Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: உஷார்; ஒரே க்ளிக்கில் வாழ்க்கையே போய்விடும்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

digital cheating part 7

 

ஸ்கிரின் ஷேரிங் செய்ய பல ஆப்கள் இணையத்தில், ப்ளேஸ்டோரில் உள்ளன. இந்தியாவில் 10 விதமான ஆப்கள் பயன்பாட்டில் உள்ளன. அதன் வழியாக மட்டும் டேட்டாக்களை திருடி கொள்ளையடிக்கவில்லை. ஆப்கள் வழியாகவே நமக்கு ஆப்பு அடிப்பதும் உண்டு.   

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அனிபர்ன் கங்குலி. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கிரடிட் கார்டு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த கிரடிட் கார்டுக்கு பணம் செலுத்த சுலபமான வழியென கிரீட் என்கிற ஆப் பயன்படுத்தலாம் என அதனை டவுன்லோட் செய்து தனது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ளார்.  அந்த ஆப் வழியாக தனது கிரடிட் கார்டுக்கு 94,210 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்.  அந்த பணம் கிரடிட் கார்டு வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.  

 

கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள ஹரிதேவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீப் ஹால்டர். பிரபலமான மருந்து தயாரிப்பு கம்பெனியின் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். மருத்துவர்களிடம் இனிப்பாக மென்மையான குரலில் பேசுவார். இவரும் கிரடிட் கார்டு பயன்படுத்தி வந்துள்ளார். அந்த கார்டுக்கு ஆப் வழியாக பணம் கட்டியபோது, அந்த பணம் கிரடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செல்லவில்லை. இவர் உடனே குறிப்பிட்ட அந்த ஆப் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்புகொண்டு  விவரத்தை கூறினார். எல்லாவற்றையும் கேட்ட கஸ்டமர் கேர் பெண், நீங்கள் எங்கள்  ஆப் பை உபயோகிக்கவில்லை; உங்கள் போனிலும் எங்கள் ஆப் இல்லை எனச் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார். “என் பணத்தை ஏமாத்துனதோடு ஆப் இன்ஸ்டால் செய்யலன்னு சொல்லி நல்லா ஏமாத்துறாங்க என கோபமாக  காவல்நிலையம் சென்று புகார் தந்துள்ளார். இந்த புகார்கள் சைபர்செல் போலீஸாருக்கு சென்றன. புகார் தந்தவர்களின்  மொபைல்களை வாங்கி, அந்த ஆப் ஓப்பன் செய்து பார்த்தபோது ஒரிஜினல் போலவே தயாரிக்கப்பட்ட டூப்ளிக்கெட் ஆப் எனச் சொல்ல புகார் தந்தவருக்கு மயக்கம் வராத நிலை. ஒரு லட்சம் கட்டியவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு காவல்நிலையத்திலேயே உட்கார்ந்துவிட்டார்.   இந்த ஆப்கள் மட்டுமல்ல இந்திய ரயில்வேயின் ஐஆர்டிசி ஆப், எஸ்.பி.ஐ வங்கி  ஆப் என பல ஆப்களை உருவாக்கி கூகுள் ப்ளே ஸ்டோரில் விட்டுள்ளனர். இந்த  ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்திய ஆயிரக்கணக்கானவர்களின் பணம்  கொள்ளைப் போனது எனச் சொல்லி பணத்தை மீட்டுடலாம் தைரியமாக இருங்க  எனச் சொல்லி அனுப்பியுள்ளனர்.  

 

ஆப்கள் மட்டுமல்ல வங்கிகளின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட இணையதளங்களும் உள்ளன. உதாரணத்துக்கு எஸ்.பி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி என ஏதோ ஒரு வங்கியை எடுத்துக்கொள்வோம். அந்த வங்கியின் இணையதளம் போலவே ஒரு இணையதளத்தை போலியாக உருவாக்குவது. அதன் டொமைன் நேம் குறிப்பிட்ட வங்கி பெயரில் ஏதாவது ஒரு எழுத்தை மட்டும் உள்ளே சேர்த்து உருவாக்கிவிடுவார்கள். அந்த இணையதள முகவரியை மொபைல், வாட்ஸ்அப்  மெசேஜ்கள் வழியாக பரப்புவது. கூகுள் வழியாக தேடினாலும் டூப்ளிக்கெட் இணையதளம் முதலில் வருவதுபோல் செட் செய்துவிடுவார்கள். வங்கியின் வாடிக்கையாளர் டூப்ளிக்கெட் இணையதளத்தை ஓப்பன் செய்து யூசர்நேம்,  பாஸ்வேர்ட் பதிவு செய்வார். ஆனால் அந்த இணையத்துக்குள் போகாது. ப்ரவுசர்  சுற்றிக்கொண்டே இருக்கும். நெட் ஒர்க் ப்ராபளம், சர்வர் ப்ராப்பளம் என  வாடிக்கையாளரும் அதனை மூடிவிடுவர். ஆனால், அந்த சைட் ஓப்பன் செய்து  யூசர்நேம், பாஸ்வேர்ட் உள்ளீடு செய்ததுமே டூப்ளிக்கெட் வெப்சைட்டின் பேக்பேஜ்ஜில் பதிவாகிவிடும். அதனை எடுத்து வங்கி கணக்கை ஓப்பன் செய்து கணக்கில் உள்ள பணத்தினை வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிடுவார்கள். அதேபோல் அமேசான், ப்ளிப்கார்டு, ஸ்நாப்டீல், மீசோ போன்ற வணிக விற்பனை  இணையதளங்கள் பல உள்ளன. இந்த பெயர்களை பயன்படுத்தி, அந்த இணையதளங்கள் போலவே போலியாக இணையப் பக்கத்தை உருவாக்குவர்.  

