Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #08

Published on 06/05/2022 | Edited on 07/05/2022

 

iraval edhiri part 8

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

கமிஷனரின் முன்வந்து இருவரும் சல்யூட் வைத்தார்கள். சிறுவனைப் பார்வையில் இருந்து விலக்காமல்,“யார் இது மாறன்.....?” என்றார் கமிஷனர்.

“ஸார் நம்ம எஸ்.ஐ வேந்தன் அவரோட அண்ணன் மகன், பெயர் சிவா. இந்த கேஸில இவன்தான் நமக்கு உதவப்போறான், இவனுக்கு பிறந்ததில் இருந்தே கண் தெரியாது? பட் அதுதான் நமக்கு இப்போ உதவப்போகுது.”

“வாட் இஸ் யுவர் தியரி... எனக்குப் புரியலை மாறன்.”

“ஸார் இறந்து போன சிறுவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட நகங்களில் இருந்த புள்ளிகளின் வடிவமைப்பு பிரெய்லிங்கிற கண் பார்வையற்றவர்கள் வாசிக்கப் பயன்படுத்தும் முறை. இதற்கு தனிப் பள்ளிகள் கூட இருக்கு. டாக்டர் எடுத்துட்டு வந்த போட்டோக்களைப் பார்க்கும் போது எனக்கு அப்படியொரு கோணம் இருக்குன்னு தோணுச்சி, இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் சிவாவுக்காக வேந்தன் அந்த பிரெய்லி புத்தகத்தை வாங்கினார். அதை வைச்சித்தான் கெஸ் பண்ணேன்.”

 

கமிஷனர் நம்ப இயலாத பார்வையைப் பார்த்தார். “சரி மாறன் அப்போ இதிலே மாஸ்டர்ஸ் இருப்பாங்கள்லே அவங்கள கூட்டிட்டு வந்திருக்கலாமே. இப்போ இந்த சின்னபையனை வைச்சு நேரம் வீணாகுமே?”

“கூப்பிடலாம் ஆனா விஷயம் வெளியே லீக்காகும். ஏற்கனவே பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்துட்டு இருக்கிற பெத்தவங்க உயிரோட இருக்கும்போது இந்த மாதிரி ஒரு கொடூரத்தை அனுபவிச்சிருக்காங்கன்னு தெரிந்தா கஷ்டம், அதைவிடவும் மீடியாக்கள் இன்னமும் ஊதி பெரிசாக்கிவிடுவாங்க ஒரு டிவி சேனல் இல்லாம இப்போ இந்த நியூஸ்தான் கவர் ஸ்டோரி. கற்பனை தறிகெட்டு ஓடுற இந்த நேரத்தில் விஷயம் வெளியே போக வேண்டான்னுதான் இந்த முடிவு. சிவா குட்பாய் நல்ல ஷார்ப். அவனால் முடியும். எனக்கு ஒருமணிநேரம் தாருங்கள் ஸார் அதற்குள் நான்....?!”

“அவ்வளவு நேரம் கூட வேஸ்ட் அங்கிள். நான் சொல்றா மாதிரி செய்தால் பதினைந்து நிமிஷம் போதும்.” என்ற சிவாவை வியப்பாய் பார்த்ததர்கள் அனைவரும்

“இப்போ பிரெய்லி லட்டர்ஸ் எதில் இருக்கு?”

“போட்டோவா இருக்கு அதை உனக்கு ஒரு நோட்பேட் அல்லது பேப்பரில் எழுதித்தரச் சொல்றேன். நீ படிச்சிகாட்ட ஈஸியா இருக்குமே?”

“வேண்டாம் அங்கிள் இது எழுத்து கிடையாது. எழுதும்போது ஏதாவது ஒரு புள்ளி மாற்றியமைஞ்சிட்டாலும் அர்த்தம் மாறிப்போகும்.”

“ஆனா போட்டோவை வைச்சி உன்னாலே?”

