கிரிக்கெட் இந்தியாவின் மதம் என்று பெருமையாக சொல்லிக்கொள்பவர்கள் கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கண்டுகொள்ள மாட்டார்கள். கிரிக்கெட் வணிகமயம், சூதாட்டம் எல்லாவற்றையும் தாண்டி, பொழுதுபோக்கான இந்த விளையாட்டை நேசித்து விளையாடும் வீராங்கனைகள் இன்னமும் புறக்கணிக்கப்பட்டு வருவதே நிதர்சனம்.
இந்நிலையில், மலேசியாவில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுக்காக கொடுக்கப்படும் தொகை, அதை உண்மையாக்குகிறது. மலேசியாவுடன் இந்திய அணி மோதிய முதல் போட்டியில், கேப்டன் மிதாலி ராஜ் 97 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற, மித்தாலி ராஜ் பிளேயர் ஆஃப் தி மேட்சாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், தாய்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோதிய போட்டியில், ஹர்மான்பிரீத் கவுர் பிளேயர் ஆஃப் தி மேட்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இருவருக்குமே பரிசுத்தொகையாக வெறும் 250 அமெரிக்க டாலர்களே வழங்கப்பட்டன. அது இந்திய மதிப்பில் ரூ.16 ஆயிரத்து 778 மட்டுமே இருக்கும் என்பதால், பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
இருபாலருக்குமான இந்த விளையாட்டில், ஆண்களுக்கு கொடுப்பதில் பாதியளவு கூட பரிசுத்தொகை மகளிருக்கு கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கு இரண்டு அணிகளுக்குமே ஸ்பான்சர் ஒருவர்தான் என்பதால் இதை சர்ச்சையாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. ராஞ்சி போட்டிகளில் கூட இதைவிட அதிகம் போட்டிப்பரிசு கொடுக்கப்படும் என்பதால், சர்ச்சை நேரடியாக ஐ.சி.சி. நோக்கியே கிளம்பியிருக்கிறது.