ஒரே நாளில் இருவேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கோலி பெயர் இடம்பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக அஜிங்யா ரகானே கேப்டனாக இருப்பார் எனவும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள, விராட் கோலி சர்ரே அணியில் விளையாட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். அந்த அணி நிர்வாகம் ஜூன் மாதம் முழுவதும் சர்ரே அணிக்காக விராட் கோலி விளையாடுவார் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், யார்க் ஷயர் அணியுடன் வருகிற ஜூன் 25 முதல் 28 வரை விராட் கோலி சர்ரே அணியில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், ஜூன் 27, 29 தேதிகளில் அயர்லாந்து அணியுடனான டி20 போட்டிகளில், இந்திய அணி தேர்வுக்குழு அறிவிப்பின்படி விராட் கோலி களமிறங்கவேண்டும். எனவே, இந்த குறிப்பிட்ட ஜூன் 27ஆம் தேதி நடக்கவுள்ள இரண்டு போட்டிகளில் எதில் விராட் கோலி களமிறங்குவார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.