Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; குக்கிராமத்தில் இருந்து திருடப்படும் கோடிகள் - பகுதி 10

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Digital Cheating part 10

 

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சில மாதங்களிலேயே 2500 பேரிடம், ‘கார்டு மேலே இருக்கற நம்பரை சொல்லு’ எனப் பேசி 8 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். இதனால் மக்களிடம் காவல்துறை மீது அதிருப்தி உருவானது. இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் துணை ஆணையர் ஸ்வாதி பங்காலியா தலைமையிலான டீம் களமிறக்கப்பட்டது. ஏடிஎம் கார்டு மோசடியை டெக்னிக்கல் டீம்மோடு சேர்ந்து ஆய்வு செய்யத் துவங்கினர். கால்ஸ் வந்த எண் யாருடையது எனத் தேடிய போது, அந்த நம்பர் டெல்லியைச் சேர்ந்த ஒருவரின் முகவரியில் இருந்தது. அவரின் வீட்டுக் கதவைத் தட்டியபோது, அதிலிருந்த புகைப்படத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவரின் பெயரில் யாரோ சிம் கார்டு வாங்கியிருப்பது தெரிந்தது. 

 

யார் அவர் என்கிற கேள்வி எழுந்தது?

மீண்டும் அந்த நம்பரில் இருந்து ஏதாவது கால்ஸ் போகிறதா என்றால் இல்லை. மோசடிகள் நடந்து முடிந்தபின் அந்த எண் பயன்பாட்டிலேயே இல்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபருக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என ஆய்வு செய்தனர். மின்னஞ்சல் அனுப்பிய கம்ப்யூட்டரின் ஐ.பி அட்ரஸ்ஸை கண்டறிந்தபோது அது ஜார்க்கண்ட் மாநிலத்தை சுட்டிக் காட்டியது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் தொழிலதிபருக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என சர்ச் செய்தபோது அது ஒரு ஐபி அட்ரஸ்ஸை தந்தது. அங்கு பயன்படுத்தப்படும் இண்டர்நெட் எந்த கம்பெனியுடையது எனக் கண்டறிந்து அவர்களிடம் குறிப்பிட்ட ஐ.பி அட்ரஸ்க்கு வழங்கப்பட்ட கனெக்‌ஷன் எண்ணைக் கண்டறிந்து கனெக்‌ஷன் வாங்கியவரின் அட்ரஸ் பார்த்தால் அதுவும் போலி முகவரியாக இருந்தது. அது ஒயர்லெஸ் டிவைஸ் என்பதால் எங்கும் கொண்டு போய் லேப்டாப், டெஸ்க்டாப்பில் இணைத்து நெட் கனெக்‌ஷன் தரலாம். அந்த டிவைஸ் ஒரு வாரம் டெல்லி மற்றொரு வாரம் மும்பை மற்றொரு வாரம் காசி மற்றொரு வாரம் வாரணாசி மற்றொரு மாதம் கொல்கத்தா என இடம் மாறிக்கொண்டே இருந்தது.

 

டெல்லி மாநகர காவல்துறை தங்களிடம் வந்த சைபர் க்ரைம் வழக்குகளை ஆராய்ந்தபோது அதிலும் சிம் கார்டு வாங்க தந்திருந்த முகவரி ஃபேக். பணம் எந்த அக்கவுண்ட்டில் இருந்து எந்த அக்கவுண்ட்டுக்கு போனது என ஆராயத் தொடங்கினர். அந்த அக்கவுண்ட் முகவரியை தேடிய போது அந்த அக்கவுண்ட்டும் போலி அடையாள அட்டை தந்து உருவாக்கியிருந்தார்கள். சில அக்கவுண்ட்கள் மட்டும் ஒரிஜினல் அடையாள அட்டையை தந்து தொடங்கியிருந்தார்கள். ரயில்வே நிலையத்துக்கு எதிரே செல்போன் ரிப்பேர் கடை வைத்திருந்தவர்களை தூக்கியது காவல்துறை.

