எக்ஸாம் ரிசல்ட் பற்றி மகளுக்கு அடிக்கடி மார்க் பற்றியே பேசி தொல்லை கொடுத்த பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
பிளஸ் 2 எக்ஸாம் முடித்து ரிசல்ட் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு பெண் போன் போட்டு பேசினாள். எக்ஸாமில் நன்றாக தான் தேர்வு எழுதியிருந்தாலும், வீட்டில் உள்ள அனைவரும் மார்க்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி அடிக்கடி பேசுவதால், தன் மீதான நம்பிக்கை கொஞ்ச கொஞ்சமாக குறைந்து தான் நினைத்ததை விட மார்க் கம்மியாக வந்துவிடுமோ என்ற பயம் வருகிறது. அதனால், தனது அப்பா அம்மாவிடம் பேசச் சொல்லி சொன்னாள்.
அப்பாவின் நம்பரை அந்த பெண் கொடுத்ததால், அவருக்கு நான் கால் பண்ணி பேசினேன். மகள் கவுன்சிலருக்கு கால் பண்ணி பேசியிருக்கிறாள் என்று சொன்னவுடன் அவருக்கு கொஞ்சம் பதற்றம் வந்துவிட்டது. அதன் பின், பெண் சொன்ன விஷயத்தை பற்றி டிஸ்கஸ் செய்யலாம் என்று சொன்னவுடன் அவருக்கு சரி என்றார். அதன் பின், மூன்று பேரையும் வீடியோ கால் மூலம் மீட் பண்ணி பேச ஆரம்பித்தேன். மார்க் குறித்து அவர்கள் மூவரும் விவாதித்து பேசி கொண்டிருந்தார்கள். உடனே, மகள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை காது கொடுத்து கேளுங்கள் என்றேன். ஒருவேளை மார்க் கம்மியாக இருந்தால் உறவினர்களை எப்படி ஃபேஸ் செய்வது போன்ற கேள்விகளை பெற்றோர் முன்வைத்தனர்.
எப்படி மற்றவர்களின் பெட்ரூமை எட்டி பார்ப்பது தவறோ அது போல் தான் மாணவர்களின் மார்க் பற்றி கேட்பது. மார்க் முக்கியம் தான். ஆனால், அதுவே வாழ்க்கையாகாது. மார்க் கம்மியாக ஆவதால் நமது வாழ்க்கை அங்கே முடிவடையாது. இதையெல்லாம் சொன்னேன். முதல் 40 நிமிடம் பெற்றோர் அதை ரியலைஸ் செய்யாமல் கோபமாக இருந்தார்கள். அப்போது, அந்த குழந்தையே தனது பெற்றோரிடம் நிறைய கேள்விகளை கேட்டாள். எக்ஸாமில் தன்னால் முடிந்த அளவுக்கு எழுதிவிட்டேன். ஆனால் எவ்வளவு மார்க் வரும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. என் மீது நம்பிக்கையில்லாமல் தானே, மார்க் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். நிறைய உழைப்பை போட்டு, எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் இந்த தேர்வை எழுதியிருக்கிறேன். எனக்காக நீங்கள் மற்றவர்களிடம் ஏன் பேசவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை அவள் பெற்றோரிடம் முன்வைத்தாள். அதன் பிறகு, பெற்றோர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். எக்ஸாம் ரிசல்ட்டில், அந்த பெண் 95% சதவீதம் மார்க் எடுத்தாள். பெற்றோர் கொடுத்த மன அழுத்தத்தால், இவ்வளவு மார்க் எடுத்தாலும், தன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று குழந்தை சொன்னாள்.