குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
நரேஷ் என்பவருடைய வழக்கு இது. பார்க்க கருப்பு, நல்ல உயரம். ‘செஃப்’ஆக சிங்கப்பூரில் பணி புரிகிறார். திருமணத்திற்கு வரன் பார்க்க ஒரு பெண் பிடித்து போகிறது. இவர்கள், பெண் வீட்டாரிடம் ஏதும் பெரிதாக டிமாண்ட் செய்யவில்லை. பையனுக்கு வயசான நோயாளியான அம்மா, அப்பா மற்றும் கூட தம்பி, அக்கா இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி சிங்கப்பூர் செல்கின்றனர். கொஞ்ச நாள் கழித்து பெண் வேலை பார்க்க அனுமதி கேட்க நரேஷூம் ஒத்துக்கொள்கிறார். ஆனால், அந்த பெண் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுப்பதில்லை. இவருக்கோ கொஞ்சம் குறைவான சம்பளம் தான். எனவே இவரை இளக்காரம் செய்து முதலில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கூட பிறந்த தம்பிக்கும் வேலை கிடைத்து விட சிங்கப்பூர் அழைத்து வந்து தன் கூடவே தங்கவைத்து கொள்கிறாள். அவனும் சேர்ந்து, நரேஷை மரியாதை குறைவாக பேசுகிறான்.
இருவரும் குழந்தை பேறுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள இந்தியா வருகின்றனர். அதில் நரேஷுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது. அதிலிருந்து சுத்தமாக மரியாதை போகிறது. அவனை சொல்லக்கூடாத வார்த்தை சொல்லியெல்லாம் பரிகாசம் செய்கிறாள். தனக்கிருக்கும் செல்வாக்கினால் கணவனுடன் எதற்கு செல்லவேண்டும் என்று தன் பெற்றோர் வீட்டிலேயே இருந்து விடுகிறாள். நரேஷ் எடுத்து சொல்லி தன் பெற்றோருடனும் சிறிது நாட்கள் தங்கும்படி சொல்ல இவளும் இரண்டு நாட்கள் மாமியார் வீட்டிற்கு செல்கிறாள். ஆனால், சென்று வரும்போதெலாம் ஒரே பிரச்சனை தான். அவர்களையும் மரியாதை இல்லமால் மட்டமாக பேசி ஒரு நிலையில் இரு வீட்டிற்கும் உறவு சிக்கலாக ஆகிறது. ஒருநாள் திடீரென்று போலீசில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, வரதட்சணை கொடுமை, மானபங்கப்படுத்துதல் என்றும் கணவனின் தம்பி தன்னிடம் தவறாக இருக்க முயற்சி செய்தான் என்றும் 498AIPCக்கு கீழ் பொய் அவதூறு வழக்குகளை அடுக்கி விடுகிறாள். அவளிடம் செல்வாக்கு அதிகம் இருக்க இவர்களின் பேச்சு போலீசில் எடுபடவில்லை. எஃப். ஐ.ஆர் பதிவாகி வீட்டிற்கு போலீஸ் வந்து விடுகிறது.
நரேஷ் சிங்கப்பூரிலிருந்து வரவில்லை என்றால் குடும்பமே கைது செய்யப்படும் என்று வர அந்த நிலையில் தான் நரேஷ் என்னை வெளிநாட்டிலிருந்து என்னை தொடர்பு கொண்டார். தன்னால் இப்போது ஊருக்கு வரமுடியாது என்றும் போலீஸ் கேஸ் என்று ஆகிவிட்டால் எதிர்காலமே போய்விடும் மேடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். இவள் ஆட்சியாளர் அலுவலகத்தில், சமூக நலத்துறையிடம் குடும்ப வன்முறை சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தாள். எனவே அங்கு சென்று இதுபோன்று நரேஷ் வெளிநாட்டில் இருக்கிறார். விசாரணைக்கு இங்கே வரவும் தயாராக இருக்கிறார். இவர்கள் போட்ட நகையை கூட திரும்ப கொடுத்து விட்டார்கள். இது ஒரு குடும்ப தகராறு தான் என்று பேசினோம். மேலும், அந்த சமயம் தான் பெண்கள் அதிகமாக பொய் வரதட்சணை வழக்கு போட்டு அப்பாவி ஆண்களை உள்ளே தள்ளுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றதில் எடுத்து பேசப்பட்டது. எனவே அந்த வழக்கை மேற்கோள் காட்டி பெயில் வாங்கி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்த பின்னர் தான் நரேஷ் இந்தியா திரும்பினார்.
இதற்கிடையில், குடும்ப வன்முறை வழக்கு போட்டதில், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் கணவனின் வீட்டில் மனைவிக்கும் உரிமை இருக்கிறது என்று இவள் உத்தரவு வாங்கிவிட்டாள். எனவே நேராக மாமியார் வீட்டிற்கு சென்று முதலில் ஒரு அறையை தனக்கென்று பூட்டி எடுத்து கொண்டவள் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை மொத்தமும் ஆக்கிரமித்து வயதான மாமனார், மாமியாரை திண்ணை வெளியே உட்காரவைத்து விட்டாள். வீட்டையும் பூட்டி விட்டு சென்று விட இவர்கள் உள்ளே செல்லவும் முடியாமல் வெளியே இருந்தனர். வீட்டு பத்திரம் கேட்டபோது கூட உள்ளே பீரோவில் இருந்ததால் அவர்களால் உள்ளே சென்று எடுக்க முடியவில்லை. எனவே பத்திர அலுவலகம் சென்று பத்திர எண்ணையும், வருடத்தையும் சொல்லி காப்பி டாக்குமென்ட் வாங்கி வந்து பார்த்தால் அது அந்த பெற்றோர் பேரில் வீடு இருந்தது.
இதை வைத்து நாங்கள் வழக்கு போட்டோம். 65 வயதில் இருக்கும் இதயம் மற்றும் டயபெட்டிக் நோயாளிகளை உள்ளே பாத்ரூம் கூட செல்ல வழி இல்லாமல், வெளியே உட்கார வைத்துவிட்டாள் என்று கோர்ட்டில் எடுத்து பேசினோம். மாஜிஸ்ட்ரேட் பரிவினால் அந்த பெண்ணை பெற்றோர் வீட்டில் பங்கெடுக்க கூடாது என்றும் மனைவிக்கு கணவனின் வீட்டின் மீது தான் உரிமை இருக்கிறது என்றும் வேண்டுமெனில் கணவனிடம் வாடகை கேட்டு தனியாக இருக்கலாம் என்று உத்தரவிட்டார். அதன்படியே வாடகை வீடு வைக்கபட்டது. மேலும் தனக்கு சம்பள பணம் எல்லாம் கணவனிடம் கொடுத்து இழந்துவிட்டதால் மொத்தமாக சேர்த்து பத்து லட்சம் கேட்டாள். எஃப்ஐஆர் வழக்கை ரத்து செய்ய கோரி மனு போட்டிருந்தோம். எனவே கேட்ட பத்து லட்சம் பணத்தை பெற்று கொண்டு மனுவை ரத்து செய்து கொள்ளலாம் என்றும் மனம் ஒப்பி விவாகரத்து பெற்றுக்கொள்கிறோம் என்று சுமூகமாக கடைசியில் அவள் ஒத்து கொள்ளவே விவாகரத்து வழங்கப்பட்டது.