 

கொல்கத்தாவை சேர்ந்த தில்குஷ் குமார், பிபுல் குமார் வங்கி கணக்குக்கு பணம் வந்திருந்ததை அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் உறுதி செய்திருந்தது. அவர்களிடம் விசாரித்த போது, இங்க ரயில்வேல பொருள் விற்கறவங்க இரண்டு பேர் எங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இல்லை. எங்க சொந்தக்காரங்க ஊர்லயிருந்து பணம் போடறாங்க, அதை எடுத்து தரணும்னு கேட்டாங்க. எங்களுக்கு கமிஷனா வர்ற பணத்தில் 40 சதவீதம் எடுத்துக்க சொன்னாங்க. நாங்களும் பணம் வந்ததும் எங்க கமிஷன் எடுத்துக்கிட்டு மீதிய தந்துடுவோம். இப்படி வாரத்தில் 10 முறை பணம் வரும். எங்களுக்கு கமிஷன் வந்ததால் நாங்க எதப் பத்தியும் கேட்டுக்கல என்றுள்ளார்கள்.

 

அவர்கள் யார்?

தெரியாது, இங்கதான் ஏதாவது பொருள் வித்துக்கிட்டு இருப்பாங்க. பணம் வந்ததும் நேர்ல வந்து வாங்கிக்குவாங்க என்றார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சிறப்பு போலீஸ் படை பேருந்து நிலையம், ரயில் நிலையம் என வட்டமடிக்கத் துவங்கியது. இரவு 11 மணியளவில் கொல்கத்தா பேருந்து நிலையத்தில் படுத்திருந்த 47 வயதான பிரதீப் பௌரி, 23 வயதான மிலன் டான்னை அலேக்காக தூக்கிக்கொண்டு வந்தனர். நாங்க ஜார்க்கண்ட், கூலி வேலை செய்யறதுக்காக கொல்கத்தா வந்திருக்கோம் என்றார்கள். அவர்கள் இருவரும் நடுநிலைப் பள்ளியைக் கூட தாண்டாதவர்கள். அவர்களின் பேச்சைக் கேட்ட சக போலீஸ் அதிகாரிகள், அப்பாவியாக இருக்கிறார்கள் இவர்கள் எப்படி ஏமாற்றியிருப்பார்கள், கோபத்தில் உள்ள மக்களை சமாதானப்படுத்த  அப்பாவிகளை கைது செய்து கொண்டு வந்து அடித்து டார்ச்சர் செய்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல என டீமில் இருந்த சில போலீசாரே சக போலீசாரிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் கூரியர் சேவை நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பெரியவரின் வங்கி கணக்கில் இருந்து ஸ்கிரின் ஷேரிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்திருந்தனர். பணம் சென்ற வங்கி கணக்கின் முகவரியை வங்கியில் இருந்து வாங்கினர் சைபர் க்ரைம் போலீஸார். 5 கணக்குகளுக்கு பணம் மாறியிருந்தது. அதில் ஒரு கணக்கு ஜார்க்கண்ட் என முகவரி சொன்னது. அதில் இரண்டு கணக்கு மட்டும் டெல்லி முகவரியை சொன்னது. அவர்களை தூக்கி வந்து விசாரித்தது. மேற்கு வங்கத்தை போலவே பணம் சென்ற கணக்குகள் புரோக்கர்களுடையது. மோசடி செய்த ஆட்கள் வேறு. புரோக்கர்கள் வழியாகவே அவர்களை மோசடியாளர்களை வர வைக்க முடிவு செய்தனர். பணம் வந்து வாங்கிச் செல்ல அழைப்பு விடுக்கப்பட்டது. 30 வயதான அசாரூதீன் வந்தார். அவனை 10 போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, யாருடா நீங்க எனக் கேட்க, ஜார்க்கண்ட்ல இருந்து பொழைக்க வந்திருக்கோம் என்றார்கள். அவன் சொன்ன தகவல்களை வைத்து 32 வயதான முர்ஷத் அன்சாரி, 22 வயதான அஸ்பக் அன்சாரி, 25 வயதான அஸ்கர் அன்சாரி என நான்கு பேரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

