பெண்களுக்கான ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் இன்று பிற்பகல் மோத உள்ளன.
மகளிர் ஆசியக் கோப்பையின் எட்டாவது தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு லீக் ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
ஏழு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியாவும் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசியக்கோப்பை வரலாற்றில் இந்தியா தொடர்ந்து எட்டாவது முறையாகவும் இலங்கை ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 7 முறை நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி வென்றுள்ளது.
இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக்கோப்பை போட்டியில் பந்துவீச்சில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 13 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 215 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிக வெற்றிகளைப் பெற்றதிலும் இந்திய அணியே முதலிடத்திலுள்ளது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.