ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் தோனியைப் பற்றியும், அவரது அணித்தலைமை குறித்தும் மனம் திறந்துளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில தினங்களுக்கு முன்னால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் மூத்த வீரர்கள் பலர் தோனி உடனான தங்கள் அனுபவத்தையும், அவரது தனித்த திறமையைப் பற்றியும் பல்வேறு தளங்களில் பேசியும், எழுதியும் வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங், தோனி குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "ஒரு அணித்தலைவருக்கான முக்கியப் பண்பு தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்று நினைக்கிறேன். தோனி அதில் சிறந்தவர். நானும் அது போல களத்தில் என்னுடைய உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க கடினமாக முயற்சித்து இருக்கிறேன். ஆனால், என்னால் அது முடியவில்லை. தோனி அணித்தலைமையை ஏற்ற பின்பு இந்திய அணி மிகவும் எழுச்சி பெற்றது. ஒரு வீரரிடம் சிறந்தது என்ன என்பதும், அதை எப்படி வெளிக்கொண்டுவர முடியும் என்பதும் அவருக்கு நன்கு தெரியும். உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் தோனியைப் பற்றியும், அவர் களத்தில் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றியும் பேசுகிறார்கள்" எனக் கூறினார்.
தோனி, ரிக்கிபாண்டிங் இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் எப்போதும் சமூக வலைத்தளங்களில் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். தற்போது ரிக்கிபாண்டிங்கே இந்தக் கருத்தைக் கூறியதும் தோனி ரசிகர்கள் இதை வெகுவாகப் பகிர்ந்து வருகின்றனர்.