நான் மிகுதியாக எதிர்கொண்ட ஐயவினாக்களில் ஒன்று “இதற்குப் பெண்பால் என்ன ?’ என்பதுதான். பால் பகுப்பில் ஆண்பாலும் பெண்பாலும் தலையாயவை என்பதனால் எவ்வோர் ஆண்பாற்கும் உரிய பெண்பாற்பெயர் இருந்தே தீரும் என்பது நம் நம்பிக்கை. ஆணும் பெண்ணும் கலந்த நிலையில் இருக்கும் பால் ஆண்பாலா பெண்பாலா என்பதும் ஓர் ஐயம். அது மட்டுமின்றி ஒவ்வோர் ஆண்பாற்கும் பெண்பால் தேடினால் பலவற்றுக்கு இல்லை. அதனை முன்வைத்து இது ஆணாதிக்கக் குமுகாயம், மொழியே ஆணாதிக்க மொழிதான் என்று இளநிலைக் குதியாளர்கள் குதியாளம் போடுவதைப் பார்க்கின்றோம்.
இன்றைக்கு நமக்குக் கிடைத்த வாய்ப்புகள் வல்லமைகள் முன்னேற்றங்கள் முற்போக்கினங்கள் ஆகியவற்றைக்கொண்டு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய குமுகாயத்தினை மதிப்பீடு செய்வது அறிவுடைமை ஆகாது. அக்காலத்துத் தேவையும் கருத்தும் பாதுகாப்பும் போக்குவரத்தும் இருப்பும் இன்மையும் இன்றுள்ளவற்றோடு எவ்வகையானும் பொருத்தப்பாடுகள் உடையவையல்ல. அன்றைய மொழிப்பாடுகளில் பாற்செயல்களே வெவ்வேறாக இருந்திருப்பின் எங்ஙனம் இருபாற்சொற்கள் தோன்றி வழங்கலாகும் ? மேலும் இன்றைய கருத்தியல்கள் இறுதியானவையும் முடிவானவையுமாம் என்று உறுதி கூறலாகுமா ? பெருவழிநடையில் நாம் நிற்குமிடம் சிறுபுள்ளி.
ஒரு சொல் எப்படித் தோன்றும் ? முதலில் தொடக்க நிலையில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கத் தோன்றும். அது ஆணை நோக்கித் தோன்றினால் அங்கே முதற்சொல் ஆண்பாலாக இருக்கும். பெண்ணை முன்வைத்துத் தோன்றினால் பெண்பாலாக இருக்கும். அதன் பிறகு அதன் எதிர்பாற்குரிய சொல் தோன்றலாம். தோன்றாமலே விளங்கினாலும் பிழை காண்பதற்கில்லை. அன்றிருந்த நிலையில் மன்னன் என்பவன்தான் குடிகாக்க முனைமுகத்து நிற்க வேண்டும். மன்னனுக்குப் பெண்பால் என்ன என்றால் விடையில்லை.
புலவன் என்ற சொல் ஆண்பாற்சொல். அதற்குப் பெண்பால் என்ன ? புலவி என்று சொல்ல இயலாது. காதலவரிடையே ஊடல் முதிர்கின்ற அந்தப் பொன்னான நேரத்திற்குப் ‘புலவி’ என்று பெயர். ‘புலவி நுணுக்கம்’ என்றே திருக்குறளில் ஓர் அதிகாரம் வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால் புலவன் என்பதற்குப் பெண்பால் ‘புலவி’ என்றால் பொருத்தப்பாடு தோன்றவில்லை. ஆண்பாலோடு நிற்கும் பெயர்களில் பெண்பால் தோற்றங்கள் ஏற்பட்டபோது நம் மூத்தோர் முன்னொட்டாகவே “பெண்பால்” என்று சேர்த்துக்கொண்டனர். பெண்பாற்புலவர் என்று கூறியமைந்தனர். ஔவையார் “பெண்பாற்புலவர்”. பெரும்புலவர்கள் கோலோச்சிய அக்காலத்திலேயே இப்படிச் சொல்வது வழக்காக இருந்தது. நண்பன் என்ற சொல்லுக்கு நண்பி என்பது தவறு. ‘பெண்பால் நண்பர்’ என்றே சொல்ல வேண்டும்.
ஆண்பாற்கும் பெண்பாற்கும் தனித்தனி விகுதிகள் இருக்கின்றன. விகுதி என்பது ஒரு சொல்லின் பின்னொட்டு. இறுதிப்பகுதி. ஒருவன் என்பதில் ஒரு என்பது ஒருமையை, ஒற்றைத்தன்மையைக் குறிக்கிறது. அன் என்பது பின்னொட்டாகச் சேர்ந்த விகுதி. இங்கே அன் என்பது ஆண்பால் விகுதி. ஒருவன் என்னும்போது ஓர் ஆணைக் குறிக்கிறது. ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி. ஒருவள் என்று சிலர் பிழையாக எழுதுகின்றனர். அள் என்பதும் பெண்பால் விகுதிதான். ஆனால், எல்லாவிடங்களிலும் அள் விகுதி வருவதில்லை. குறவன் குறத்தி, உழவன் உழத்தி, ஒருவன் ஒருத்தி… இப்படித்தான் வரவேண்டும்.
அன், ஆன் ஆண்பால் விகுதிகள் என்றால் அள், ஆள் பெண்பால் விகுதிகள்.
மணமகன் மணமகள், வெறுங்கையன் வெறுங்கையள், பிறன் பிறள், அவன் அவள் என்னுமிடங்களில் அன், அள் விகுதிகள் இருபாற்கும் முறையே வருகின்றன. அடியான் அடியாள், ஆண்டான் ஆண்டாள் ஆகிய இடங்களில் ஆன் ஆள் விகுதிகள் இருபாற்கும் வருகின்றன.
தோழன் தோழி, அரசன் அரசி, கூனன் கூனி, குமரன் குமரி, கிழவன் கிழவி, காதலன் காதலி ஆகிய இடங்களில் இ என்ற விகுதி பெண்பாற்கு வந்தது. காதலி, காதலள், காதலாள் என்று பலவாறும் சொல்லத் தகுந்த இடங்களும் இருக்கின்றன. ஐகார விகுதி பெறும் பெண்பாற்பெயர்களும் இருக்கின்றன. ஆசிரியன் ஆசிரியை, ஐயன் ஐயை.
ஆண்பால் பெண்பால் சொற்கள் இவ்வாறு இணையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தொடர்பே இல்லாமலும் இருக்கலாம். ஆண் என்பதற்குப் பெண் என்பதே தொடர்பில்லாத சொல்தானே ? அடூஉ மகடூஉ என்பன முறையே ஆண் பெண்ணைக் குறிக்கும் தூய தமிழ் வழக்காகும். தந்தை தாய், பாணன் பாடினி. கன்னிக்குக் காளை என்பது ஆண்பால்.
ஆன்றோன், சான்றோன், அண்ணல், செம்மல், அமைச்சன் போன்ற சொற்களுக்குப் பெண்பால் இல்லை. பேதை பெதும்பை அரிவை தெரிவை போன்ற சொற்களுக்கு ஆண்பால் இல்லை.
முந்தைய பகுதி:
அடுத்த பகுதி:
‘ஆச்சி’க்கு இத்தனை அர்த்தமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 24