ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தற்போது பகலிரவு கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகிறது. இந்தியா மகளிர் அணி விளையாடும் முதல் பகலிரவு போட்டியான இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வெர்மாவும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஷபாலி வெர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி முதல்நாளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தநிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (01.10.2021) தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, சதமடித்து அசத்தினார். இதன்மூலம் பகலிரவு ஆட்டத்தில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்தியா வீராங்கனை ஆகிய சாதனைகளை ஸ்மிருதி மந்தனா நிகழ்த்தினார்.
இதன்பின்னரும் சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பூனம் ரவுத் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்காதபோதும் பூனம் ரவுத் மைதானத்தைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பூனம் ரவுத்தை தொடர்ந்து யஸ்திகா பாடியா 19 ரன்களிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தற்போது ஐந்து விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஆட்டம் மோசமான வானிலையாலும், மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.