 

299 ரூபாய்க்கு விஐபி ட்ராவல்பேக், 2999 ரூபாய்க்கு ஆப்பிள் ஐ14 ஃபோன், 5  ஆயிரத்துக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள ஷோபா என்பது போன்ற பல விளம்பரங்கள்  பிரவுசரை நாம் ஒப்பன் செய்ததுமே ஓரமாக வரும். முகநூலிலுல் அதுபோன்ற விளம்பரங்கள் வருவதை நாம் பார்த்திருப்போம். இதன் உண்மை தெரியாதவர்கள் பலர். அவர்கள் குறைந்த விலையில் ப்ராண்டட் பொருளா என ஆசைப்பட்டு  அந்தப் பக்கத்தை க்ளிக் செய்து உள்ளே போனால் பணம் கட்டுங்கள் எனக் கேட்கும்,  பணம் செலுத்தினால் பணம் காலி.  சில வெப்சைட்கள் பொருட்களை தேர்வு செய்தபின் டெலிவரிக்கு அட்ரஸ்  வாங்கிக்கொண்டு பணம் செலுத்த பேங்க் டீட்டய்ல்ஸ் அல்லது கார்டு டீட்டய்ல்ஸ்  கேட்கும். அவைகளில் ஏதாவது ஒன்றை தந்தபின்  அது உள்ளே செல்லாது.  இது முன்பு சொன்னது போல் யூசர்நேம், பாஸ்வேர்ட் தெரிந்துகொண்டு பின்பு  டெக்னிக்கலாக பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். 

 

உலக அளவில் பிரபலமானது திருப்பதி திருமலை ஏழுமலையான் திருக்கோவில்.  பெரிய கட்டமைப்போடு செயல்படும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வசதிகள் ஆன்லைன் வழியாகவே வழங்கப்படுகின்றன. சுவாமி அபிஷேகம்  ஆன்லைன் வழியாகவே வீட்டில் இருந்தே காணலாம். திருப்பதி பிரசாதமான லட்டு  உட்பட பலவற்றை ஆன்லைனில் வாங்கலாம். கோவிலுக்கு வருவதற்கு சிறப்பு கட்டண தரிசன டிக்கட் உட்பட பல தரிசன டிக்கட்களை ஆன்லைனில் புக்  செய்யலாம். காணிக்கை தொகையைகூட ஆன்லைன் வழியாகவே கோவில் உண்டியலில் செலுத்தலாம் என பெரிய செட்டப்பாக இயங்குகிறது டீடீடி  தேவஸ்தானம்.   இதன் பெயரிலும் பல போலி இணையதளங்கள் உள்ளன. டிடிடீ தேவஸ்தானத்தின்  அதிகாரபூர்வ இணையதளம் போலவே போலியாக இணையதளங்கள் உருவாக்கி டிக்கட் விற்பனை செய்துள்ளனர். அந்த டிக்கட்களை கொண்டு சென்று தந்தபோது அது போலி எனத் தெரியவந்துள்ளது. கோவில் பெயரைச் சொல்லி டிக்கட் விற்பனை,  லட்டு விற்பனை, ரூம் அறைகள் வாடகை, உண்டியல் பணம் என லட்சம் லட்சமாக  ஏமாற்றியதை ஏமாந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர்.

 

2018 ஆம் ஆண்டிலேயே திருப்பதி சைபர்செல் போலீஸாருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புகார் தந்தனர். இப்போதும் சில போலி இணையதளங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் அதிமுகவை சேர்ந்த மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனம் தான் மதுபானம் கொள்முதல் முதல் விற்பனை வரை செய்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் டாஸ்மாக் ஆன்லைனில் விற்பனை செய்யலாமே என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.  அடுத்த சில நாட்களில் டாஸ்மாக் பெயரில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டது.  அதில் பியர், பிராந்தி, ரம் என பட்டியலிட்டு அதன் உள்ளே என்ன கம்பெனி என  வரிசைப்படுத்தி, அதில் எவ்வளவு அளவு சரக்கு 250 மில்லியா, 500 மில்லியா, 750  மில்லியா? என செலக்ட் செய்து பணம் கட்டினால் வீட்டுக்கே சரக்கு கொண்டு வந்து தரப்படும். அதற்கு முகவரி தரவேண்டும் எனச் சொல்லப்பட்டிருந்தது. சில மணி நேரத்தில், வாட்ஸ்அப் வழியாக அந்த இணையதளத்தின் முகவரி பரவி ஆயிரக்கணக்கானவர்கள் சரக்கு செலக்ட் செய்து பணம் கட்டியதாக கூறப்படுகிறது. அந்த இணையதளம் போலி என டாஸ்மாக் நிறுவனம் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் தந்தது. சைபர் க்ரைம் போலீஸார் அந்த இணையத்தை  முடக்கினர். பணம் கட்டியவர்களுக்கு குடிக்காமலே மயக்கம் வந்தது

 

ஆன்லைன் மோசடிகள் இன்னும் எத்தனை வகைகள் உள்ளன? தனி மனிதர்களை குறி வைத்து ஏமாற்றலாம். நிறுவனங்களை ஏமாற்ற முடியாதே என  நினைக்கலாம். பக்காவான வலைப்பின்னலில் பாதுகாப்பாக உள்ள ஆன்லைன் டிஜிட்டல் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கோடி முதல் ஆயிரம் கோடி  ரூபாயை காலி செய்த ஆன்லைன் திருட்டு தெரியுமா?  

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்...

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; உங்க ஃபோனை உபயோகிக்கும் கொள்ளையர்கள் - பகுதி 6 

 

 

சார்ந்த செய்திகள்