தான் சந்தித்த வித்தியாசமான ஒரு வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
கல்யாணமாகி 15 வருடங்கள் கழித்து ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால் அந்தக் குழந்தையை அவர்கள் செல்லமாகவும் பாதுகாப்பாகவும் வளர்த்தனர். தந்தை பெரிய உத்தியோகத்தில் இருந்தார். தாய் வீட்டில் இருந்தார். தங்களுடைய வீட்டில் அடிக்கடி பொருட்கள் காணாமல் போகின்றன என்று அவர்கள் நம்மிடம் புகார் கொடுத்தனர். வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று நாம் விசாரித்தபோது தங்களுடைய பெண் இருப்பதாகவும், அவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொருட்களை பெண்ணே எடுத்திருப்பாளா என்று கேட்டபோது அவர்களுக்கு கோபம் வந்தது.
நாங்கள் விசாரணையில் இறங்கினோம். பள்ளிக்கு செல்லும்போது அந்தப் பெண் ஒரு பையனோடு தொடர்ந்து பேசி வந்தாள். இதுகுறித்து நாங்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அவர்களால் அதை நம்ப முடியவில்லை. விலையுயர்ந்த ஒரு பொருளை வீட்டில் வாங்கி வைக்குமாறும், அது எவ்வாறு காணாமல் போகிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம் என்றும் அவர்களிடம் தெரிவித்தோம். அதன்படி அவர்களும் செய்தனர். நாங்கள் நினைத்தபடியே அந்தப் பொருளை அவர்களுடைய பெண் எடுப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
எடுத்துச் செல்லும் பொருளை அந்தப் பையனிடம் அவள் கொடுப்பதையும் நாங்கள் கவனித்தோம். அந்தப் பெண் மைனர் என்பதால் போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் புகார் கொடுத்தோம். அங்கிருந்து அவளை, பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவனுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்று அவர்கள் விசாரித்தனர். அவனுடைய நட்பு குறித்து அவள் கூறினாள். பெற்றோருக்குத் தெரியாமல் உருவான நட்பு அது. வீட்டில் தான் உணர்ந்த தனிமையால் தனக்கான நட்பை அவள் உருவாக்கிக் கொண்டாள். குழந்தைகளோடு பெற்றோர் முதலில் நேரம் செலவிட வேண்டும்.
குழந்தைகளை விளையாட விட வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்களுக்கு இதுபோன்ற தவறான விஷயங்கள் தான் தோன்றும். குழந்தைகளுக்கான நல்ல நட்பு வட்டத்தை பெற்றோரே உருவாக்கித் தர வேண்டும். சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அவர்களை செல்லச் சொல்லி வற்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையானவற்றை நாம் தான் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். சின்னச் சின்ன வீட்டு வேலைகளை குழந்தைகள் கற்றுக்கொள்வது தவறான விஷயமல்ல.