கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய அவர், ‘நான் முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்சியை அணிவதாக உணர்கிறேன்’ என கூறியிருந்தார். ஆனால், அந்தக் கூற்றுக்கு சற்றும் சம்மந்தமில்லாத அளவிற்கு இருந்தது அவரது ஆட்டம்.
மூன்று டி20 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் ரெய்னா 89 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்டிரைக் ரேட் 153.44. தொடரை யார் வெல்லப்போவது என்பதைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் இக்கட்டான சூழலில் களமிறங்கிய ரெய்னா 27 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார்.
ரெய்னாவின் கம்பேக் ஆட்டங்கள் குறித்து அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்த்ரி, ‘ரெய்னா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் மற்றும் அந்த அனுபவம் என்ன செய்யும் என்பதை தென் ஆப்பிரிக்க தொடரில் காட்டியிருக்கிறார். அவரது பயமில்லாத் தனம்தான் எனக்கு அவரிடத்தில் பிடித்தது. ஒரு அணியில் கம்பேக் கொடுக்கும் வீரர், தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுவே களத்தில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், இனி அணியில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆட்டத்தை அவர் சர்வசாதாரணமாக வெளிப்படுத்தினார்’ என தெரிவித்துள்ளார்.