ஒரு பந்துவீச்சாளரே பஞ்சாப் அணியின் கேப்டனாக வேண்டும் என நினைத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகருமான விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முகநூல் பக்கத்தின் வாயிலாக அந்த அணியின் கேப்டன் யார் என்ற அறிவிப்பை விரேந்தர் சேவாக் வெளியிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் வாசிம் அக்ரம், வாக்வார் யூனஸ் மற்றும் கபில் தேவ் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகன் என்பதால், ஒரு பவுலர் அணியின் கேப்டனாக இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பவுலர்தான் அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியான நபர். யுவ்ராஜ் சிங் பெயரும் கேப்டன் தேர்வுக்கான பட்டியலில் இடம்பெற்றது. ஆனால், அணி நிர்வாகம் மற்றும் குழுவினர் அனைவரும் அஸ்வினுக்கே வாக்களித்தனர்’ என பேசிமுடித்தார்.
வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலத்தில், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.7.6 கோடி கொடுத்து வாங்கியது பஞ்சாப் அணி. யுவ்ராஜ், மேக்ஸ்வெல், மில்லட், ஜியார்ஜ் பெய்லி என பலரும் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் அணியின் பத்தாவது கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.