இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சில உலகநாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்களை அனுப்பி உதவி வருகின்றன. மேலும் சில நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளன.
அதேநேரத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ், கரோனா நிவாரணத்திற்காக 50 ஆயிரம் டாலர்களை "பி.எம் கேருக்கு"வழங்கினார். முக்கியமாக ஆக்சிஜன் வாங்குவதற்காக இந்த நிதியுதவியை அளித்ததாக அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ 41 லட்சம் மதிப்பிலான பிட்காயினை இந்தியாவிற்கு உதவியாக வழங்கினார்.
தற்போது இந்த பட்டியலில் மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் இணைந்துள்ளார். அவர் தனது ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பகுதியை, இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். "இந்தியாவில் தற்போதுள்ள நிலைமை மோசமானதாக உள்ளது. இந்தியாவில் விழிப்புணர்வை கொண்டுவரவும், இந்தியாவிற்கு நிதியுதவியை கொண்டுவரவும் எனது பங்கை செய்வேன்" என நிக்கோலஸ் பூரன் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடியையும், டெல்லி கேபிட்டல்ஸ் 1.50 கோடியையும் கரோனா நிவாரணத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.