ஆனால், வடகொரியாவில் கிம் இல்-சுங் தலைமையிலான அரசு, சோவியத் யூனியனில் ஸ்டாலின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அப்படியே அமல்படுத்தியது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. நிலம் முழுவதையும் அரசுடைமையாக்கி ஏழைகளுக்கும் நிலமற்ற விவசாயிகளுக்கும் அரசு பிரித்தளித்தது. இதன்மூலம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டது. ஆண்டான் அடிமை என்ற பிரிவினை முடிவுக்கு வந்தது. அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், ஆண் பெண் சமத்துவச் சட்டம், தொழிற்சாலைகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கிகள் தேசியமயச் சட்டம் ஆகியவையும் பிறப்பிக்கப்பட்டன.
தென்கொரியாவில் அமெரிக்காவின் ஊதுகுழல் அரசு மக்களையும், கொரியா இணைப்பு ஆதரவாளர்களையும் கம்யூனிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தி கொன்று குவித்துவந்தது. வடகொரியாவோ இரண்டு கொரியாக்களையும் இணைப்பதில் உறுதியாக இருந்தது. அப்படி இணைந்தால் கொரியா முழுவதும் கம்யூனிஸ்ட் நாடாகிவிடும் என்று அமெரிக்கா பயந்தது. எனவே, இணைப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தது. இந்நிலையில்தான், ஐ.நா. மேற்பார்வையில் தென்கொரியாவில் தேர்தலை நடத்த அமெரிக்கா ஏற்பாடு செய்தது. இதை சோவியத் யூனியன் எதிர்த்தது. சோவியத் யூனியன் இல்லாமலேயே தென்கொரியாவில் தேர்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் வடகொரியாவும் தென்கொரியாவைச் சேரந்த அமைப்புகள் இணைந்து ஒரு மாநாட்டை நடத்தின. ஆனால், அந்த மாநாடு தோல்வியில் முடிந்தது. தென்கொரியாவின் முக்கிய விடுதலைப்போராட்டத் தலைவர்களான கிம் கூவும் கிம் க்யு-சிக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அவர்கள் தென்கொரியாவில் அறிவிக்கப்பட்ட தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர்.
ஜப்பான் ஆதிக்கத்தின்கீழ் கொரியா சென்றதிலிருந்தே இந்த இரு தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை கைதாகினர். பின்னர் சீனாவுக்கு சென்று, ஷாங்காய் நகரில் கொரியா மக்கள் குடியசு அரசாங்கத்தை அமைத்தனர். 1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில், ஒன்றுபட்ட கொரியா மக்கள் குடியரசுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடினர். ஆனால், அமெரிக்க ஆதரவில் தென்கொரியா நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த சிங்மேன் ரீ கொரியா இணைப்புக்கு ஆதரவானவர்களை தேடிப்பிடித்து கொன்று குவிப்பதில் உறுதியாக இருந்தார்.
பியாங்யாங் நகரில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று திரும்பிய கிம் கூ, 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்கொரியா ராணுவ லெப்டினென்ட் ஆஹ்ன் டூ-ஹீ என்பவரால் கொல்லப்பட்டார். கிம் வீட்டுக்குள் தீடீரென்று புகுந்த ஆஹ்ன், கவிதை படித்துக் கொண்டிருந்த கிம் கூவை நான்கு முறை சுட்டுக் கொன்றார். கிம் கூவை சோவியத் யூனியனின் ஏஜெண்டாக கருதியதால் சுட்டுக் கொன்றதாக ஆஹ்ன் கூறினார். தென்கொரியா ஜனாதிபதி பொறுப்பை ஏற்றிருந்த சிங்மேன் ரீயின் தேசிய பாதுகாப்புக்குழு தலைவரான கிம் சாங்-ரியோங் உத்தரவின்பேரில் இந்தக் கொலையைச் செய்ததாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இந்தக் கொலைக்கு பழிவாங்கும் வகையில், கிம் கூவின் ஆதரவாளரான பார்க் ஜி-ஷியோ என்பவர் 1996 ஆம் ஆண்டு ஆஹ்ன் டூ-ஹீயை கொன்றார். 2001 ஆம் ஆண்டு கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவுப்படியே ஆஹ்ன், கிம் கூவை கொலை செய்தார் என்று தெரியவந்துள்ளது.
