இங்கிலாந்து; நடந்துவரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றது.
இந்த இரண்டாவது போட்டி மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமானார். மணிக்கு 95 மைல் வேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்துகள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்தது என்றே கூறலாம். இந்த போட்டியில் அவர் வீசிய ஒரு பவுன்சர் பந்தில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் கழுத்தில் அடிபட்டு மைதானத்திலேயே சரிந்தார். அவருக்கு பதிலாக மாற்றுவீரராக களமிறக்கப்பட்ட லாபுசாங்கேவும் பவுன்ஸரில் அடிவாங்கினார்.
இந்த போட்டி டிரா ஆன நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் அர்ச்சரின் பந்துவீச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், "ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சிலும், பவுன்ஸரிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பார்த்தது ஒரு பகுதிதான். இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னும் ஆக்ரோஷமாக, ஆவேசமாக வரும் பவுன்ஸர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள வேண்டும். யாரும் களத்தில் நிலைத்து நின்று ஆட முடியாது.
எங்களின் பந்துவீச்சு தாக்குதலில் மற்றொரு பரிமாணத்தை ஆர்ச்சர் வெளிப்படுத்துகிறார். முதல் இன்னிங்ஸில் அவர் வீசிய 29 ஓவர்களில், கடைசியாக வீசிய 8 ஓவர்கள் அவரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. நான் கிரிக்கெட் விளையாட வந்ததில் இருந்து இதுபோன்ற பந்துவீச்சை பார்த்தது இல்லை" என தெரிவித்துள்ளார்.