பெற்றோரின் சொத்து மீது ஆசைப்பட்டு மகன்கள் செய்த துரோகத்தினை புலனாய்வு செய்தது பற்றி முதல் பெண் துப்பறியும் நிபுணர் மாலதி விளக்குகிறார்.
இரண்டு பெண்கள் வந்தார்கள், அவர்கள் கையோடு பத்திரம் ஒன்றையும் எடுத்து வந்திருந்தார்கள். இந்த பத்திரத்தில் உள்ள கையெழுத்து எங்க அம்மா, அப்பா போட்டதா? அல்லது பொய்யாக போடப்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே அவர்கள் கேட்டுக் கொண்டதாகும்.
நாமும் அந்த பத்திரத்தின் கையெழுத்தை இரண்டு கைரேகை நிபுணர்களை வைத்து பரிசோதித்தோம். முடிவில் அந்த கையெழுத்து அந்த பெண்ணின் பெற்றோர்தான் போட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாயிற்று. என்னதான் இந்த கையெழுத்தில் பிரச்சனை என்று இன்னும் தீவிரமாக விசாரித்தபோது தெரிய வந்தது, மகன்கள் தங்களது பெற்றோரை ஏமாற்றி 40 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்திருக்கிறார்கள்.
பெற்றோரின் சொத்துக்களை அவர்கள் மனப்பூர்வமாக தங்களது மகன்களுக்கு தானம் செட்டில் செய்யவில்லை. ஆனால் மகன்கள் தங்களுக்கு வியாபாரம் செய்ய தன் பெற்றோர் ஒரு சூரிட்டி கையெழுத்து போட வேண்டும் என்று பத்திர பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கையெழுத்தினை வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது புலனாய்வின் மூலம் தெரிய வந்தது.
இதைக் கண்டறிந்து ரிப்போர்ட்டினை அந்த பெண்களிடம் கொடுத்தோம். தங்களது பெற்றோரை ஏமாற்றி சொத்துக்களை சகோதரர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரிந்தும் அவர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தங்களது பெற்றோரை தாங்கள் கவனித்துக் கொள்வதாக சொல்லிவிட்டார்கள். அந்த வயது முதிர்ந்த பெற்றோரும், மகன்கள் தங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டார்கள் அதே சமயத்தில் நமக்கும் மருத்துவ உதவி செய்திருக்கலாம் என்று வருந்தினார்கள்.