மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஹரியானா மாநிலத்திலும், கடந்த 2022ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,கடந்த 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் இன்று (31-01-24) வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை கடந்த 19ஆம் தேதி மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023இல் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்த கேலோ இந்தியா போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றோடு நிறைவு பெற்றன.
இந்த போட்டியில், 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஹரியானா மாநிலம், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 8ஆம் இடத்தை பெற்ற நிலையில், இந்தாண்டு 2ஆம் இடத்தை பெற்று தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது.
இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 26 போட்டிகள் இடம்பெற்றுள்ளது. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்களை பெற, சுமார் 6,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.