“முடியும் அங்கிள் நான் சொல்ற ஐடியாவைப் பாலோ பண்ணுங்க உங்க ஸ்மார்ட் போனை எடுத்து அந்த புகைப்படங்களை எல்லாம் ஸ்கேனர் ஆப்சன் மூலமா மொபைல்ல ஏத்துங்க?! குரோமில் கூகுள் கீப்புன்னு சர்ச் பண்ணி உங்க மெயில் ஐடி போடுங்க நீங்க ஸ்கேன் பண்ண போட்டோஸை ஷிப்ட், ஆல்ட் எஸ்ன்னு மூணு கீயை ஒரே நேரத்தில் அழுத்துங்க அங்க ஒரு கிராப் லைன் வரும் வேணுங்கிற வரையில் கிராப் பண்ணி எடுத்துக்கிட்டு அதை கூகுள் கீப்லே உள்ள பாக்ஸில் பேஸ்ட் பண்ணுங்க இப்போ சில செகண்ட்ஸ் அப்பறம் ரைட் சைடில் ஒரு கிளவுட் மாறி சிம்பிள் இருக்கும் அங்கே போய் கிளிக் பண்ணி கன்வர்ஷன்னு கொடுத்தா விஷயம் வேர்ட் பைலா உங்களுக்கு கிடைக்கும் அதாவது இந்த பிராய்லி புள்ளிகள் உங்க வேடில் கிடைக்கும். வார்டில் இருந்து பிராய்லி கண்வெர்ட் பண்ண ஒரு ஆப்ஷன் இருக்கு. பிளேஸ்டோரிலேயே கிடைக்கும். அதையும் டவுன்லோட் பண்ணி கண்வெர்ட் பண்ணா நான் படிக்க ஏதுவாய் கையிலே கிடைச்சாச்சு.”

“கிரேட்” கமிஷனர் வாய்விட்டு சொன்னார். சிவா சொன்னதைப் போல உடனே வேலைகள் தொடங்கிட, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தின் முடிவில் சிவாவின் முகத்தில் முத்துமுத்தாய் வேர்வைத் துளிகள். அவன் வார்த்தைகளைச் சொல்ல எல்லாரும் அதிர்ந்தார்கள். மாறன் தனக்கு ஒரு வலிமையான எதிரி உருவாகியிருப்பதை உணர்ந்து கொண்டான்.

----------------------------------

நான்கு அடுக்குகளாக ஒரு லைனுக்கு பத்து தண்ணீர் பாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பாட்டிலும் மூன்று வண்ணங்களைக் கொண்ட பானங்களை தங்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அந்த அடுக்குகளின் நடுவில் ஒரு பாட்டிலில் மட்டும் பாதி நிரம்பிய திரவங்கள் சற்றைக்கெல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு திரவத்தை மற்ற பாட்டில்கள் நிரப்பின. ஒன்றையொன்று நிரப்ப சிலது காலியாகவும் சிலது அரைபாகமாகவும் தொடர்ந்து ஒரு இயல்பாக ஒடிக்கொண்டு இருந்தது. முப்பது செகண்ட்ஸை காலாவதியாக்கியப் பிறகு டவுன்லோட் கலர்ஸ் பில்லிங் கேம் என்று முகப்பில் வந்தது. நாட் இண்ட்ரஸ்ட்டட் என்ற பட்டனைத் தட்டிவிட்டு மீண்டும் ப்ளே ஸ்டோரில் வந்திருந்த புதிய வகை கேம்களை ஆராய்ந்தான் அவன். முதல் அத்தியாயத்தில் ஒரு கருப்பு நிற காரில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நைந்து போன பழையத் துணியைச் சுருட்டி வைத்ததைப் போல அச்சிறுவன் எப்போது விழித்தோம் எப்போது தூங்கினோம் என்று அவன் கண்கள் அறிந்தே பல நாட்கள் ஆகியிருந்தது.

