இந்திய கேப்டன் விராத் கோலியின் செயல்பாடுகள் களத்தில் முதிர்ச்சியற்ற தன்மையில் இருக்கிறது என தென் ஆப்பிரிக்கா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 5-ஆம் தேதி சவுதாம்ப்டன் நகரில் மோதவுள்ளன. மற்ற அணிகள் ஒன்று, இரண்டு போட்டிகள் விளையாடிய நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
“நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியின் போது எனது பந்தில் கோலி அடித்த பவுண்டரிக்காக என் மீது மோதி விட்டு ஒரு வார்த்தையை கூறிச் சென்றார். அதே பதிலை அவருக்கு நான் திருப்பிக்கூறும் போது, அவர் கோபமடைந்து விட்டார்” என்று ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலியுடன் விளையாடிய அனுபவம் பற்றி ரபாடா தெரிவித்துள்ளார்.
“கோலி களத்தில் விளையாடும்பொழுது யார் மீதேனும் கோபப்படுவார். ஆனால் எதிரேயுள்ள நபர் பதிலுக்கு அதே கோபத்தினை வெளிப்படுத்தினால் அதனை கோலியால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவரை புரிந்து கொள்வது கடினம். அவர் மிகச்சிறந்த வீரர். ஆனால் அவரது அணுகுமுறை அவர் முதிர்ச்சியற்றவர் என எடுத்து காட்டுகிறது” என்று ரபாடா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ரபாடாவின் 13 பந்துகளை சந்தித்த கோலி ஒரு பவுண்டரி உட்பட 12 ரன்கள் எடுத்து ஒரு முறை அவுட் ஆகியுள்ளார். இதுவரை இருவரும் ஒருநாள் போட்டிகளில் 12 முறை சந்தித்துள்ளனர். இதில் 2 முறை கோலியின் விக்கெட்டை எடுத்துள்ளார் ரபாடா.
5 டெஸ்ட் போட்டிகளில் இரு முறை கோலியை வீழ்த்தியுள்ளார் ரபாடா. 2017-18-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரபாடாவின் 147 பந்துகளை சந்தித்து 93 ரன்கள் விளாசினார் கோலி. சர்வதேச டி20 போட்டிகளில் இருமுறை சந்தித்து கோலி ஒரு முறை கூட ரபாடாவிடம் அவுட் ஆகவில்லை.
இதுவரை கோலி தென் ஆப்பிரிக்கா அணியுடன் 26 போட்டிகளில் விளையாடி 1269 ரன்கள், பேட்டிங் சராசரி 66.79. இதில் 5 முறை ஆட்டமிழக்கவில்லை. இதில் இரு முறை மட்டுமே ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆகியுள்ளார். மற்ற போட்டிகளில் ஃபாஸ்ட் பவுலர்களிடம் வீழ்ந்தார். கடைசியாக 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 558 ரன்கள் விளாசினார் கோலி. பேட்டிங் சராசரி 186 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரு முறை ஃபாஸ்ட் பவுலிங்கில் அவுட் ஆனார். 3 முறை இந்த தொடரில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பவுலிங் மூலம் பல சர்ச்சைகளுக்கு பிறகு இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த ஆர்ச்சர் கோலியை பற்றிக்கூறும் போது “ஐபிஎல் தொடரில் லெக் ஸ்பின்னரிடம் அவுட் ஆகிக்கொண்டே இருந்தார். அதனால் அவரை அவுட் செய்வதற்க்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உலகக்கோப்பை தொடரில் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார். விராத் கோலி, டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆபத்தான பேட்ஸ்மேன்கள். இவர்கள் ஆட்டத்தின் போக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடியவர்கள் என்று ஆர்ச்சர் கூறியுள்ளார்.
“ஆர்ச்சர் என் விக்கெட்டை கைப்பற்றுவேன் என கூறியது பற்றி கவலைப்பட மாட்டேன். இது போன்ற கருத்துகளை நான் கண்டு கொள்வதில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பங்கு வகிப்பார்” என ஆர்ச்சர் பற்றி விராத் கோலி குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் அதன் சொந்த மண்ணில் 2018-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்து பேட்டிங் சராசரி 64 வைத்திருந்தார் கோலி. இந்த தொடரில் 3 முறையும் ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆகினார் கோலி. 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் 5 போட்டிகளில் 258 ரன்கள் எடுத்தார். பேட்டிங் சராசரி 129. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இரண்டு முறை ஃபாஸ்ட் பவுலிங்கில் அவுட் ஆனார் கோலி. 3 முறை ஆட்டமிழக்காமல் இருந்தார்.