இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விராட், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் போன்றோர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த தொடர்களில் தொடர்ந்து அதிரடி காட்டிய சுப்மன்கில், இஷான் கிஷன் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். சூர்யகுமார் யாதவ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிரடி காட்டி அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாய் இருக்கும் சூர்யகுமார் இத்தொடரிலும் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.
சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இத்தொடரில் இடம் பிடித்துள்ளார். பந்து வீச்சைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஹர்சல் படேல் போன்றோர் பலம் சேர்க்கின்றனர்.
மறுபுறம் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் ராஜபக்ஷே, தனஞ்செயா, குசால்மெண்டீஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் திறன் கொண்ட அணியாகவே இலங்கை காணப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17ல் இந்தியாவும் 8ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதல் போட்டியை இரு அணிகளும் வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் களம் காணும் என்பதில் சந்தேகம் இல்லை.