இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் மட்டும் 37 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 29 ரன்களை எடுத்து வெளியேற இறுதியில் கைகோர்த்த அக்ஸர் படேல் மற்றும் தீபக் ஹூடா இணை அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. இதில் ஹூடா 41 ரன்களும் அக்ஸர் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்திருந்தது.
163 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் மண்டீஸ் 28 ரன்களை சேர்த்து வெளியேற பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கேப்டன் சனகா மட்டும் 45 ரன்களை எடுத்து ஆறுதல் தந்தார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
சிறப்பாகப் பந்து வீசிய இந்திய அணியின் அறிமுக ஆட்டக்காரர் சிவம் மாவி 4 விக்கெட்களை வீழ்த்தினார். உம்ரான் மாலிக் 2 விக்கெட்களும் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக தீபக் ஹூடா தேர்வு செய்யப்பட்டார்.