நிதிஹாஸ் டி20 கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை இந்திய அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இலங்கை - இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் நிதிஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.
கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிகர் தவான் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வலுவான ரன்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தாலும், அன்றைய போட்டியில் இந்திய அணியின் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக டி20 போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் பெறும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.