இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, 1 - 0 என்ற புள்ளியில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் (ஜூலை 20) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினார்கள்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இதில் ரோகித் சர்மா 80 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முந்தைய டெஸ்ட் தொடரில், இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து இரு டெஸ்ட் தொடர்களிலும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்துத் தந்த இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையை ரோகித் ஷர்மாவும், யஷஸ்வியும் பெற்றுள்ளனர்.
இதையடுத்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் களம் இறங்கினார்கள். மிகவும் எச்சரிக்கையாக ஆடிய விராட் கோலி தனது 21வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி தனது சதத்தை நிறைவு செய்வதற்குள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விராட் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் அவர் அடித்த முதல் சதம் இதுதான். மேலும், இது விராட் கோலியின் 500வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி சதம் அடித்த அதே ஓவரில் ஜடேஜாவும் 106 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
இந்திய அணியின் மொத்த ஸ்கோர் 341 ரன்களாக உயர்ந்த நிலையில், விராட் கோலி 206 பந்துகளுக்கு 121 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரரான அல்ஜாரி ஜோசப்பால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து அஜிங்க்யா ரஹானே களம் இறங்கினார். இவர் 8 ரன்கள் எடுத்த நிலையில், ஷனான் காப்ரியல் பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து இஷான் கிஷண் களம் இறங்கினார். தொடர்ந்து ஆடிய ஜடேஜா, 152 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்த நிலையில், கெமர் ரோச்சால் அவுட் ஆனார்.
இதையடுத்து, அஸ்வின் களம் இறங்கினார். 25 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷண், ஜேசன் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து வந்த ஜெயதேவ் உனத்கட் 7 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த முஹமது சிராஜ் 11 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஜொமெல் வாரிக்கன் வீசிய பந்தில் அவுட் ஆனார். இறுதியாக விளையாடிய அஸ்வின் அரை சதத்தை கடந்து 56 ரன்கள் எடுத்திருந்த போது, கெமர் ரோச் பந்தில் அவுட் ஆனார்.
இறுதியாக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் 1 பந்து மட்டுமே சந்தித்த நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் மற்றும் ஜொமெல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் மற்றும் டேஜெனரைன் சந்தர்பால் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 33 ரன்கள் எடுத்திருந்த சந்தர்பால், அஸ்வின் வீசிய பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த கிரிக் மெக்கென்சி 14 ரன்களுடனும், கிரேக் பிராத்வைட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்துள்ளது.