 

இரண்டாமவன் உள்ளே நுழைந்தான். “என்ன ஐடியாதான் வைச்சிருக்கே ஸ்பைடர் நீ! நாம இந்த பசங்களை கடத்திவந்து ஒருவாரம் ஆகியிருக்கு. இரண்டு பேர் டோஸேஜ் தாங்காம இறந்து போயிட்டாங்க எஞ்சின ஒருத்தன் மருத்துவமனையிலே... அவனுக்கு நினைவு வந்திட்டா?”

“நினைவு வரும்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா?”

“வாய்ப்பு கம்மிதான் நம்ம சரக்கு அப்படி... கொண்டு வந்தவனுங்களுக்காக ஒரு திரேட்னிங் கால் கூட போடலை என்னடா லாபம் நமக்கு? கேஸ் சிபிஐக்கு போயிருக்கு?”

 

அவனை இடைவெட்டினான் ஸ்பைடர் என்ற அழைக்கப்பட்டவன். “வலை விரிச்சிருக்கேன் தானா வந்து சில புழுக்கள் விழுது! நாமா சிலதை தேடிப் பிடிக்கப்போறோம். அதான் செத்துப் போனவங்க இரண்டு பேரோட விரல் நகங்களில் தகவல் அனுப்பியிருக்கோமே போலீஸ் என்ன கிழிக்கறாங்கன்னு பார்ப்போம்.”

“தமிழ்நாடு போலீஸ் திறமையானவங்க ஸ்பைடர். நம்ம எதிராளியை குறைச்சலா எடை போட்டா நமக்குத்தான் நஷ்டம். அதனால...”

“அதனால அவன் காலில் போய் விழச்சொல்றியா? முடியாது என்னடா பெரிசா தப்பு பண்ணினேன் நான். சரியெது தப்பு எதுன்னு கூட கேட்காம பணத்தை வாங்கிகிட்டு என் காலை நடக்க முடியாம உடைச்சானே அவனும் நீ சொல்றா மாதிரி திறமையான போலீஸ்காரன்தான். காசுக்கு தன் சட்டையை அடமானம் வைச்சிட்டு காலை உடைச்சான். என் மூளைக்கு முன்னாடி அவனெல்லாம் எம்மாத்திரம். பார்த்திட்டே இரு இந்த கேஸூ நிறையபேரோட சட்டையைப் பிடிச்சி உலுக்கப்போகுது.”

“டேய்..... இப்படி கடத்தி வந்து கொன்னு போடறதைவிடவும் இந்த வயசுப் பசங்களுக்கு நல்ல மார்கெட் இருக்கு நம்ம சைடு புரோக்கர்ஸ் கிட்டே பேசி விக்கலாம். இல்லைன்னா அவங்க உறுப்புகளையாவது விலை பேசலாம் ஒண்ணுமேயில்லாம 10 மணிநேரம் கேம் விளையாட வைச்சு மத்த நேரங்களில் எல்லாம் பவுடர் கொடுத்து...வேஸ்ட்டா நீ... உனக்கு காசாக்கத் தெரியலை.”

“மைக் எனக்கு பணம் பிரதானம் இல்லை அப்படியிருந்தா நான் அதற்கு வேற வழியைத் தேர்ந்தெடுத்து இருப்பேன். மனத்திருப்திடா... உருவாகுற அத்தனை குற்றவாளிகளுக்கும் ஒரு பிண்ணனி இருக்கு. மரண அடி வாங்கிய பிறகுதான் அதை பிறருக்கு தரணுமின்னு எண்ணமே நம்மளை மாரி உள்ளவனுங்களுக்கு வருது. என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ அப்போவே உன் வழிதான் சரின்னு முடிவு பண்ணிட்டேன். 

