கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடந்துவந்த ஐ.பி.எல். சீசன் 11 இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இறுதிப்போட்டியில் மோத இருக்கும் இரண்டு வலுவான அணிகள், இந்த சீசனில் ஆடிய ஆட்டங்களின் மூலம் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கின்றன.
ஒருபக்கம் எவ்வளவு ரன்களை இலக்காக வைத்தாலும் அசாதரணமாக சேஷிங் செய்யும் சென்னை அணியும், மறுபக்கம் வெறும் 120 ரன்களே எங்களுக்கு டிஃபெண்ட் செய்ய போதும் என அசால்ட் காட்டும் ஐதராபாத் அணியும் மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அடிப்படையில் வயதில் மூத்த வீரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சென்னை அணியை ‘அப்பாக்கள் ஆர்மி’ என செல்லமாக அழைக்கின்றனர். அனுபவம் மிக்க இந்த அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும், மேட்ச் வின்னர்களாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஓரளவுக்கு மேல் இந்த அனுபவம் மிஞ்சினால் அதுவும் பிரச்சனைதான் என அந்த அணியின் கேப்டன் தோனி பேசியிருக்கிறார்.
‘அனுபவம் முக்கியமானதுதான். ஆனால், அது எல்லா நேரமும் கைகொடுக்காது. ஒரு ஒருபோதும் மற்றவொன்றால் மாற்றியமைக்க முடியாது. அளவுக்கு அதிகமாகும் போது எல்லாமே பிரச்சனைதான். ஆனால், அதை ஒழுங்காக பயன்படுத்திக் கொண்டது மட்டுமே சி.எஸ்.கே.வின் பலம். அணிக்கு நல்ல ஃபீல்டர்கள் கிடைத்துள்ளனர். இதுவரை எல்லாமே சிறப்பாக இருந்துள்ளது. ஆனால், அதுவே எப்போது வேண்டுமானாலும் எங்கள் காலை வாரலாம்’ என அனுபவமிக்க சென்னை அணி குறித்து தோனி பேசியுள்ளார்.