Skip to main content

தற்காப்பு, தற்பெருமை தெரியும்... தற்படம் தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 20

Published on 14/09/2018 | Edited on 25/09/2018
soller uzhavu

 

 

தான், தன் என்னும் இரண்டு சொற்களை அறிவீர்கள். தான் என்பது படர்க்கை ஒருமைப் பெயர்.   “தான் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசினான்” என்னும்போது அங்கே தான் என்பது படர்க்கையிடத்திலுள்ள ஒருமையைக் குறிக்கிறது.

தான் என்பதற்கு ஆண்பால், பெண்பால் வேறுபாடு இல்லை. “தான் நினைப்பதைச் செய்து முடித்தே பழக்கப்பட்டவள் அவள்” என்னும்போது அங்கே தான் என்பது பெண்பாலுக்கும் பொருந்துகிறது.

 

தான் ஓடினால்தான் தப்பிக்க முடியும் என்று அந்த மான் நினைத்தது – இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். இங்கே தான் என்பது படர்க்கை ஒருமையில் மானைக் குறிக்கிறது.

 

ஆண்பால், பெண்பால் உயர்திணைக்கும் வந்தது. மான் என்னும் ஒன்றன்பாலில் அஃறிணைக்கும் வந்தது. தான் என்னும் அச்சொல் அத்துணை வலிமையானது. எழுதுவோர்க்கும், உரியவாறு விளக்கிப் பேசுவோர்க்கும் தான் என்னும் சொல் நன்கு பயன்படும். தான், தன் போன்ற சொற்களை எழுத்திலும் பேச்சிலும் நன்கு பயன்படுத்துவோரை நான் நல்ல மொழிப்பயிற்சி பெற்றுள்ளவர்களாக மதிப்பேன்.

 

பேச்சு வழக்கிலும் தான் என்பதனைப் பலவாறு பயன்படுத்துவார்கள்.

‘தான் புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு நினைக்கறான்’

‘தானே பொண்ணு பார்த்துக் கட்டிக்கிட்டான்’

‘தான் பண்றதை ஒருத்தருமே குறை சொல்லக்கூடாதுன்னு அவளுக்கு நினைப்பு’

 

தான் என்னும் சொல் எல்லாவிடங்களிலும் நன்றாகப் பயன்படுகிறது. தான் தான் என்றே எப்போதும் சொல்ல முடியுமா ? பெயர்ச்சொல் என்று வந்தாலே அது பல்வேறு சொல்லுருபுகளை ஏற்க வேண்டும். ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகளை ஏற்க வேண்டும். அப்போதுதான் ஒரு சொற்றொடரில் முழுமையாகப் பொருளுணர்த்தி நிற்க முடியும்.

 

தான் என்ற சொல் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது என்னாகும் ?

 

தான்+ஐ அழைக்கும்படி கூறினான்.

தன்னை அழைக்கும்படி கூறினான்.

 

இங்கே தான் என்பது தன் என்று மாறிவிடும். தான் என்னும் படர்க்கை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபுகள் உள்ளிட்ட ஏதேனும் சொல்லுருபை ஏற்கும்போதோ, அல்லது புதுச்சொல்லாக்கத்திற்கு உடன்படும்போதோ தன் என்று மாறிவிடும்.

 

தான் + ஐ என்பது தானை என்று ஆகாது. தன்னை என்று ஆகும். வேற்றுமை உருபு வரும்போது தான் என்பது தன் என்று மாறிவிடும்.

 

தான் + ஐத் தான் காக்கின் சினங்காக்க. இதனை எப்படி எழுத வேண்டும் ?

தன்னைத் தான் காக்கின் சினங்காக்க என்று எழுத வேண்டும்.

 

தன்னை, தன்னால், தனக்கு, தன்னில், தனது, தன்கண் என்று வேற்றுமை உருபுகள் ஏற்றப்படும். தானை, தானால், தானக்கு என்று எப்போதும் தோன்றுவதில்லை.

 

தான் என்பது எழுவாயாக நிற்கையில் அடுத்து வரும் பயனிலை வினைச்சொல்லுக்குத் தான் என்பது எவ்வித மாற்றமும் பெறாமல் அப்படியே நிற்கும்.

 

தான் அடைந்த செல்வம் என்பதைத் ‘தானடைந்த செல்வம்’ என்று புணர்த்தி எழுதலாம். தான் எழுதிய கட்டுரையை மீண்டும் படித்துப் பார்த்தான் என்பதனையும் புணர்த்தலாம். ‘தானெழுதிய’ என்று எழுதலாம். ‘தானாக’ வந்தான் எனலாம்.

 

தான் என்ற சொல் தன் என்று திரிவதை விளங்கிக்கொண்டால் எண்ணற்ற புதுச் சொற்களை ஆக்கலாம். அப்படித்தான் ஆக்கினார்கள்.

 

சங்க இலக்கியத்தில் தற்கொலை என்ற சொல்லைக் காண முடியுமா ? அன்பும் அறனுமே வாழ்வின் பயனாக வாழ்ந்தோர் நடுவில் கொலை என்பதே கொடுஞ்சொல். அதனினும் கொடிய சொல்லான தற்கொலைக்கு அங்கே என்ன சூழல் இருக்க முடியும் ? தற்கொலை என்பது தற்காலக் கொடுமை.

 

பிறிதொன்றைக் கொல்வது கொலை என்றால் தானே தன்னைக் கொல்வதை என்னவென்று சொல்வது ? இங்கேதான் தன் என்ற சொல் உதவுகிறது. தன்னைத்தானே செய்யும் கொலை என்னும் பொருளில் ‘தன் + கொலை = தற்கொலை’ என்று புதுச்சொல் படைக்கிறோம். தன் என்பதை முன்னொட்டாகக்கொண்டு நூற்றுக்கணக்கான சொற்களைத் தோற்றுவிக்கலாம்.

 

தன்னைத்தான் காத்துக்கொள்வது தற்காப்பு

தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வது தற்பெருமை

எவ்விதத் தூண்டலுமின்றித் தானாக நிகழும் செயல் தற்செயல்

தானாற்றியதால் தன்னை விட்டு நீங்காத வினை தன்வினை (தன்வினை தன்னைச் சுடும்)

தன்னைத் தானே எடுத்துக்கொள்ளும் படம் தற்படம் (செல்பி)

முந்தைய பகுதி:

 

 

ஆயுள் எந்த மொழிச்சொல் தெரியுமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 19
 

 

அடுத்த பகுதி:

 

வெசை என்பது என்ன சொல்? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 21