கிம் கூ மட்டுமல்ல, அவருடன் பியாங்யாங் மாநாட்டில் பங்கேற்ற கிம் க்யு-சிக்கும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். பியாங்யாங்கிலிருந்து திரும்பிய அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 1950ல் வடகொரியா தென்கொரியா மீது போர் தொடுத்த சமயத்தில் கிம் க்யு-சிக் வடகொரியாவுக்கு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வடகொரியா அரசு இந்த இரண்டு தலைவர்களுக்கும் தேசிய ஒற்றுமைக்கு பாடுபட்டவர்களுக்கான விருதை மரணத்துக்கு பின் வழங்கி கவுரவித்தது. இருவருக்கும் தென்கொரியாவும் தேசிய விருதை வழங்கியது.
அமெரிக்காவின் திட்டப்படி 1948 ஆம் ஆண்டு மே மாதம் பெரும்பான்மை மக்களின் புறக்கணிப்பையும் மீறி தென்கொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொரியா குடியரசு நிறுவப்பட்டது. அதற்கு உடனடியாக ஐ.நா. அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. தென்கொரியா தேர்தலை அறிவித்து நடத்தியதை தொடர்ந்து, வடகொரியாவும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது. 1948 ஆகஸ்ட் மாதம் மக்கள் சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த சட்டமன்றம் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி புதிய அரசியல் சட்டத்தை பிரகடனம் செய்தது. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி கொரியா ஜனநாயக மக்கள் குடியரு நிறுவப்பட்டது. அந்த குடியரசின் பிரதமராக கிம் இல்-சுங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தென்கொரியா அரசுதான் சட்டப்படியான கொரியா என்று ஐ.நா.பொதுச்சபை அறிவித்தது.
1949 ஆம் ஆண்டு வடகொரியா முழுமையான கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. அங்கு இயங்கிய அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் கொரியா ஒற்றுமைக்கான ஜனநாயக முன்னணியில் இணைந்தன. வடகொரியா அரசு நிர்வாகம் சோவியத் யூனியன் மாடலில் விரைவாக அமைக்கப்பட்டது. அதிகாரம் அனைத்தும் கொரியா தொழிலாளர் கட்சியிடம் இருந்தது.
தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்தின் உதவியோடு எதிர்ப்போரை கொன்று குவித்து அதிகாரத்தை கைப்பற்றிய சிங்மேன் ரீ, ஜெஜு தீவை கைப்பற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் முயற்சியை முறியடிப்பதற்காக அந்த தீவின் மொத்த ஜனத்தொகையையும் கொன்று குவித்தார். இது கிம் இல்-சுங்கை ஆத்திரமூட்டியது. 1949 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரியா இணைப்புக்காக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அவர் சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் ஆதரவை கேட்டார். தென்கொரியாவை ரத்தக்களறியாக்கி தேர்தலை நடத்தி முடித்த கையோடு, பெரும்பகுதியான அமெரிக்க ராணுவம் அமெரிக்காவுக்கு திரும்பியிருந்தது. அனுபவமற்ற, வலிமை குறைந்த தென்கொரியா ராணுவத்தை மட்டமே அரசு நம்பியிருந்தது. எனவே, இது சரியான நேரம் என்று வடகொரியா கணித்தது. வடகொரியா ராணுவம் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்று தென்கொரியா நினைத்திருந்தது. ஆனால், நடந்தது வேறு.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
வடகொரியாவின் கதை!! கொரியாவின் கதை #23
அடுத்த பகுதி:
சோவியத், சீன சதியை முறியடித்த கிம் இல்-சுங்! கொரியாவின் கதை #25