 

பணத்தை ஈஸியா சம்பாரிச்சிடலாம்டா. என்னால என் நிம்மதியை இழக்க முடியாது. இது இந்த பிள்ளைகளின் கதறலும், எதுவுமே யோசிக்க முடியாம என்னை நிர்சலமான பார்க்கிற பார்வையும் எனக்கு எத்தனை சந்தோஷம் தருது தெரியுமா? பிள்ளையைப் பெத்துக்கறது, அதை வளர்க்கிறேன் பேர்வழின்னு நல்லதை சொல்லித்தராம எது தீமையோ அதையே கொடுக்கிறது, அதையே சொல்லிக் கொடுக்கிறது, நல்லதை அலட்சியப்படுத்தியதனால் உண்டாகும் பலன்களை அவங்க அனுபவிக்க வேண்டாமா?”

“சரி ஸ்பைடர் உன்னோட அடுத்த மூவ் என்ன?”

“மறுபடியும் கடத்தல்தான். வலை விரிக்கத்தான் எத்தனை பறவைகள் விழுதுன்னு நானும் பார்க்கிறேன். வண்டியை ரெடி பண்ணு. எனக்கு இராயப்பேட்டை வரைக்கும் போக வேண்டும்.” மைக் எதிர்கேள்வி கேட்டாமல் வெளியேறினான். அந்த வீட்டின் இருண்ட மற்றொரு அறையைத் திறந்து அந்த சிறுவனின் நடவடிக்கைகளைக் கவனித்து, பின்னால் ஷெட்டை நோக்கி நகர்ந்தான். தூசுபடிந்த கவரை அப்புறப்படுத்தியபின், கார் தன் உடலை மைக்கிற்குக் காட்டியது. இக்னிஷனில் சாவியைத் துளைத்து ஸ்டார்ட் செய்தான். இந்த காரின் வண்ணத்தை முழுவதுமாக அப்புறப்படுத்திட வேண்டும் என்று நினைத்து அதற்கு நேரமின்றி போனதற்காக சொற்பமாய் வருந்தினான். நினைவாக நம்பர் ப்ளேட்டை மட்டும் மாற்றிவிட்டு வீட்டின் முகப்பில் கொண்டு வந்து நிறுத்தி ஸ்பைடருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான். இந்த காத்திருப்பு அவன் வரையில் பதிமூன்று வருடங்களாகவே தொடர்கிறது.

 

அதேநேரம், டீம் மெம்பர்ஸ் அனைவரும் வந்துவிட்டார்கள். வரைபடம் அவர்களின் முன்பாக விவரிக்கப்பட்டது. “வெல்கம்” என்று ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டார்கள். மாலின் சுறுசுறுப்பிற்கு இரண்டாவது முதல் தளங்களில் தங்களை நுழைத்துக் கொண்ட மனிதர்களே சாட்சி. “நல்ல இடம்தான்” என்றார்கள். ஃபுட் கோர்ட்டில் ஆர்டர் செய்துவிட்டு சிக்கன் பர்கரும் பெப்ஸியுமாக உட்கார்ந்த போது மேகா பேச்சைத் துவங்கினாள். “கேசவ் நல்ல ஷாப்பிங் பாயிண்ட் நாளைக்கு வீக்எண்ட். கரோனா பரவல் எல்லாம் கொஞ்சம் கட்டுக்கோப்பா வந்திருக்கு இப்போ கூட்டமும் வரத்தும் அதிகரிக்க தொடங்கியிருக்கு. மெஷினரிஸ் வொர்க்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும் எனக்கு சில ஐடியாஸ் இருக்கு அதை குறித்துக் கொள்.” என்றதும், அவன் தன் வசம் உள்ள ஆப்பிள் லேப்பை எடுத்தான்.

