உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அட்டவணையை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ ஐபிஎல் தொடரை மார்ச் 27 ஆம் தேதியான ஞாயிற்றுகிழமையன்று தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் ஐபிஎல்-லை ஒருநாள் முன்னதாக சனிக்கிழமையே தொடங்கி, ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு போட்டிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாகவே ஏற்கனவே அணி உரிமையாளர்களிடம் உறுதியளித்தபடி பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் பிசிசிஐயால் தொடரின் அட்டவணையை வெளியிடமுடியவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே இந்தாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளிலும் மும்பையில் உள்ள வான்கடே மற்றும் பிரபோர்ன் மைதானங்களிலும், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மற்றும் ஜியோ மைதானங்களிலும், புனேவின் புறநகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்திலும் நடத்தவும், ஃப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.