Skip to main content

தோனி இல்லாத கிரிக்கெட் மேட்சா? - சிலாகிக்கும் விராட் கோலி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் தோனியை நிரப்ப யாராலும் முடியாது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

Virat

 

உச்சநீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய், இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவு குறித்து பேசுகையில், ‘தோனி மற்றும் விராட் கோலி இடையே இருக்கும் தோழமையுணர்ச்சி மிக நுட்பமானது. தோனியின் கிரிக்கெட் சமயோஜிதத் தன்மையை விராட் கோலி பெரிதும் மதிக்கிறார். மேலும், ஒரு வீரராக விராட் கோலி சாதித்துக் கொண்டிருப்பதை தோனியும் மதிக்கிறார். ஐ.சி.சி. வழங்கும் கோப்பைகள் அனைத்தையும் வென்றுகொடுத்த தோனியை வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் நிரப்ப யாராலும் முடியாது என கோலியே என்னிடம் சொல்லியிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், ‘தோனியின் புத்திசாலித்தனம் மட்டுமின்றி ஸ்டம்புகளுக்குப் பின்னால் வேகமான கைகளைக் கொண்டிருக்கும், சிறப்பாக செயல்படும் தோனியைப் போன்ற வீரர் இனி பிறந்துதான் வரவேண்டும்’ என கோலி நினைப்பதாக வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘என்னதான் இருந்தாலும் காலமும், தோனியின் விளையாட்டும்தான் அவர் எவ்வளவு காலம் அணியில் நீடிப்பார் என்பதை உணர்த்தும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.