Skip to main content

தம்பி வீட்டுக்கு ஓடிய மனைவி; குழந்தையுடன் தவித்த கணவர் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:92

Published on 10/10/2024 | Edited on 10/10/2024
 advocate-santhakumaris-valakku-en-92

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சேக் மைதீன் என்பவருடைய வழக்கு இது. இருவீட்டார் சம்மத்துடன் அவருக்குத் திருமணமாகியிருக்கிறது. இதையடுத்து சேக் மைதீனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. பிறகு அந்த குழந்தையின் நடவடிக்கைகளில் மாற்றம் நிகழ ஆரம்பித்தது. என்னவென்று மருத்துவரிடம் பரிசோதித்ததில் குழந்தைக்கு மனநல பாதிப்புடன் இருந்தது தெரியவந்தது. பின்பு மருத்துவர், சென்னையில் குழந்தைக்கு சிகிச்சை சரியாக கிடைக்காது என்றும் பெங்களூரிலுள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு தெரபி கொடுங்கள் என்றும் கூறியிருக்கிறார். அவர் சொன்னது போல் சேக் மைதீனும் அவரது மனைவியும் அங்கு சென்று இரண்டு வருடன் அவர்களின் குழந்தைக்கு சிகிச்சையளித்துள்ளனர். அங்குள்ள மருத்துவர், குழந்தைக்கு இருக்கும் இந்த பிரச்சனையை ஓரளவுதான் சரி செய்ய முடியும் மற்றவை எல்லாம் பெற்றோர்கள் வளர்ப்பில்தான் இருக்கிறது. அதனால் குழந்தையைக் கவனமுடன் பராமரிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். அதன் பின்பு சேக் மைதீன் குடும்பம் சென்னைக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். பின்பு மீண்டும் அவரது மனைவி கர்ப்பமாகியிருக்கிறாள். அந்த நேரத்தில் அவரது மனைவி முதல் குழந்தைக்கு ஆனதுபோல் அடுத்து பிறக்கும் குழந்தைக்கும் அதுபோல பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று வருத்தப்பட்டிருக்கிறாள். பின்பு நல்லபடியாக இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவி வீடு வாங்கி கொடு என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அவர் இரண்டு வருடங்கள் பெங்களூரில் போனதால் தொழிலை சரிவரப் பார்க்க முடியாமல் போனது. அதனால் தொழில் முன்னேற்றம் ஆனது நல்ல வீடு வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். சேக் மைதீன் ஊர் ஊராக சென்று பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். அந்த வேலைக்காக வெளியில் அடிக்கடி போக வேண்டி சூழ்நிலை இருப்பதால் அவரது மனைவி குழந்தைகளைப் பார்க்க வேண்டியதாக இருந்தது. இதனால் அவரது மனைவி, முதல் குழந்தை அடிக்கடி சத்தம் போடுகிறது.  அக்கம்பக்கத்தினர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாதா என்று தன்னை சத்தம் போடுகின்றனர். அதனால் வீடு கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று சேக் மைதீனிடம் சண்டைபோடத் தொடங்கியிருக்கிறாள். 

இதற்கிடையில் சேக் மைதீனுடைய மனைவியின் தம்பி, சேக் மைதீனுக்கு வீடு வாங்கி தர துப்பில்லை என தனது அக்காவிடம் கூறி சண்டை மூட்ட ஆரம்பித்திருக்கிறான். ஒரு கட்டத்தில் சேக் மைதீன், வருமானம் சரியாக வராததால் வீடு வாங்க முடியாத சூழல் இருப்பதாக தனது மனைவியிடம் கூறியிருக்கிறான். அதன் பிறகு ஒரு நாள் சேக் மைதீன் தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, பாத்திரங்களை கீழே தள்ளிவிட்டு முதல் குழந்தை மட்டும் அழுதுகொண்டு இருந்துள்ளது இரண்டாவது குழந்தையை காணவில்லை. அதேபொல் மனைவியும் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளார். பின்பு மனைவியைத் தேடிப் பார்க்கையில் அவள் தனது தம்பி வீட்டில் இருப்பதை தெரிந்து அங்கு சென்று மனைவியை அழைத்து வர சேக் மைதீன் சென்றிருக்கிறார். அங்கு சேக் மைதீனை அவரது மனைவி, கதவை திறக்காமல் உன்னுடன் வாழ பிடிக்கவில்லை என சண்டை போடத் தொடங்கியிருக்கிறாள் அருகிலிருந்த அவளது தம்பியும் சண்டை போட்டிருக்கிறான். பதிலுக்கு சேக் மைதீன் வீடு வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும் ஏன் குழந்தையை தனியாக விட்டுப் போன என்று சத்தம்போட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பெரியவர்களை வைத்துப் பேசி பார்த்தும் மனைவி வீட்டிற்கு வருவதாகத் தெரியவில்லை. அதனால் தான் பொருள் விற்கச் செல்லும் இடங்களுக்குத் தனது முதல் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அதனால் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளது. போகின்ற வழியில் குழந்தைக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததில் தொடர்ந்து வயிற்றுப்போக்கில் குழந்தை பாதிப்படைந்துள்ளது. இதனால் குழந்தையைப் பராமரிக்க மனையிடம் சென்று அடிக்கடி சொல்லி இருக்கிறார். ஆனால் மனைவி வீடு இருந்தால் வருவேன் என இரண்டாவது குழந்தையுடன் தம்பி வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் முதல் குழந்தைக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவித்தொகையும் அவளே வாங்கி வந்திருக்கிறாள். சில நாட்கள் கழித்து சேக் மைதீன் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த சூழலில்தான் சேக் மைதீன், இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று என்னிடம் வந்தார். அதன் பிறகு நான் இருவரும் சேர்ந்து வாழ குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தேன். ஒவ்வொரு வாய்தாவுக்கும் சேக் மைதீன், குழந்தையையும் அழைத்து வந்தார். இதைப் பார்த்தாவது தன் மனைவி இறங்கி வருவாள் என்ற எண்ணத்துடன் அதைச் செய்திருக்கிறார். அதன் பிறகு குழந்தை மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததிற்கு கொடுத்த சான்றிதழை நீதிமன்றத்தில் கொடுத்தோம். அதனால் குழந்தையைப் பரிசோதிக்க நீதிமன்றம் சார்பில் மருத்துவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்கள் பரிசோதித்து நீதிமன்றத்திடம், பெற்றோர்கள் இதுபோல பிரச்சனையில் இருக்கும் குழந்தைகளை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனர். இதையெல்லாம் பார்த்த நீதிபதி குழந்தையின் நலன் கருதி சேக் மைதீன் மனைவிக்கு சில அறிவுரைகள் கூறினர். அதன் பிறகு சேக் மைதீன் மனைவி, அவள் தொடர்ந்த வழக்கை  வாபஸ் செய்து தற்போது குழந்தைக்காக சேக் மைதீனுடன் வாழ்ந்து வருகிறார். இப்படித்தான் இந்த வழக்கு நல்லபடியாக முடிவுக்கு வந்தது.
 

சார்ந்த செய்திகள்