இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.
வழக்கமாக விளையாடப்படும் பகல் நேர ஆட்டம் இல்லாமல், இது பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. 5 நாட்களும் பகலிரவாக நடைபெற உள்ள இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு வந்தாலும், இன்றைய போட்டியே இந்திய அணிக்கான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆகும்.
ஆரம்பத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயக்கம் காட்டினாலும், சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் ஆனதும், தற்போது பகலிரவு டெஸ்டில் இந்திய அணி கால்பதித்துள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.