21வது பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் கால்பந்தை பற்றி தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் சரிக்கு சமமாக உள்ளனர். ஆதலால், தெரியாதவர்கள் இதில் சொல்லப்படும் சுவாரஷ்ய விஷயங்களை வைத்து உலகக்கோப்பை கால்பந்து பற்றி தெரிந்துகொள்ள ஆரமபமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரஷ்யாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை, 21 வது பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியாகும். கிரிக்கெட்டை போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த உலகக்கோப்பை கத்தார் நாட்டில் 2022 ஆம் ஆண்டு நடக்க இருக்கிறது. இதையடுத்த உலகக்கோப்பை எங்கு நடக்க போகிறது என்ற வாக்கெடுப்பு நேற்று நடைப்பெற்றது. மொராக்கோ விருப்பம் தெரிவித்தது. இருந்தபோதிலும் 63 வாக்குகளே பெற்றது. வட அமெரிக்காவிலுள்ள மூன்று நாடுகளான மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா சேர்ந்து முதல் முறையாக 2026 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை நடத்த இருக்கிறது.
உலகக்கோப்பையில் மொத்தம் 32 அணிகள் விளையாடுகின்றன. இந்த 32 அணிகளில் போட்டியை நடத்தும் அணி மட்டும் முன்னரே தகுதியாகிவிடுகிறது. மற்ற 31 அணிகளும் தகுதிச்சுற்றில் விளையாடி தேர்வாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பின்னர் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவுக்கு நான்கு அணிகள் என்று இருக்கும். பிரிவுகளில் உள்ள அணி ஒவ்வொன்றும் அவர்களுக்குள் தலா ஒரு ஆட்டத்தை விளையாடி பட்டியலில் இருக்கும் முதல் இரண்டு அணிகளே நாக் அவுட் சுற்றுக்கு விளையாட வருவார்கள். ரவுண்ட் ஆப் 16 என்று இந்த நாக் அவுட் சுற்றை அழைப்பார்கள். இதில் வெற்றிகண்டவர்கள் காலிறுதி ஆட்டத்தையும், காலிறுதியில் வெற்றிகண்டவர்கள் அரையிறுதியிலும், அரையிறுதியில் வெற்றிகண்டவர்கள் இறுதி ஆட்டத்திலும் விளையாடுவார்கள்.
பிபாவின் டாப் 5 அணிகள், அதாவது கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணிகளாக ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணிகள் இடம்பெறுள்ளன. இது அல்லாமல் உலகில் சிறந்த வீரர்களாக இருக்கும் லயோனல் மெஸ்ஸி( அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ( போர்ச்சுகல்), முகமது சாலா( எகிப்து), நெய்மார்(பிரேசில்) மற்றும் லூயிஸ் சுவாரஸ்(உருகுவே) ஆகிய வீரர்களும் தங்களின் விளையாட்டின் மூலம் கவனத்தையும், தங்கள் அணிகளையும் இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்ல காத்திருக்கின்றனர்.
கடந்த உலகக்கோப்பை பிரேசிலில் நடைபெற்றது, இதில் ஜெர்மனி அணி இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்த வருடம் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஜெர்மனி வெற்றிபெற்று பிரேசில் அணி வைத்திருக்கும் இரு சாதனைகளை முறியடிக்குமா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். முதல் சாதனை தொடர்ந்து இருமுறையும் உலகக்கோப்பையை பிரேசில் மட்டுமே1950 ஆண்டுக்கு பிறகு வெற்றிபெறுள்ளது. அதேபோல இரண்டாவது சாதனை ஐந்து முறை உலகக்கோப்பை வென்றுள்ள பிரேசிலின் சாதனையும் ஜெர்மனி அணியால் முறியடிக்க முடியும். 2010 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஸ்பெயின் அணி வெற்றிப்பெற்றது.
இந்த உலகக்கோப்பைக்காக ரஷ்யா 80,000 கோடி செலவு செய்துள்ளது. அதேபோல வெற்றிபெரிசு என்பது கால்பந்தாட்டத்தில் அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருவது வழக்கம், இந்த முறை மேலும் 12% அதிகமாக கொடுக்கப்படுகிறதாம். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை 2700 கோடி. இறுதி போட்டியின் வெற்றியாளருக்கு ரூ 257 கோடி, இரண்டாவது இடத்திற்கு ரூ 186 கோடி, மூன்றாவது ரூ 162 கோடி, நான்காவது ரூ 148 கோடி, காலிறுதியில் தோல்வியடைந்தவர்களுக்கு ரூ 108 கோடி கிடைக்கும். ரவுண்ட் 16 சுற்றில் வெளியேறியவர்களுக்கு ரூ 81 கோடி மற்றும் லீக் சுற்றுடன் வெளியேறியவர்களுக்கு ரூ 54 கோடி கொடுக்கப்பட உள்ளது. ஜூலை 15 ஆம் தேதி இரவு வரை காத்திருங்கள் இந்த பணமெல்லாம் எந்த அணிக்கு போய் சேருகிறது என்பதை பார்ப்போம்.