“நான் அவரை மகேந்திர சிங் தோனியாக பார்க்கவில்லை” என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
16 ஆவது ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் இரு இடத்தைப் பிடித்துள்ள சென்னை குஜராத் அணி முதல் ப்ளே ஆஃப் போட்டியிலும் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ள அணிகளான லக்னோ - மும்பை அணி எலிமினேட்டர் போட்டியிலும் விளையாட உள்ளன. எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியுடன் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் தோற்ற அணி விளையாடும். எலிமினேட்டர் போட்டியில் தோற்ற அணி சுற்றில் இருந்து வெளியேறும்.
இன்று சென்னை - குஜராத் அணிகள் மோதும் முதல் ப்ளே ஆஃப் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அளித்துள்ள பேட்டியில், “தோனி சீரியஸான நபர் என்று அதிகமான மக்கள் நினைக்கின்றனர். நான் அவரை மகேந்திர சிங் தோனியாக பார்க்கவில்லை. நான் அவரிடம் இருந்து அதிகமான விஷயங்கள், நேர்மறை பண்புகள், அவரிடம் அதிகம் பேசாமல் அவரது செயல்பாடுகளிடம் இருந்தே பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை அவர் என் சகோதரர். நான் அவரை பகடி செய்கிறேன். நான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன்” எனக் கூறியுள்ளார்.