 

தமிழ்நாட்டில் ஆன்லைன் மோசடியால் ஏமாந்தவர்கள் தந்த புகார்களில் தங்களுக்கு கால்ஸ் வந்த செல்போன் எண்களை போலீஸார் செக் செய்தபோது, அது பயன்பாட்டில் இல்லை. இதனால் அந்த சிம் நம்பர் எந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டது என ஆராய்ந்தனர். ஐ.எம்.இ.ஐ நம்பர் கண்டறிந்து பார்த்தபோது பலப் பல சிம் கார்டுகள் ஒரே மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர். டவர் லொக்கேஷன் பார்த்தபோது அனைத்து கால்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரண்டு டவர் லொக்கேஷன்களை மட்டும் காட்டியது.

 

டெல்லியில் செக்யூரிட்டி அலுவலகத்தின் நடப்பு கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் வேறு கணக்குக்கு மாற்றியிருந்தனர் டிஜிட்டல் கொள்ளையர்கள். 12 லட்ச ரூபாய் பாஸ்கர் மண்டல் என்பவனின் வங்கி கணக்குக்கும் 4.6 லட்சம் அவ்ஜித்கிரி என்பவரின் வங்கி கணக்குக்கும் மாற்றப்பட்டிருந்தது. அந்த வங்கி கணக்கின் முகவரியை வாங்கிப் பார்த்தபோது இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைs சேர்ந்தவர்கள் என்றது.

 

இந்த மாநிலங்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில காவல்துறையின் சைபர் க்ரைமும் ஜார்க்கண்ட், ஜார்க்கண்ட் என அலறத் துவங்கின. தங்கள் மாநிலத்தில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் உங்கள் மாநிலத்தில் தான் உள்ளார்கள் என ஜார்க்கண்ட் மாநில காவல்துறைக்கு ஆதாரங்களோடு அறிக்கைகளை அனுப்பியது. கடந்த 12 ஆண்டுகளாக அறிக்கையாக அனுப்பிக்கொண்டு இருக்கின்றன.

 

தெலுங்கானா மாநில காவல்துறை தலைவர் அனுராக் சர்மா தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். ஏடிஎம் கார்டு நம்பர் கேட்டு ஃபோன் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை எச்சரித்தார். கடந்த 3-4 ஆண்டுகளில் நாடு முழுவதிலுமிருந்து போலீசார் ஜம்தாராவுக்குச் சென்றுள்ளோம்" என்கிறார் ஆந்திரா காவல்துறை அதிகாரி மனோஜ் சிங் ஐ.பி.எஸ்., இந்தியாவின் ஃபிஷ்சிங் மாநிலம் என்றால் அது ஜார்க்கண்ட் மாநிலம் தான். அந்த மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்தியாவின் ஃபிஷ்சிங் தலைநகரம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். நீ சொன்னால் நம்பமாட்டோம் என்பவர்களா. இவர் சொல்வதை கேளுங்கள்.

 

1982 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜிவ் சௌபா, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒன்றிய அரசின் உள்துறையில் பணியாற்றுகிறார். டெல்லியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசும்போது, நாட்டில் நடக்கும் 50 சதவீத சைபர் க்ரைம் குற்றங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்தே நடக்கின்றன. அதுவும் கிராமத்தில் இருந்து எனச் சொன்னபோது அங்கிருந்த அதிகாரிகள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.


கிராமமா? கிராமங்களா? 


வேட்டை தொடரும்…

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; தமிழகத்தை முந்தும் வடமாநிலத்தவர்கள்.. பகுதி – 9