 

மாலில் இவர்களின் தளத்திற்கான டெமோவை உயிர்ப்பித்தான். FUNCITY என்ற பெயர் பலகை நியான் விளக்குகளில் மிணுமிணுத்தது. அதன் வாசலுக்கு நேர் எதிரில் ப்ளோர் லிப்ட் இடது புறத்திலும் வலது புறத்திலும் ஏறவும் இறங்கவும் எஸ்கலேட்டர்கள். 1 முழு நிமிட நடையின் தூரத்தில், எஸ்கலேட்டர் வழியாக வரும் இடத்தில் 'வெல்கம் டூ ஃபன் சிட்டி' என்ற போர்ட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் மேகா, “மெயின் லிப்ட் ஏறி இடதுபுறத்தில் துவக்கத்தில் இருந்து நம் ஃபன்சிட்டி ஆரம்பிக்கிறது. ஜங்கில்வேர்ல்ட் 3டி எபெக்ட்டுடன் கூடிய சின்ன தியேட்டர் வால் முழுக்க வனப்பிரதேசம் போல அமைக்கவேண்டும். மரங்கள் செடிகள் கூடிய டார்க் பசுமை நிறம் அதில் சில விலங்குகள் பார்க்க சுவாரஸ்யமாய். இந்த ப்ளோருக்கு நுழையும் போதே முதல்ல 3டி லைட்ஸ் அரேன்ஞ் பண்ணுங்க, தாண்டும்போது சில மிருகங்களின் குரல், அப்பறம் பறவைகளின் சப்தம் பயமுறுத்துவதாக இருக்கக்கூடாது. நம்ம டார்கெட்ஸ் குழந்தைகள்; ஸோ க்யூட் ரோபோட்ஸ் அவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்பதைப் போல அமைக்கலாம்.

 

அடுத்தது ஸ்நோவேல்ர்ட். உள்ளே இருந்து வெளியே கூலிங் வழியாத அளவுக்கு அதே நேரம் உள்ளே அவர்கள் விளையாடுவது வெளியே தெரியணும். அந்த பனிப்பொழிவு வர்றவங்க கண்களுக்குப் படணும். அது ரொம்பவும் முக்கியம். சின்ன சின்ன வாகனங்கள் அமைப்பில் ஸ்கிரீன் மினி தியேட்டர்ஸ். அதில் ஹெட்போன் போட்டு சவுண்ட் எபெக்ட்ஸ் கூட டைமிங் செட் பண்ணி ஒரு நிமிஷ நேரம் பயணம். மூவிங் சேர்ஸ் அட்வென்ச்ஸர்ஸ் கிட்டத்தட்ட ரோலர் கோஸ்ட்டர் எபெக்ட் அதில பயணிக்கிறவங்களுக்கு வரணும். ஃபுட் கோர்ட் பக்கத்துலே இருக்கு அதில் ஐஸ்கீரிம்ஸ், பீட்சா, சிக்கன்னு குழந்தைகள் விரும்பி சாப்பிட்ற ஐட்டமா அமைந்தது நம்ம பலம். நம்மோட மெயின் ஃபன் சிட்டி உள்ளே நுழையும் போது பிரமிப்பு அதிகரிக்கணும். அதுக்கு சில ஐடியாஸ் எல்லாம் இருக்கு. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா விவாதிக்கலாம். இப்போ நான் சொன்ன சின்ன சின்ன கரெக்ஷன்ஸ் முடிங்க.

 

ஒரு பெரிய மல்ட்டிபிள் பிளக்ஸ் வைக்க மால் நிறுவனத்திடம் பர்மிஷன் கேட்டு இருக்கேன். கேசவ், நீ அப்புறம் உன்னோட இரண்டு பேரைக் கூட்டிட்டுப் போ; மொத்தம் 7 கேட்ஸ் இந்த மால்ல இருக்கு; கிட்டத்தட்ட எல்லாமே கவர் ஆகணும். நாளைக்கு வீக்எண்ட்; கீழே கிரவுண்ட் ப்ளோர் செண்டர் பிளேஸ் கேளு; நாளைக்கு மார்னிங்குள்ளே எனக்கு கலர்ஃபுல்லா சர்ச்ப்ளே டிவைடர்ஸ் வேணும். க்ரீன், பிளாக், பிங்க்ன்னு மூணு கலர்ல எண்ட்ரன்ஸ் பிக்....புல்வெளிமாதிரி சுவரை கொண்டு வாங்க. அதன் அகலம் நீளம் எல்லாம் பத்து வயசுக் குழந்தைகள் அளவுக்கு இருக்கணும்.

