டோக்கியோ ஒலிம்பிக்ஸில், காலிறுதிக்குக் கூட செல்லாது எனக் கூறப்பட்ட இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது. மகளிர் அணியின் இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா. மேலும், இந்த ஒலிம்பிக்கில் அவர் ஹாட்ரிக் கோல் அடித்ததின் மூலம், ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இதனையடுத்து வந்தனாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையே வந்தனாவை பாராட்டி, அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்ட்டின் மாநில அரசு, அவருக்கு 25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது.
இந்நிலையில், தற்போது உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வந்தனாவை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் தூதுவராக நியமித்துள்ளார். இதற்கு முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே, வந்தனாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.