Skip to main content

மாமனார் மீது அருவருப்பான பழி சுமத்திய மருமகள்  - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 31

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 advocate-santhakumaris-valakku-en-31

 

மாமனார் மீது பழி சுமத்திய மருமகள் குறித்த வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

ஆனந்த் என்பவருடைய வழக்கு இது. அவர் ஒரு அப்பாவி. பயந்த சுபாவம் கொண்டவர். அப்பா அம்மாவுக்கு ஒரே பையனான அவருக்கு குடும்பத்தால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண்ணின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்தன. ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனந்த் ஒல்லியான மனிதர். அதனால் அவருக்கு பெண் கிடைப்பதில் சிரமம் இருந்தது. எனவே இந்த சம்பந்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று அந்தப் பெண் கூறினாள்.

 

அந்தப் பெண்ணை கன்வின்ஸ் செய்து திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் எந்த ஒத்துழைப்பும் இல்லை. அந்தப் பெண்ணை தங்களுடைய மகள் போல் கவனித்துக் கொண்டனர் ஆனந்தின் பெற்றோர். சமையலறையே தனக்கு ஆகாது என்றாள் அந்தப் பெண். மாமியாரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அனைத்து வகையிலும் அவளை அவர்கள் அட்ஜஸ்ட் செய்துகொண்டனர். ஆனால் தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவள் நினைத்தாள். நினைத்தபடி சென்றாள். அவனை நிரந்தரமாக தன் அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்ல நினைத்தாள். ஆனால் அது நடக்கவில்லை.

 

கணவனின் வீட்டுக்கு அவள் மீண்டும் அழைத்து வரப்பட்டாள். அதன் பிறகு அவளுடைய தாயும் சேர்ந்து மாப்பிள்ளையின் குடும்பத்தை மிரட்ட ஆரம்பித்தார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்காக கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு அவள் செல்லத் தொடங்கினாள். எப்போதும் வீட்டில் சண்டை என்கிற நிலை இருந்தது. ஒருநாள் ஆனந்தை அவள் அடித்து அதில் அவனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. பயத்தில் அவள் மீண்டும் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றாள். பெண்ணுடைய தாயின் மிரட்டலான பேச்சு அதன் பிறகும் தொடர்ந்தது. ஆனந்த் போலீஸ் ஸ்டேஷன் சென்றான். 

 

போலீஸ் விசாரணைக்கு வந்த அந்தப் பெண், மாமனார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என்கிற பொய்யைச் சொன்னாள். அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியான விஷயங்கள் எதுவும் நடக்கவே இல்லை. அதன் பிறகு விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவளுடைய தவறான போக்கு நீதிமன்றம் உட்பட அனைவருக்கும் புரிந்தது. இறுதியில் ஆனந்துக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த திருமண வாழ்க்கை ஆனந்துக்கு மன உளைச்சலை மட்டுமே தந்தது. ஆண்களும் பெண்களும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு நிறைய யோசிக்க வேண்டும். பிடித்தால் சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் விலக வேண்டும்.