 

மேற்புரம் ஃபுல்லா ஓப்பன்ல இருக்கட்டும். அப்பத்தான் தன்னோட பிள்ளைகள் விளையாடும் போது ஃபர்ஸ்ட் ப்ளோரில் இருந்த பேரண்ட்ஸ் என்கரேஜ் செய்யறதுக்கு வசதியா இருக்கும். சென்டர்ல கீரின் கலர் கொஞ்சம் குழப்புற எடத்திலே பிளாக் கலர், ஸ்டேஜ் அவுட் ஒயிட். இந்த ஐடிங் வே டிவைடர்ஸ் கடக்கிறதுக்கு சில நிமிடங்களை கணக்கில் வைங்க எந்த குழந்தை நாம குறிப்பிட்ட நேரத்திலே வெளியே வர்றாங்களோ அவங்களுக்கு சின்ன டாய்ஸ் கொடுக்கலாம் ஆல்ரெடி ஒரு பேம்ப்லெட் ரெடி பண்ணோம் இல்லையா அதை கலர்புல்லா பிரிண்ட் எடுங்க. அதோட ஒரு எண்ட்ரி டிக்கெட் அதில் பெய்ட் கேம்ஸ் சில ஃப்ரீயா கொடுக்கலாம்.”

 

மேகா பேசி முடிக்கும் வரையில் அனைவரும் ஆர்வமாக கேட்டார்கள். “ஏதாவது கரெக்ஷன்ஸ் இருந்தாலும் சொல்லலாம்.”

“பர்ஃபெக்டா இருக்கு எந்த மாற்றமும் வேண்டாம்,” செல்ப் சர்வீஸில் சாப்பிட்ட எச்சங்களை USE ME ல் சேர்த்துவிட்டு லிப்டின் அருகில் வந்தார்கள். நான்சி எப்போ வர்றா?

 

மார்னிங் பிளைட் கேசவன் கிளம்ப எத்தனிக்க,“கேசவ் இது குழந்தைகளுக்கான தளம் அதை மனசில வைச்சு ப்ரோமோஸ் பயன்படுத்துங்க. சரியா உங்க புல் போக்கஸ் டார்கெட் எல்லாம் குழந்தைகளைத்தான் குறிவைக்கணும்.” என்று மேகா சொல்ல, பின்பக்கம் லிப்ட் திறந்தது. கேசவ் அதில் தன்னை நுழைத்துக் கொண்டான். மேகாவின் முதுகுப் பக்கம் கருப்பு நிற சூட்டில் வெளிவந்தவன் தன் முகத்தை மாஸ்க்கினால் மறைத்து வைத்திருந்தான். அந்த மாஸ்க்கில் குழந்தைகளின் கார்ட்டூன் பாத்திரமான சின்சானின் உருவம் இருக்க, “எக்ஸ்யூஸ்மி” என்ற குரல் கேட்டு திரும்பிய மேகாவின் கண்களில் அந்த மாஸ்க்.

 

அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கி தனக்கு முன்னால் நின்ற இன்னொரு டீம் அசிஸ்டெண்ட்டை அழைத்தார். அந்தக் கருப்புச்சட்டை ஆசாமி போட்டு இருக்கிறா மாதிரி கார்ட்டூன் கேரக்டர்ஸ் வைச்ச மாஸ்க் கொஞ்சம் தயார் பண்ணு, தேவைப்படும் என்று கட்டளையிட்டாள். செல்பி எடுப்பதைப் போன்று சற்றே எட்டத்தில் நின்ற அவனின் காதில் அது விழ, எனக்கும் குழந்தைகள் தான் டார்கெட் என்று மாஸ்கினுள் சொல்லிக் கொண்டான் சற்று நேரத்திற்கு முன்னால் ஸ்பைடர் என்று அழைக்கப்பட்ட அவன்.

 

தொடரும்...

 

-லதா சரவணன்.